புதிய இயக்குனர்களுக்கு தொழில்நுட்ப பயிற்சி அளிக்க தியாகராஜன் 5 லட்சம் நிதி

நடிகர் பிரசாந்துக்கு நேற்று பிறந்த நாள். இதையொட்டி நடந்த விழாவில் பெப்சி மற்றும் இயக்குனர்கள் சங்கத் தலைவர் ஆர்.கே.செல்வமணி, இயக்குனர் ஏ.வெங்கடேஷ், மாநாடு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, இசை கலைஞர்கள் சங்கத் தலைவர் தினா ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் இயக்குனர்கள் சங்கம் புதிய இயக்குனர்களுக்கு தொழில்நுட்ப பயிற்சி வழங்குவதற்காக 5 லட்சம் ரூபாய் நிதியை தியாகராஜன் வழங்கினார்.

நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: பிரஷாந்த் நடித்து அடுத்தடுத்து படங்கள் வர உள்ளன. இப்போது தயாராகிக் கொண்டிருக்கும் 'அந்தகன் ' (இந்தி அந்தாதூன் ரீமேக்) திரைப்படம் பிரஷாந்த்துக்கு மறக்க முடியாத படமாக இருக்கும். இந்தப் படம் இந்தி, தெலுங்கு, மலையாளத்தில் வெளியாகி பெரிய வெற்றி பெற்ற படம். தமிழிலும் பிரம்மாண்டமாகவும் பெரும் பொருட்செலவிலும் எடுக்கப்பட்டு வருகிறது.

நிறைய நட்சத்திரங்கள் நிறைந்த ஒரு படமாக இப்படம் உருவாகிறது, பிரசாந்துடன் அனுபவமிக்க பல நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். சிம்ரன், சமுத்திரக்கனி, யோகி பாபு, கே.எஸ். ரவிக்குமார் , மனோபாலா என்று ஏராளமான நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். சிறு வேடத்திற்கு கூட பிரபலமானவர்களைத் தேர்ந்தெடுத்து நடிக்க வைத்திருக்கிறோம்.

பிரசாந்துக்கு அடுத்தடுத்து அழுத்தமான நல்ல கதைகளையும் நல்ல இயக்குநர்களையும் தேடிக்கொண்டிருக்கிறோம். அப்படி நல்ல படங்கள் அமையும் என்று நம்புகிறோம். இன்று திரைப்படக்கல்லூரியில் படிக்காமலேயே பல இளைஞர்கள் இயக்குநர் கனவோடு வருகிறார்கள். அவர்கள் இன்றுள்ள நவீன தொழில்நுட்பங்கள் தெரியாமல் சிரமப்படுகிறார்கள். அவர்களுக்கு இன்றுள்ள நவீன தொழில்நுட்பங்களை கற்றுக் கொடுப்பதற்கு ஒரு பள்ளி ஆரம்பித்து அவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் என்று செல்வமணியை கேட்டுக் கொள்கிறேன். அதற்குப் பிரசாந்த் பிறந்தநாளை முன்னிட்டு ஐந்து லட்ச ரூபாய் அன்பளிப்பாக வழங்குகிறேன். என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.