டெல்லியை ஆட்டுவிக்கும் டின்னர் சென்டிமென்ட்… ஸ்டாலினின் தேசிய அளவிலான கணக்கு பலிக்குமா?

“தேசிய அளவில் பா.ஜ.க-வை எதிர்க்கும் கட்சிகள் எல்லாம் ஓர் அணியில் திரளவேண்டும். தமிழ்நாட்டில் தி.மு.க-வுடன் காங்கிரஸ் கட்சி இருப்பதைப் போன்று அகில இந்திய அளவில் கொள்கை அளவிலான கூட்டணியை காங்கிரஸ் கட்சி வலுப்படுத்த வேண்டும்” என்று தலைநகர் டெல்லியிலிருந்து ஸ்டாலின் வெளியிட்ட கருத்துக்கள் தேசிய அளவில் கவனத்தைப் பெற்றன.

முதல்வர் ஸ்டாலின்

ஒரே நாடு, ஒரே தேர்தல் என்கிற கோஷத்தை பா.ஜ.க முன்னிறுத்திவரும் நிலையில், மாநில கட்சிகளுக்கான அதிகார வரம்புகளையும் எதிர்காலத்தில் பாஜக காலிசெய்துவிடும் என்கிற அச்சம் பல மாநில கட்சிகளிடம் எழுந்துள்ளது. மேலும் பா.ஜ.க-வின் தொடர் வெற்றியாலும், தேசிய அளவில் பா.ஜ.க-வுக்கு மாற்றாக இருக்கவேண்டிய காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் சரிவினாலும் ஏற்பட்டுள்ள நெருக்கடியைத் தொடர்ந்து மாநில அளவிலான கட்சிகள் தற்போது தேசிய அரசியல் பக்கம் தங்கள் பார்வையைத் திருப்பியுள்ளன.

அந்த வகையில் தி.மு.க-வும் தேசிய அரசியல் களத்தில் தங்கள் பார்வையைத் திருப்பியுள்ளது.

கடந்த மாதம் நடந்த ஸ்டாலினின் சுயசரிதை புத்தக வெளியீட்டு விழாவிலேயே ராகுல் காந்தியின் முன்னிலையில், “காங்கிரஸ் கட்சி மாநில கட்சிகளையும் ஒன்றிணைத்து வலுவான கூட்டணியை முன்னெடுக்க வேண்டும்” என்று பேசியிருந்தார் ஸ்டாலின். அதே போல் ராஷ்டிரியா ஜனதா தளத்தின் தலைவராக உள்ள தேஜஸ்வி யாதவும் காங்கிரஸ் கட்சி, பா.ஜ.க அல்லாத கட்சிகளை ஒருங்கிணைத்து செல்லவேண்டும் என்று சொல்ல, அதை ராகுலும் கவனத்துடன் கேட்டுக்கொண்டார். இந்நிலையில்தான் டெல்லியில் உள்ள தி.மு.க அலுவலகத் திறப்பு விழாவை முன்வைத்து எதிர்கட்சிகளை ஒன்றிணைக்க தி.மு,க தலைமை முடிவெடுத்தது.

பினராய் விஜயன், ஸ்டாலின், ராகுல் காந்தி

திறப்பு விழாவிற்கு தி.மு.க தலைமை எதிர்பார்த்தது போல சோனியாவுடன், அகிலேஷ் யாதவ், உமர் அப்துல்லா உள்ளிட்டவர்கள் வந்துவிட்டார்கள். அதேபோல் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் அந்தக் கட்சியின் மூத்த எம்.பி, ராஷ்டிரிய ஜனதா தளத்தின் சார்பில் நாடாளுமன்ற குழுத் தலைவர் உள்ளிட்டவர்கள் திறப்பு விழாவில் கலந்துக்கொண்டனர். ராகுல் காந்தி கலந்துகொள்ளாமல் போனதுதான் தி.மு.க-வுக்கு கொஞ்சம் ஷாக்கைக் கொடுத்தது.

