‘காவல்நிலையத்தில் அலறல் சத்தம் கேட்டது’: ஜெயராஜ் – பென்னிக்ஸ் வழக்கில் பரபரப்பு சாட்சியம்

சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை வழக்கில், காவல்நிலையத்தில் இருந்து இரத்தத்துடன் ஜெயராஜ் – பென்னிக்ஸ் வெளியில் வந்ததாக முன்னாள் ஆய்வாளர் ஸ்ரீதரின் ஓட்டுநரான தலைமைக்காவலர் ஜெயசேகர் சாட்சியம் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வணிகர்களான தந்தை, மகனான ஜெயராஜ் – பென்னிக்கிஸ், கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் 19-ம் தேதி காவல்துறை விசாரணைக்கு அழைத்துசெல்லப்பட்ட நிலையில், விசாரணையின் போது காவல்துறையினர் தாக்கியதில் இருவரும் உயிரிழந்ததாக சர்ச்சை வெடித்தது.
இதையடுத்து தந்தை, மகன் உயிரிழந்தது தொடர்பாக எழுந்த குற்றச்சாட்டின் கீழ் தொடரடப்பட்ட வழக்கில், சாத்தான்குளம் காவல்நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் உள்ளிட்ட 9 பேரின் மீது சிபிஐ தரப்பில் குற்றபத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. 
image
இந்நிலையில், இந்த வழக்கு விசாரணையானது, இன்று மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில், நீதிபதி பத்மநாபன் முன்பாக விசாரணைக்கு வந்தபோது, வழக்கின் சாட்சியாக முன்னாள் காவல் ஆய்வாளர் ஸ்ரீதரின் ஓட்டுநரான தலைமைக்காவலர் ஜெயசேகர் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். 
முன்னாள் ஆய்வாளர் ஸ்ரீதர் பணியின்போது, “போலீஸை பகைச்சிகிட்டா எவனும் வெளியே போகக்கூடாது மற்றும் அவர்களை அடிக்க வேண்டும்” என்று கூறியதாகவும், தான் காவல்துறை வாகனத்தின் அருகே நின்றுகொண்டிருந்தபோது, தொடந்து காவல்நிலையத்தில் உள்புறத்தில் இருந்து கதறல் சத்தம் கேட்டதாகவும், இதனையடுத்து மறுநாள் காலை பார்க்கும் போது ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் இருவரின் உடல் மற்றும் ஆடையின் இதர பகுதியில் இரத்தம் இருந்தாகவும் பரபரப்பு சாட்சியம் அளித்துள்ளார்.
இதனையடுத்து இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை 18-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார். இதனிடையே ஜாமீன் வழங்கக்கோரி முன்னாள் ஆய்வாளர் ஸ்ரீதர் தொடர்ந்து ஜாமீன் மனுவையும் நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.