இந்தியாவை சிதற வைக்கும் நோக்கில் அமித்ஷா செயல்படுகிறார்- கே.எஸ்.அழகிரி

கோவை:

பெட்ரோல், டீசல் விலை கடந்த சில வாரங்களாக கடுமையாக உயர்ந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த கோரி நாடு முழுவதும் எதிர்கட்சியினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க கோரியும், ஜி.எஸ்.டி வரியை கட்டுக்குள் கொண்டு வர வலியுறுத்தியும் தமிழக
காங்கிரஸ்
மனித உரிமை துறை சார்பில் 18 நாட்கள் நடக்கும் பாத யாத்திரை நிகழ்ச்சி இன்று கோவையில் தொடங்கியது.

கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் அருகே உள்ள செஞ்சிலுவை சங்க அலுவலகம் முன்பு பாதயாத்திரையை மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கொடியசைத்து தொடங்கி வைத்தார். பாத யாத்திரைக்கு தமிழ்நாடு
காங்கிரஸ்
மனித உரிமை துறை தலைவர் மகாத்மா சீனிவாசன் தலைமை தாங்கினார்.

கோவையில் இருந்து தொடங்கும் இந்த பாத யாத்திரை 56 தொண்டர்களுடன் 550 கி.மீ. தூரம் பயணித்து வருகிற 28-ந் தேதி சென்னை சத்திய மூர்த்தி பவனில் நிறைவு பெற உள்ளது.

ஒவ்வொரு நாளும் 30 கி.மீ. தூரம் வரை இந்த பாத யாத்திரை நடக்கிறது. இதில் அந்தந்த மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களும் இந்த யாத்திரையில் பங்கேற்க உள்ளனர்.

செல்லும் இடங்களில் எல்லாம் மக்களுக்கு பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த கோரி விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர். மேலும் துண்டு பிரசுரமும் வினியோகிக்கப்படுகிறது.

பாத யாத்திரையை தொடங்கி வைத்து கே.எஸ்.அழகிரி பேசியதாவது:-

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து இந்த பாதயாத்திரையானது நடக்கிறது. இந்த யாத்திரை நடைபயணம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. பெட்ரோல், டீசல் விலையை குறைத்து ஜி.எஸ்டி.க்குள் கொண்டு வர வேண்டும். ஜி.எஸ்.டி. வரியை குறைக்க வேண்டும்.

ஜி.எஸ்.டி. வரியை
காங்கிரஸ்
கொண்டு வந்ததாக பா.ஜனதா கூறுகிறது. அது உண்மை தான். ஆனால் காங்கிரஸ் கொண்டு வந்தது குறைந்தபட்ச வரி மற்றும் அனைவருக்கும் சமமான வரி. ஆனால் அதற்கு அப்போது பா.ஜனதா எதிர்ப்பு தெரிவித்தது. இதனால் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் அந்த திட்டம் நிறைவேறவில்லை.

ஆனால் அதன்பின்னர் ஆட்சிக்கு வந்த பா.ஜனதா மக்கள் மீது அக்கறை இல்லாமல் 18 சதவீதத்துக்கும் அதிகமாக ஜி.எஸ்.டி வரி விதிப்பை அமல்படுத்தியுள்ளது. இதனால் வியாபாரிகள், பொதுமக்கள் பாதிப்படைந்துள்ளனர்.

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இந்தி மொழி ஆட்சி மொழியாக இருக்க வேண்டும் என கூறுகிறார். இந்த பேச்சின் மூலம் அவர் மீண்டும் இந்தி திணிப்பை ஏற்படுத்த நினைக்கிறார்.

இந்தியாவை சிதற வைக்கும் நோக்கில் அமித்ஷா இந்த பேச்சு இருக்கிறது.
காங்கிரஸ்
எந்த மொழிக்கும் எதிரானது அல்ல. மக்கள் விரும்பும் மொழிகளை அவர்கள் பேசலாம். இந்தி தொடர்பாக கொடூரமான செயல் திட்டத்தை அமித்ஷா முன் வைத்துள்ளார். அமித்ஷாவின் இந்த பேச்சுக்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும் தக்க பதிலடி கொடுத்துள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

மத்திய அரசின் விரோத போக்கை மக்களிடம் தெரியப்படுத்தும் வகையிலும், மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் காங்கிரஸ் நடத்தும் இந்த பாத யாத்திரையில் கவுன்சிலர் அழகு ஜெயபாலன், மாவட்ட செயலாளர்கள், பகுதி செயலாளர்கள், தொண்டர்கள் என அனைவரும் பங்கேற்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.