முன்னாள் மனைவிக்கு எதிராக இசையமைப்பாளர் இமான் வழக்கு

சென்னை : குழந்தைகளுக்கு புதிய பாஸ்போர்ட் பெற தவறான தகவலை அளித்ததற்காக முன்னாள் மனைவிக்கு எதிராக நடவடிக்கை கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், இசையமைப்பாளர் இமான் மனு தாக்கல் செய்துள்ளார். மனுவுக்கு பதில் அளிக்க, முன்னாள் மனைவிக்கு 'நோட்டீஸ்' அனுப்ப, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிரபல இசையமைப்பாளர் இமான், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு: எனக்கும், மோனிகா என்பவருக்கும், 2008ல் திருமணம் நடந்தது. இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக, இருவரும் பரஸ்பர விவாகரத்து பெற்றோம். அதன்பின், என் குழந்தைகளை பார்க்க அனுமதிக்கவில்லை.

குழந்தைகளின் 'பாஸ்போர்ட்' என்னிடம் உள்ளது. குழந்தைகளின் பாஸ்போர்ட் தொலைந்து விட்டதாக, 2021 நவம்பரில், பாஸ்போர்ட் அலுவலகத்தில் இருந்து தகவல் வந்தது. உடனடியாக, பாஸ்போர்ட் என்னிடம் இருப்பதாக, தகவல் தெரிவித்தேன். நான், குழந்தைகளை பார்க்கக் கூடாது என்பதற்காக, அவர்களுக்கு புதிதாக பாஸ்போர்ட் எடுத்து, வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்ல, தவறான தகவலை மோனிகா அளித்துள்ளார்.

புதிய பாஸ்போர்ட் பெறுவதை தடுக்க முயற்சித்தும், சட்டவிரோதமாக பெற்று விட்டார். புதிய பாஸ்போர்ட்டை ரத்து செய்யக் கோரி, மண்டல அதிகாரிக்கு புகார் அனுப்பினேன்; எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தவறான தகவலை அளித்ததற்காக, மோனிகாவுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கவில்லை.

ஆட்சேபனை தெரிவித்தும், புதிதாக பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளது. குழந்தைகளை வெளிநாட்டுக்கு அழைத்து செல்வதால், அவர்களை பார்ப்பதற்கான உரிமையிலும் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, பாஸ்போர்ட் சட்டப்படி, மோனிகாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனு, நீதிபதி அனிதா சுமந்த் முன், விசாரணைக்கு வந்தது. மனுவுக்கு பதில் அளிக்க, பாஸ்போர்ட் அதிகாரி மற்றும் மோனிகாவுக்கு 'நோட்டீஸ்' அனுப்ப, நீதிபதி உத்தரவிட்டார். விசாரணையை, ஜூன் 9க்கு தள்ளிவைத்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.