பொருளாதார நெருக்கடியை தீர்க்க தமிழர்களிடம் பொறுப்பு ஒப்படைப்பு- அதிபர் கோத்தபய ராஜபக்சே நடவடிக்கை

கொழும்பு:
இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே செய்த தவறான கொள்கை முடிவுகள் மற்றும் அளவுக்கு அதிகமாக வாங்கப்பட்ட கடன்கள் காரணமாக இலங்கையில் வரலாறு காணாத அளவுக்கு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
அனைத்து அத்தியாவசிய பொருட்கள் விலையும் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து விட்டன. பெரும்பாலான பொருட்கள் தட்டுப்பாடு காரணமாக மக்கள் கடும் அவதிக்குள்ளாகி இருக்கிறார்கள். விரைவில் இலங்கையில் உணவு பஞ்சம் ஏற்படும் என்ற நிலை நிலவுகிறது.
பொருளாதார சீரழிவுக்கு கோத்தபய ராஜபக்சே, மகிந்த ராஜபக்சே ஆகிய இருவரும்தான் காரணம் என்று கருதும் மக்கள் அவர்கள் பதவி விலக வேண்டும் என்று கோரி தீவிர போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் இலங்கை பாராளுமன்றம் கூடி பொருளாதார சீரழிவு பற்றி விவாதம் நடத்தி வருகிறது.
புதிய அமைச்சர்கள் இல்லாத நிலையில் நாளையுடன் இலங்கை பாராளுமன்ற கூட்டம் நிறைவு பெற உள்ளது. அதற்குள் புதிய மந்திரிகளை நியமித்து அவர்களை பதவி ஏற்க செய்ய கோத்தபய ராஜபக்சே தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். ஆனால் அவருக்கு ஒத்துழைப்பு கொடுக்க எதிர்க்கட்சிகள் மறுத்து வருகின்றன.
கோத்தபய ராஜபக்சே ஆட்சிக்கு ஆதரவு கொடுத்து வந்த கூட்டணி கட்சிகள் விலகி சென்றுள்ளன. அதோடு அவரது கட்சியை சேர்ந்த சில எம்.பி.க்களும் ராஜபக்சே குடும்பத்துக்கு எதிராக மாறி உள்ளனர்.
இதையடுத்து அதிபர் கோத்தபய ராஜபக்சே சில அதிரடி முடிவுகளை மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு நடவடிக்கையாக பொருளாதார நெருக்கடியை ஆய்வு செய்வதற்கு குழு ஒன்றை அமைத்துள்ளார்.
இந்த குழுவின் முக்கிய பொறுப்புகள் 3 தமிழர்களிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் கவர்னர் கலாநிதி இந்திரஜித் குமாரசாமி, உலக வங்கியின் முன்னாள் தலைமை பொருளாதார நிபுணர் சாந்தா தேவராஜன், சர்வதேச நாணயத்தின் திறன் மேம்பாட்டு முன்னாள் இயக்குனர் ‌ஷர்மினி ஆகியோரே அந்த 3 தமிழர்கள் ஆவார்கள்.
இந்த 3 தமிழர்களும் இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் நடவடிக்கைகளை தொடங்கி உள்ளனர். இலங்கையில் ஏற்பட்டுள்ள அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாட்டை நீக்கி மக்களை அமைதிப்படுத்தும் திட்டங்களை வகுத்து இவர்கள் வழிகாட்டுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்காக இந்த 3 தமிழர்கள் சர்வதேச நாணய நிதியத்துடன் ஆலோசனை நடத்த உள்ளனர். அதோடு சர்வதேச அளவில் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள கடன் நெருக்கடிக்கும் தீர்வு காண்பார்கள். இதற்காக இவர்கள் அதிபர் கோத்தபய ராஜபக்சேவை சந்தித்து பேசி வருகிறார்கள்.
இதற்கிடையே மீண்டும் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் என்று ராஜபக்சே குடும்பத்தினர் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக நிதி மந்திரி பதவியை கைப்பற்ற முயற்சி நடந்து வருகிறது.
சமீபத்தில் அலிசப்ரி நிதி மந்திரியாக பொறுப்பேற்று 24 மணி நேரத்தில் பதவி விலகினார். புதிய நிதி மந்திரி சர்வதேச அளவில் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஏற்ற தகுதி உடையவராக இருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது. இதனால் புதிய அமைச்சரவை குறித்து எதிர்பார்ப்பு உருவாகி உள்ளது.
ராஜபக்சே குடும்பத்தின் இந்த முயற்சி இலங்கை மக்களிடம் மீண்டும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் போராட்டம் தீவிரமாகிறது. தொழிலாளர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
இதன் காரணமாக இலங்கையில் உள்ள அனைத்து தொழிற்சாலைகளும் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தற்போது இந்தியா கொடுத்துள்ள பெட்ரோல், டீசல் அடுத்த மாதத்துடன் தீர்ந்து விடும். அதற்குள் நிலைமையை சரி செய்ய வேண்டும் என்று கோத்தபய ராஜபக்சேவுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.