“இஸ்லாமியர்களை நிம்மதியாக வாழ விடுங்கள்” : கர்நாடகாவில் வகுப்புவாத பதற்றத்தை முடிவுக்கு கொண்டு வர எடியூரப்பா அழைப்பு

“முஸ்லிம்களை அமைதியாகவும் மரியாதையாகவும் வாழ விடுங்கள்” என்று கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா இந்துத்துவா அமைப்புகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இஸ்லாமியர்களுக்கு சொந்தமான கடைகள் மற்றும் பழ வண்டிகளை சேதப்படுத்தியது தொடர்பாக ஸ்ரீ ராம சேனா அமைப்பைச் சேர்ந்த நான்கு பேர் நேற்று கைது செய்யப்பட்ட நிலையில், எடியூரப்பா இவ்வாறு கூறியுள்ளார்.

ஹிஜாப் விவகாரத்தை தொடர்ந்து கர்நாடகாவில் உள்ள இந்து கோயில்களில் இஸ்லாமியர்கள் கடை வைக்க அனுமதிக்கக் கூடாது, முஸ்லீம் ஓட்டுனர்களின் டாக்ஸி ஆட்டோக்களில் ஏறக்கூடாது, ஹலால் இறைச்சியைப் புறக்கணிக்க வேண்டும் உள்ளிட்ட பிரச்சாரங்களில் இந்து அமைப்பினர் தொடர்ந்து ஈடுபட்டு வருவதால் அங்கு வகுப்புவாத பதற்றம் அதிகரித்து வருகிறது.

இதனால் மத மோதல்கள் வெடிக்கும் சூழல் நிலவுவதால், “கர்நாடகாவில் பிரச்சனையை உருவாக்கி, அமைதியை சீர்குலைத்தால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று சட்டம் மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் ஜெ.சி. மதுசாமி நேற்று எச்சரித்தார்.

இந்நிலையில், “முஸ்லிம்களை அமைதியாகவும் மரியாதையாகவும் வாழ விடுங்கள். இந்துக்களும் முஸ்லீம்களும் ஒரே தாயின் குழந்தைகளாக வாழ வேண்டும் என்பதே எனது விருப்பம். அதற்கு சில விஷமிகள் தடையாக இருந்தால், நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் ஏற்கனவே உறுதியளித்துள்ளார்” என்று திங்களன்று செய்தியாளர்களிடம் பேசிய எடியூரப்பா கூறினார்.

“குறைந்த பட்சம், இனிமேல், இதுபோன்ற விரும்பத்தகாத சம்பவங்களில் ஈடுபடுவதை நிறுத்தவும் மேலும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறக்கூடாது” என்றும் “நாம் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்,” என்றும் அவர் கூறினார்.

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் உள்ள இந்துத்துவா அமைப்புகள் இதுபோன்ற வகுப்புவாத பதற்றத்தை அவ்வப்போது ஏற்படுத்தி வரும் நிலையில், முதல் முறையாக பா.ஜ.க.வைச் சேர்ந்த மூத்த தலைவர்களில் ஒருவரான 79 வயதாகும் பி.எஸ். எடியூரப்பா இந்துத்துவா அமைப்புகளை பகிரங்கமாக விமர்சித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜெ.சி. மதுசாமி

“சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியாவில் தங்கியிருப்பவர்கள் அனைவரும் இந்தியர்கள். இந்த நாடு அனைவருக்கும் சொந்தமானது,” என்று அமைச்சர் மதுசாமி பெலகாவியில் ஞாயிற்றுக்கிழமை அன்று செய்தியாளர்களிடம் கூறினார்.

மேலும், “இந்திய அரசியலமைப்பு சட்டம் ஒவ்வொரு குடிமகனுக்கும் வாழ்வதற்கும், வணிகம் செய்வதற்கும், தங்கள் மதத்தைப் பின்பற்றுவதற்கும் உரிமையை உறுதி செய்துள்ளது. எந்தவொரு சமூகத்தையும் பொதுவெளியில் இழிவுபடுத்தும் உரிமையை அது யாருக்கும் வழங்கவில்லை” என்று கூறியிருந்தார்.

கர்நாடக சட்டம் மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் ஜெ.சி. மதுசாமியின் எச்சரிக்கையைத் தொடர்ந்து முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் இன்றைய எச்சரிக்கை கர்நாடக அரசியலில் பரபரப்பாக பேசப்படுவது குறிப்பிடத்தக்கது.

ஹலால் இறைச்சி விவகாரத்தை தொடர்ந்து… இஸ்லாமிய ஓட்டுநர்களை நியமிக்க எதிர்ப்பு தெரிவிக்கும் இந்து அமைப்பினர்…

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.