போலீஸ் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற ஆட்டோ-தானாக வந்து சிக்கிய ‘ஓட்டுநர்’ -நடந்தது என்ன?

வாகன சோதனையில் உதவி ஆய்வாளரை ஆட்டோவில் மோதி விட்டு நிற்காமல் சென்ற சம்பவத்தில் தானாக வந்து சிக்கிக்கொண்ட ஆட்டோ ஓட்டுநரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை நந்தம்பாக்கம் காவல் நிலைய சட்டம் ஒழுங்கு உதவி ஆய்வாளரான பொன்ராஜ் கடந்த 3ஆம் தேதி இரவு நந்தம்பாக்கத்தில் மவுண்ட்- பூந்தமல்லி சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோ ஒன்றை நிறுத்தி சோதனையிட முயன்றபோது வேகமாக வந்த அந்த ஆட்டோ, உதவி ஆய்வாளர் பொன்ராஜை இடித்துத் தள்ளிவிட்டு நிற்காமல் சென்றது. ஆட்டோ மோதியதில் கை, கழுத்து மற்றும் தலைப் பகுதிகளில் காயங்கள் ஏற்பட்ட உதவி ஆய்வாளர் பொன்ராஜ் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வீடு திரும்பினார்.
இந்நிலையில் உதவி ஆய்வாளரை மோதிவிட்டு நிற்காமல் சென்றது தொடர்பான பதைபதைக்கும் சிசிடிவி காட்சி வெளியானது. ஆட்டோ ஓட்டுநர் யார் என்பது குறித்து சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வுசெய்து நந்தம்பாக்கம் போலீசார் மற்றும் மவுண்ட் போக்குவரத்து புலனாய்வு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் உதவி ஆய்வாளர் பொன்ராஜை மோதிச்சென்ற ஆட்டோவின் வாகன எண் தெளிவாக இல்லாததால் கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டது.
image
இந்நிலையில் போரூர் லட்சுமி நகர் விரிவாக்கம், முதல் பிரதான சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்துவரும் 65 வயதான முதியவர் சுதர்சனம் தான் ஆட்டோவை ஓட்டி நிற்காமல் சென்றவர் என்பது தெரியவந்தது. அதனடிப்படையில் முதியவர் சுதர்சனத்தை அவரது வீட்டில் வைத்து கைதுசெய்தனர்.
இந்த ஆட்டோ ஓட்டுநர் சிக்கியது எப்படி? என்ற சுவாரஸ்ய தகவல் வெளியாகி உள்ளது. ஆட்டோ ஓட்டுநரை கண்டுபிடிப்பதில் மிகவும் சிரமத்தில் இருந்தது காவல்துறை. இந்நிலையில் நந்தம்பாக்கம் காவல் நிலையத்திற்கு விபத்தை ஏற்படுத்திய ஆட்டோ ஓட்டுநரின் உறவினர் ஒருவர் தொடர்புகொண்டு படுகாயமடைந்த காவல் உதவி ஆய்வாளருக்கு சிகிச்சைக்காக நிதி உதவி செய்வதாக கூறியுள்ளார்.
image
இதுகுறித்து நந்தம்பாக்கம் காவல் நிலையத்திலிருந்து பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தொடர்புகொண்ட நபருடன் பேசிய பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், அவரை வைத்தே ஆட்டோ ஓட்டுநர் இருக்கும் இடத்தைக் கண்டறிந்து அவரைக் கைது செய்துள்ளனர். கைதான ஆட்டோ ஓட்டுநர் சுதர்சனம் கேன்சர் நோயால் அவதிப்பட்டு வருவதும், கட்டுபாட்டு இல்லாமல் ஆட்டோ சென்றதால் விபத்து ஏற்பட்டதாகவும், போலீஸ் மீது ஆட்டோ மோதிவிட்டதால் பயத்தில் ஓடி விட்டதாகவும் சுதர்சனம் வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
image
இந்நிலையில் படுகாயமடைந்த காவல் உதவி ஆய்வாளர் பொன்ராஜை விருகம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநரும், டிஜிபியுமான சைலேந்திரபாபு இன்று காலை சந்தித்து பேசினார். உடல்நலம் விசாரித்து ஆறுதல் கூறினார். மேலும் தேவையான அனைத்து மருத்துவ உதவியையும் காவல்துறை செய்துதரும் என்றும் டிஜிபி சைலேந்திரபாபு உறுதியளித்துள்ளார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.