இந்தியாவை சிதறடிப்பதே அமித் ஷாவின் நோக்கம்: கே.எஸ்.அழகிரி சாடல்

கோவை: “இந்தியாவை சிதறடிக்க வேண்டும் என்பது அமித் ஷாவின் நோக்கம் என காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டினார்.

பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வரவும், சமையல் எரிவாயு உருளையின் விலையை குறைக்கவும் மத்திய அரசை வலியுறுத்தி, காங்கிரஸ் கட்சியின் மனித உரிமை துறை சார்பில், 18 நாட்கள் பாத யாத்திரையாக நடந்து கோவையிலிருந்து சென்னைக்கு செல்லும் நிகழ்வு கோவையில் இன்று (11-ம் தேதி ) காலை தொடங்கியது. இந்த பாதயாத்திரையை தமிழக காங்கிரஸ் கமிட்டியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் பேசும்போது, ‘‘இந்த பாதயாத்திரை மிகவும் முக்கியமானது. இது ஒரு கொள்கை ரீதியிலான நடை பயணம். மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கைகளை விளக்கி சொல்லும் நடைபயணம் இது. காங்கிரஸ் கொண்டு வந்த ஜி.எஸ்.டி என்பது ஒரு வரி, குறைவான வரி என்பதாகும். குறைவான வரி ஒரே வரி என்பதன் மூலம் அதிக வரி வருமானம் கிடைக்கும். வரியை குறைவாக விதித்து, அனைவரும் வரி கட்ட வேண்டும் என்ற சூழலை உருவாக்க வேண்டும் என அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் முடிவு செய்து அத்திட்டத்தை கொண்டு வந்தார். ஆனால், பாஜக ஆதரிக்காதால் காங்கிரஸ் கொண்டு வந்தது வெற்றி பெறவில்லை.

அதன் பின்னர், பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர் ஜிஎஸ்டியை கொண்டு வந்தனர். வரிகள் 18 சதவீதத்துக்கு மிகாமல் இருக்கக் கூடாது, அதிகமான வரிவிதிப்பு முறை இருக்கக்கூடாது என நிபந்தனைகளின் அடிப்படைகளில் ஜி.எஸ்.டிக்கு ஆதரவு அளித்தோம். ஆனால், பாஜக அரசு பின்னர் நிபந்தனைகளை ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் மிகப்பெரிய பொருளாதார நஷ்டம் ஏற்பட்டது. நாட்டின் வருமானம் குறைந்தது.

மத்திய அமைச்சர் அமித் ஷா, இந்தி பேசாத மாநிலங்களும் இந்தியை பயன்படுத்த வேண்டும். அலுவல் மொழியாக, பாட மொழியாக கொண்டு வர வேண்டும் என்ற செயல் திட்டத்தை இந்தியாவுக்கு முன்பு வைத்துள்ளார். காங்கிரஸ் இயக்கம் எந்த ஒரு மொழிக்கும் எதிரான இயக்கம் அல்ல. இந்திய எல்லையில் உள்ள மக்கள், எந்த மொழியை அவர்கள் பேசிகிறார்ளோ அதை பேசலாம் என்பது தான் நம் மொழிக் கொள்கை. ஆங்கில ஆட்சி மொழி எப்போது முடிவுக்கு வர வேண்டும் என்பதை இந்திய அரசாங்கம் முடிவு செய்யாது. இந்தி மொழி பேசாத மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என்ற மிகப்பெரிய ஜனநாயக நடைமுறையை முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு நாட்டுக்கு வழங்கியுள்ளார்.

இதை அப்போது மக்கள், எதிர்கட்சிகள் ஏற்றுக் கொண்டதால், இந்தியா ஒரே நாடாக உள்ளது. நம்மோடு விடுதலையடைந்த பாகிஸ்தான் இன்று இரண்டாக பிரிந்துள்ளது. இந்தியாவையும் இதுபோல் சிதறடிக்க வேண்டும் என்பதுதான் மத்திய அமைச்சர் அமித் ஷாவின் நோக்கம். நாம் மொழிக் கொள்கையில் தெளிவான நிலையில் இருக்கிறோம்” என்று அவர் பேசினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.