சென்னையில் உங்கள் பகுதிக்கு சொத்து வரி எவ்வளவு தெரியுமா? 5 மண்டலங்களுக்கு சொத்து வரி அறிவிப்பு

தமிழக அரசு, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் சொத்து வரியை உயர்த்தி அறிவித்தது. திமுக அரசின் சொத்து வரி உயர்வைக் கண்டித்து எதிர்க்கட்சிகளான அதிமுக, பாஜக போராட்டங்களை நடத்தி வருகின்றன.

சொத்து வரி உயர்வு குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சட்டப்பெரவையில் பேசுகையில், சொத்து வரி சீராய்வு என்பது மனமுவந்து செய்யப்பட்ட ஒன்றல்ல. உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதியைப் பெறுவதற்கு ஒன்றிய அரசு விதித்த நிபந்தனையின் பேரில்தான் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதிலும் 83% ஏழை எளிய மக்களைப் பெரிய அளவில் பாதிக்காத வகையில் கவனத்துடன் இது செய்யப்பட்டுள்ளது என்று கூறினார்.

சொத்து வரி உயர்வு குறித்து மக்களுக்கு சந்தேகங்கள் இருந்த நிலையில், சென்னை மக்கள் நன்கு புரிந்து கொள்ள உதவும் வகையில், சென்னை மாநகராட்சி 5 மண்டலங்களுக்கான சொத்து வரியை, தோராயமான உயர்வை வெளியிட்டுள்ளது.

அதன்படி, 1,201 சதுர அடி முதல் 1,800 சதுர அடி வரையிலான வீட்டில் வசிக்கும் அடையாறு குடியிருப்பாளர், அரையாண்டு சொத்து வரியாக ரூ.1461 செலுத்தி வந்திருந்தால், இனி அவர்கள் அதிகபட்சமாக ரூ.2,922 வரி செலுத்த வேண்டும்.

சென்னையில் அதே அடையாறு மண்டலத்தில் 600 சதுர அடிக்கும் குறைவான வீட்டில் வசிப்பவர் முந்தைய ரூ.308 சொத்து வரிக்கு பதிலாக இப்போது ரூ.462 செலுத்த வேண்டும்.

சென்னை ஆலந்தூரில் 600 சதுர அடி வீட்டுக்கு ரூ.320 சொத்து வரி செலுத்திய குடியிருப்பாளர்கள் இனி ரூ.400 செலுத்த வேண்டும். 1,201 சதுர அடி முதல் 1,800 சதுர அடி வீடுகளுக்கு ரூ.825 செலுத்தி வந்த நிலையில், இனி அதிகபட்சமாக ரூ.1,444 செலுத்த வேண்டும்.

சென்னை மாதவரத்தில் வசிப்பவர்கள் 600 சதுர அடிக்கு ரூ.275 சொத்து வரி செலுத்த வேண்டும். 1,201 சதுர அடி முதல் 1,900 சதுர அடி வரை உள்ள வீடுகளுக்கு அதிகபட்சமாக ரூ.2,310 சொத்து வரி செலுத்த வேண்டும்.

சென்னை திருவொற்றியூரில் 600 சதுர அடியில் உள்ள வீடுகளுக்கு ரூ.264 வரி செலுத்த வேண்டும். 1,201 சதுர அடி முதல் 1,800 சதுர அடி உள்ள வீடுகளுக்கு அதிகபட்சமாக ரூ.1,288 வரி செலுத்த வேண்டும். அண்ணாநகர் மண்டலத்தில் 600 சதுர அடி வீடுகளுக்கு ரூ.461 சொத்து வரி செலுத்த வேண்டும். 1,201 முதல் 1,800 சதுர அடி வீடுகளுக்கு ரூ.2,970 வரி செலுத்த வேண்டும்.

இருப்பினும், ஒவ்வொரு மண்டலத்துக்கும் மாறுபட்ட வரி விதிக்காமல் அனைத்து மண்டலங்களுக்கும் ஒரே மாதிரியான வரி விதிக்க வேண்டும் என்று சென்னையில் வீடு வைத்திருக்கும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

ஆனால், பெங்களூரு, மும்பை, கொல்கத்தா நகரங்களைக் காட்டிலும் சென்னையில் குறைவாகவே சொத்து வரி வசூலிக்கப்படுகிறது என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.