சட்டசபை ஹைலைட்ஸ்: 4 வருஷத்துக்கு அப்புறமும் நாமதான்… எம்.எல்.ஏ.க்களுக்கு நம்பிக்கை அளித்த பொன்முடி

தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு ஏப்ரல் 6-ம் தேதி தொடங்கியது. சட்டப்பேரவையில் துறைவாரியாக மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், தமிழக சட்டப்பேரவையில் 4வது நாளான இன்று (ஏப்ரல் 11) உயர் கல்வித்துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது, உயர்க்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, பள்ளிக் கல்வித் துறை அன்பில் மகேஷ் இருவரும் பேசினார்கள். இதனிடையே, கேள்வி நேரத்தின்போது, உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளித்தனர்.

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில் இன்று உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, பேசியதாவது: “திறந்த நிலை பல்கலைக்கழகத்திற்கு யுஜிசி எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் அதைத் தொடர யுஜிசியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும். மேலும் தொழிற்சாலைகளில் பணிபுரியும் பட்டயப்படிப்பு படித்தவர்களுக்கு பொறியியல் பட்டம் பயில்வதற்கான திட்டம் உருவாக்கப்படும். தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் பயிலும் சிறைக்கைதிகள், திருநங்கைகள் மற்றும் கணவனை இழந்தவர்களுக்கு கட்டண விலக்கு அளிக்கப்படும்.” என்று கூறினார்.

புதிய அரசு கலை அறிவியல் கல்லூரிகள் தொடங்குவது பற்றி பேசிய அமைச்சர் பொன்முடி, “மணப்பாறை, செஞ்சி, அரவக்குறிச்சி, திருமயம், ஸ்ரீபெரும்புதூர், தளி, அந்தியூர், திருக்காட்டுப்பள்ளி, ரெட்டியார்சத்திரம், வடலூர் ஆகிய 10 இடங்களில் புதிய அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் துவங்கப்படும். 41 உறுப்புக்கல்லூரிகள் விரைவில் அரசுக்கல்லூரிகளாக மாற்றப்படும். அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் ரூ.50 கோடி மதிப்பில் ஆராய்ச்சி பூங்கா அமைக்கப்படும். இதன் மூலம் 20 ஆயிரம் இளநிலை, முதுநிலை மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் பயன்பெறுவர். ஆட்சி இன்னும் 4 வருஷம் இருக்கிறது. இந்த 4 வருஷம் மட்டுமல்ல. அதுக்குப்புறமும் நாமத்தான் வரப்போகிறோம். எனவே, உறுப்பினர்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்” என்று கூறினார்.

உலகத்திலேயே சிறந்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் – அமைச்சர் பொன்முடி புகழாரம்

தொடர்ந்து பேசிய பொன்முடி, “தமிழ்நட்டில் உயர் கல்வியில் வளர்ச்சி என்றாலே அது கருணாநிதியின் ஆட்சி காலத்தில் தான். தமிழகத்தில் உயர்கல்வியில் பயிலும் மாணவர்களின் சதவீதம் 51 என்பது 2019-ல் எடுக்கப்பட்ட கணகீடு. தற்போது அதை மீண்டும் கணக்கெடுத்தால் 55 சதவீதத்திற்கு மேல் உயர்ந்திருக்கும்.

கடந்த ஆட்சியில், மருத்துவப் படிப்பில் சேர அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு கொண்டுவரப்பட்டாலும், ஒப்புதல் அளிக்காத ஆளுநருக்கு எதிராக போராடி அழுத்தம் கொடுத்து அதை நிறைவேற்ற காரணமானது திமுகதான். அதன் நீட்சியாக தற்போது பொறியியல், சட்டம், மீன்வளம், கால்நடை உள்ளிட்ட தொழில்படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இடஒதுக்கீடு மட்டுமல்லாது அவர்களுக்கான கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம், போக்குவரத்துக் கட்டணம் என அனைத்தையும் இலவசமாக வழங்கி அரசு பள்ளி மாணவர்களின் கல்வி கணவை நிறைவேற்றி வரும் வகையில் உலகத்திலேயே சிறந்த முதலமைச்சர் தமிழ்நாடு முதலமைச்சர்தான்.

உயர்கல்வி படிக்கும் அரசுப் பள்ளி மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 கொடுப்பதன் மூலம் இனி அனைத்து மாணவிகளும் உயர்கல்வி கட்டாயம் படிக்க வேண்டிய சூழலை உருவாக்கும். இதன் மூலம், படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை உயர்வதோடு மட்டுமல்லாது கல்வியின் தரத்தையும் உயர்த்துவதுதான் தொலைநோக்கு திட்டம் என தெரிவித்தார்.

தமிழகத்தை திராவிட இயக்கங்களைத் தவிர்த்து வேறு எவராலும் ஆள முடியாது – செங்கோட்டையன்

தமிழக சட்டப்பேரவையில் இன்றைய கூட்டத்தில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தை திராவிட இயக்கங்களைத் தவிர்த்து வேறு எவராலும் ஆள முடியாது என்று கூறியிருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது.

சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வித்துறை மீதான மானிய கோரிக்கை விவாதத்தின்போது பேசிய செங்கோட்டையன், இந்தியாவிற்கே முன் மாதிரியாகத் திகழும், கல்வித் தொலைக்காட்சியை கொண்டு வந்த பெருமை அதிமுக அரசையே சேரும் எனக் கூறினார். நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற வேண்டும் என்பது அதிமுகவின் நிலைப்பாடாக இருந்தாலும், அதிமுக ஆட்சியில்தான் நீட் பயிற்சி அளிக்கப்பட்டதாக செங்கோட்டையன் பேசினார். தமிழகத்தை திராவிட இயக்கங்களை தவிர்த்து வேறு எவராலும் ஆள முடியாது எனக் கூறிய அவர், தாலிக்கு தங்கம் திட்டத்தை கைவிடாமல் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என அரசை வலியுறுத்தினார்.

CUET: மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலைப் படிப்புகளில் சேர நுழைவுத் தேர்வு கட்டாயம் என்ற மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதை ரத்து செய்ய வலியுறுத்தியும் தமிழக சட்டப்பேரவையில் இன்றைய கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலைப் படிப்புகள் சேர நுழைவுத் தேர்வு கட்டாயம் என்று அறிவித்த யுஜிசியின் CUET தேர்வை எதிர்த்து மு.க. ஸ்டாலின் தனித் தீர்மானம் கொண்டுவந்தார்.

என்.சி.இ.ஆர்.டி பாடத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்ட யுஜிசியின் இந்த CUET நுழைவுத் தேர்வால், மத்தியப் பல்கலைக்கழகங்களில் சேருவதற்கு தகுதியான பெரும்பான்மையான மாணவர்களுக்கு பாதகத்தை ஏற்படுத்தும் என்று கூறினார்.

மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலைப் படிப்புகளில் சேருவதற்கான நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் எனவும் 12ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கொண்டுவந்த திர்மானம் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.

சட்டப்பேரவையில் வாட்ஸ் அப் ஃபார்வர்டு மெசேஜ்ஜை மாற்றிப் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ்

சட்டப்பேரவையில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடர்ந்து பேசியதாவது: “கொரோனாவால் மாணவர்களுக்கு ஏற்பட்ட கற்றல் இடைவெளியை குறைக்கவே இல்லம் தேடி கல்வித் திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்தியாவின் முன்னோடி திட்டமாக இது செயல்படுகிறது. 4 ஆண்டுகளில் அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும் ஸ்மார்ட் வகுப்பறைகள் உருவாக்கப்படும். 6,029 அரசுப் பள்ளிகளில் 30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஆங்கில மொழி ஆய்வகங்கள் அமைக்கப்படும்.

2,713 நடுநிலைப் பள்ளிகளில் 210 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வகங்கள் அமைக்கப்படும். ஆசிரியர் பணியிட மாறுதல் வெளிப்படைத் தன்மையுடன் நடைபெறுகிறது. தமிழகம் முழுவதும் மாடல் பள்ளிகளை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும். 150 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 7,500 திறன் வகுப்பு அறைகள் அமைக்கப்படும். மீன் கொடுப்பதை விட மீன் பிடிக்க கற்றுக் கொடுப்பது தான் திராவிட மாடல் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். கிராம, நகர பகுதிகளில் நூலக சேவை பெறாத இடங்களில் நூலக நண்பர்கள் என்ற புதிய திட்டம், தன்னார்வலர்கள் வாயிலாக நூலக சேவை.

அரசுப் பள்ளிகளில் 25 லட்சம் ரூபாய் செலவில் காய்கறித் தோட்டம் அமைக்கப்படும். சதுரங்க போட்டி குறித்து ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் பள்ளி, வட்டார, மாவட்ட மற்றும் மாநில அளவில் சதுரங்க போட்டிகள் நடத்தப்படும். போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்கள் சர்வதேச விளையாட்டு வீரர்களுடன் கலந்துரையாட ஏற்பாடு செய்யப்படும்.

“அனைவருக்கும் தேநீர் கொடுங்கள் என்றார் மார்க்ஸ்; சமமான அளவு கொடுங்கள் என்றார் பெரியார். ஒரே வகையான குவளையில் கொடுங்கள் என்றார் அம்பேத்கர். பசியுடன் இருப்பவர்களுக்கு முதலில் கொடுங்கள் என்றார் கலைஞர். தேநீரை இலவசமாக கொடுங்கள் என்கிறார் மு.க.ஸ்டாலின்” என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.

இதில், “அனைவருக்கும் தேநீர் கொடுங்கள் என்றார் மார்க்ஸ்; சமமான அளவு கொடுங்கள் என்றார் பெரியார். ஒரே வகையான குவளையில் கொடுங்கள் என்றார் அம்பேத்கர். பசியுடன் இருப்பவர்களுக்கு முதலில் கொடுங்கள் என்றார் கலைஞர்.” என்ற வரிகள் வாட்ஸ்அப்பில் நிறைய ஃபார்வர்டு செய்யப்படுகிற மெசேஜ்ஜாக இருந்து வருகிறது. இதனுடன், தேநீரை இலவசமாக கொடுங்கள் என்கிறார் மு.க.ஸ்டாலின்” என்று கூறி அவையில் கைத்தட்டலைப் பெற்றிருக்கிறார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.