ராகுல் காந்திக்கு ரூ.50 லட்சம் சொத்தை எழுதி வைத்த மூதாட்டி

டேராடூன்:

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் வசித்து வருபவர் புஷ்பா. 79 வயதாகும் இவர் குடும்பத்தினர் யாரும் இன்றி தனியாக சுற்றி வருகிறார்.

டேராடூனில் உள்ள பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணிபுரிந்து ஓய்வுபெற்ற இவர் வங்கிகளில் 16 வங்கி கணக்குகளில் பணம் சேமித்து வைத்துள்ளார். நல்ல வசதியான சொந்த வீட்டிலும் வசித்து வருகிறார்.

திருமணம் செய்து கொள்ளாத அவர் காங்கிரஸ் மீது மிகுந்த பற்று கொண்டவர். அவருக்கு டேராடூனில் ரூ.50 லட்சம் மதிப்புள்ள வீடு மற்றும் வங்கி கணக்குகளில் பணம் உள்ளது.

தனது மரணத்திற்கு பிறகு தனது சொத்துக்கள் அனைத்தையும் யாருக்கு கொடுப்பது என்பது பற்றி அவர் ஆலோசனை செய்து வந்தார். அப்போது ராகுல்காந்திக்கு அந்த சொத்துக்களை கொடுத்துவிடலாம் என்று தீர்மானித்தார்.

அதன்படி அவர் நேற்று டேராடூனில் உள்ள நீதிமன்றத்துக்கு சென்றார். அங்கு தனது பெயரில் உள்ள சொத்துக்களை தனது மரணத்திற்கு பிறகு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்கு வழங்க வேண்டும் என்று பத்திரம் எழுதி கொடுத்தார்.

அந்த பத்திரம் ஆவணமாக பதிவு செய்யப்பட்டது. இது குறித்து புஷ்பா கூறியதாவது:-

இந்த நாட்டின் ஒற்றுமை மற்றும் வளர்ச்சிக்காக இந்திரா காந்தியும், ராஜீவ்காந்தியும் தங்கள் உயிரையே கொடுத்து தியாகம் செய்தனர். அவர்கள் வழியில் சோனியாவும், ராகுலும் நாட்டுக்காக சேவை செய்து வருகிறார்கள்.

அவர்களின் அர்ப்பணிப்பு என்னை மிகவும் கவர்ந்தது. எனவே எனது சொத்துக்களை ராகுல் காந்திக்கு வழங்குகிறேன்.

இவ்வாறு புஷ்பா கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.