டெல்லி அரசியல் களத்தில் பல்வேறு மாற்றங்களைக் கடந்த காலங்களில் நிகழ்த்தியதில் முக்கிய பங்கு டீ பார்ட்டி மற்றும் டின்னர் பார்ட்டிளுக்கு உண்டு. அந்த வகையில் கடந்த 2-ம் தேதி அன்று தி,மு.க அலுவலகத் திறப்பு விழாவிற்குப் பிறகு நடந்த டின்னர்தான் பா.ஜ.க-வுக்கு எதிரான அணி அமைவதற்கு மூலக்காரணமாக மாறியுள்ளது. ஏற்கெனவே திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும், காங்கிரஸ் கட்சிக்கு ஏழாம் பொருத்தமாக இருந்தது. ஆனால் ஐந்து மாநில தேர்தல் முடிவுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சியுடன் தேவைப்பட்டால் இணைந்து செயல்பட தயார் என மம்தா இறங்கி வந்துவிட்டார்.

ஸ்டாலின், சோனியா, அகிலேஷ்

உத்திரபிரதேச தேர்தலில் அகிலேஷ்யாதவின் சமாஜ்வாடி கட்சி அடைந்த தோல்விக்கு காங்கிரஸ் கட்சியுடன் கரம் கோர்க்காமல்போனதும் ஒரு காரணம் என்கிற நிலையில் தி.மு.க அளித்த டின்னர், சோனியாவும் அகிலேஷும் பேசுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுத்தது.

காங்கிரஸ் கட்சி செய்யவேண்டிய வேலைகள் குறித்து சோனியாவிடம் டின்னரில் கலந்துக்கொண்ட தலைவர்கள் சொல்லியிருக்கிறார்கள். அப்போது தி.மு.க தலைவர் ஸ்டாலின் “ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள மாநிலக்கட்சிகளை காங்கிரஸ் தலைமை அணுசரித்து செல்லவேண்டும்” என்று சொல்ல, அதை சோனியாவும் ஆமோதித்துள்ளார். இதுபோன்ற அரசியல் தலைவர்களுடன் சோனியா காந்தி சந்திப்புகளை நடத்தி நீண்ட காலம் கடந்துவிட்ட நிலையில், தி.மு.க மூலம் இதற்கு ஓருவாய்ப்பு ஏற்பட அதை சோனியாவும் கச்சிதமாகப் பயன்படுத்திக்கொண்டுள்ளார்.

சோனியா, ராகுல் காந்தியுடன் ஸ்டாலின்

இந்த டின்னர் முடிந்த பிறகு தி.மு.க தரப்பில் விரைவில் தேசிய அளவில் பா.ஜ.க எதிர்ப்பு அணிகளின் தலைவர்கள் கலந்துகொள்ளும் ஒரு கூட்டத்தை வேறு மாநிலத்தில் நடத்தலாம் என்று சொல்ல, மேற்கு வங்கத்திலேயே நடத்தலாம் என்று திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி சொல்லியுள்ளார். அதேபோல் தேசிய அளவில் காங்கிரஸ் இல்லாமல் ஓர் அணியை பா.ஜ.க-வுக்கு எதிராகக் கட்டமைக்க முடியாது என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் பேசியிருக்கிறார். இப்படி காங்கிரஸ் கட்சிக்கு அணுகூலமாக தேசிய அளவில் அரசியல் கட்சிகள் திரும்புவதை தி.மு.க வின் முயற்சிக்குக் கிடைக்கும் அங்கிகாரமாகவே பார்க்கிறது தி.மு.க தலைமை. விரைவில் கேரளாவில் நடக்க உள்ள மார்சிஸ்ட் கட்சி தேசிய மாநாட்டில் ஸ்டாலின் கலந்து கொள்ள உள்ளார். அதன் மூலம் இடதுசாரிகளையும் இந்த அணிக்குள் கொண்டுவரும் அரசியலை அவர் ஆட இருக்கிறார்.

டெல்லியில் டின்னர் கொடுத்தால் திருப்புமுனையை ஏற்படுத்தலாம் என்கிற கணக்கை தி.மு.க-வும் கையில் எடுத்துள்ளது. இது மாற்றங்களைக் கொடுக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.