திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவிலில் 14-ந்தேதி குருப்பெயர்ச்சி விழா

தஞ்சை மாவட்டம் திட்டை கிராமத்தில் அமைந்துள்ளது வசிஷ்டேஸ்வரர் கோவில். இங்கு தனி சன்னதியில் எழுந்தருளியுள்ள குருபகவானுக்கு வருடம் தோறும் குருப்பெயர்ச்சி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு குருபகவான் வரும் 14-ந்தேதி கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பிரவேசிக்க இருக்கிறார். இந்த குருப்பெயர்ச்சியை முன்னிட்டு 12 ராசிக்காரர்களும் பலன் பெற வேண்டி லட்ச்சார்ச்சனை மற்றும் பரிகார ஹோமங்கள் திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவிலில் நடைபெற உள்ளது.

கைலாசம், கேதாரம், காசி, ஸ்ரீசைலம், காஞ்சி, சிதம்பரம் போன்ற சுயம்பு ஸ்தலங்களின் வரிசையில் 22-வது சுயம்புத்தலமாக விளங்குவது திட்டை. இங்கு இறைவன் தானாக தோன்றியதால் தான் தோன்றீஸ்வரர் என அழைக்கப்பட்டார். வசிஷ்டர் இங்கு வந்து தவம் புரிந்து பிரம்ம ஞானிகளில் தலை சிறந்தவர் ஆனார். அதனால் இத்தல இறைவன் வசிஷ்டேஸ்வரர் என அழைக்கப்பட்டார்.

இக்கோவில் மூலவர் வசிஷ்டேஸ்வரர் சன்னதியின் விமானத்தில் சந்திர காந்தக்கல் வைத்துக் கட்டப்பட்டுள்ளது. இக்கற்கள் காற்றில் இருந்து ஈரப்பதத்தை தம்முள் ஈர்த்து வேதி வினை ஏற்பட்டு 24 நிமிடங்களுக்கு ஒரு சொட்டு நீரை சுவாமியின் மீது சொட்டுகிறது. ‘இத்தகைய அமைப்பு வேறு எந்த சிவாலயத்திலும் காண முடியாது.

நவக்கிரங்களில் மகத்தான சுபபலம் பெற்றவர். ஒருவரது ஜாதகத்தில் மிகக்கடுமையான பாவக்கிரகங்களால் ஏற்படக்கூடிய விளைவுகளை கூட தனது பார்வை பலத்தினால் கட்டுப்படுத்தும் சக்தி குரு பகவானுக்கு உண்டு. எனவே குரு பார்க்க கோடி நன்மை என்ற பழமொழி உண்டானது. குருப்பெயர்ச்சி நடைபெறும் நாளிலிருந்து 15 நாட்களுக்குள் குருபகவானை வழிபடுவது அவசியம்.

எல்லா சிவாலயங்களிலும் தென்கோஷ்டத்தில் சிவபெருமானின் ஞான வடிவான ஸ்ரீ தட்சிணாமூர்த்தியே குருவாகப் பாவித்து வழிபடப்படுகிறார். ஆனால் திட்டை, வசிஷ்டேஸ்வரர் கோவிலில் நவக்கிரக குரு பகவானே சுவாமிக்கும், அம்பாளுக்கும் இடையில் தனி சந்நிதியில் தனி விமானத்துடன் ராஜ குருவாக நின்ற கோலத்தில் அருள்பாலித்து வருகிறார்.

இத்தகைய அமைப்பு உலகில் வேறு எந்த ஒரு சிவாலயத்திலும் இல்லை. ஒருவருடைய ஜென்ம ராசியில் இருந்து 3,5,7,9,12 ஆகிய இடங்களில் சஞ்சாரம் செய்யும் போது குருபகவான் நற்பலன்களை அளிப்பார் என்பது பொது விதி.

அதன்படி இந்த குருப்பெயர்ச்சியின் போது ரிஷப ராசி, கடகராசி, கன்னி ராசி, விருச்சிக ராசி, கும்ப ராசிக்கும் நற்பலன்களை வழங்குவார். ஜென்மராசியான 1-ம் இடம் மற்றும் 2,4,6,8,10,11 ஆகிய இடங்களில் குருபகவானின் சஞ்சாரம் நற்பலன்களை அளிக்காது என்பது பொது விதியாகும்.

அதன்படி மீன ராசி, மேஷம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, மகர ராசிக்காரர்கள் பரிகாரம் செய்து கொள்வது அவசியம். இந்த குருப்பெயர்ச்சியை முன்னிட்டு பரிகாரம் செய்துக் கொள்ள வேண்டியவர்களுக்காக திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவிலில் 24.4.22 அன்று ஏகதின லட்ச்சார்ச்சனை நடைபெறும். இதற்கு கட்டணம் ரூ.300.

இந்த குருப்பெயர்ச்சியை முன்னிட்டு 29.4.22 – 30.4.22 ஆகிய 2 நாட்கள் மட்டும் பரிகார ஹோமம் வேத விற்பனர்கள் தலைமையில் நடைபெற உள்ளன. இந்த ஹோமங்களில் நேரில் பங்கு கொள்ளும் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட முறையில் சங்கல்பம் செய்து அர்ச்சனை செய்து பரிகாரம் செய்யப்படும். இதற்கு கட்டணம் ரூ.500.

லட்ச்சார்ச்சனை மற்றும் குருபரிகார ஹோமங்கள் நடைபெறும் நாட்களில் நேரில் வருபவர்கள் உரிய கட்டணத்தை செலுத்தி அவற்றில் பங்கு கொள்ளலாம். நேரில் வர முடியாதவர்கள் லட்ச்சார்ச்சனைக்கு ரூ.300 மற்றும் ஹோமத்திற்கு ரூ.500- மணியார்டர் அல்லது டிமாண்ட் டிராப்ட்-ஐ தங்கள் பெயர், ராசி, நட்சத்திரம் ஆகியவற்றை தங்களின் சரியான முகவரியுடன் 28.4.22-க்குள் கிடைக்கும் வகையில் அனுப்பினால் அவர்களுக்கு அர்ச்சனை, சங்கல்பம் செய்து தபால் மூலம் பிரசாதம் அனுப்பி வைக்கப்படும்.

மேலும் பிரசாதத்துடன் பூஜையில் வைத்த குருபகவான் உருவம் பொறித்த 2 கிராம் வெள்ளி டாலர் மற்றும் குருபகவான் படம் அனுப்பி வைக்கப்படும். மணியார்டர் மற்றும் டிமாண்ட் டிராப்ட் அனுப்புபவர்கள்,

நிர்வாக அதிகாரி, வசிஷ்டேஸ்வரர் கோயில், திட்டை – 613 003. தஞ்சாவூர் மாவட்டம். தொடர்புக்கு : 8870703349, 7373622817என்ற முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு செயல் அலுவலர் மா.தனலெட்சுமி தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.