ராத்திரிக்கு மனைவியை அனுப்பு.. உத்தரவிட்ட "பாஸ்".. தீக்குளித்த லைன்மேன்!

உத்தரப் பிரதேச மாநிலத்தில், இடமாறுதல் கேட்ட ஊழியரிடம், உனது மனைவியை ராத்திரிக்கு என்னுடன் அனுப்பி வை, உடனே டிரான்ஸ்பர் தருகிறேன் என்று மேலதிகாரி கூறியதால் அதிர்ச்சி அடைந்த அந்த ஊழியர்
தற்கொலை
செய்து கொண்டார். இந்த சம்பவம் உ.பியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் சமீபத்தில் பெரும் பரபரப்பையும், சலசலப்பையும் ஏற்படுத்திய லக்கிம்பூரில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள மின்துறை அலுவலகத்தில் லைன்மேனாக பணியாற்றி வந்தவர் 45 வயதான கோகுல் பிரசாத். இவர் தனது மேலதிகரியான இளநிலைப் பொறியாளர் நாகேந்திர குமாரிடம் இடமாறுதல் கோரி விண்ணப்பித்துள்ளார்.

அவரது மனுவைப் பெற்றுக் கொண்ட நாகேந்திர குமார், இடமாறுதல் வேண்டும் என்றால் உனது மனைவியை ராத்திரிக்கு என்னுடன் அனுப்பி வை. உடனே தருகிறேன் என்று கூறியதாக கூறப்படுகிறது. இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தார் கோகுல் பிரசாத். தான் மிகவும் அவமானப்படுத்தப்பட்டதாக உணர்ந்த அவர் வேதனைக்குள்ளானார்.

இந்த நிலையில் வீட்டிலிருந்து மண்ணெண்ணெய் எடுத்துக் கொண்டு தனது அலுவலகத்திற்கு வந்த அவர் அங்கு வைத்து உடல் மீது ஊற்றி தீ வைத்துக் கொண்டார். உடல் கருகிய நிலையில் அவரை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார்.

பாகிஸ்தானிலும் ஒரு “நரேந்திர மோடி”.. முதல்வர் டூ பிரதமர்.. ஷபாஸ் ஷெரீப்!

தனது தற்கொலைக்கு முன்பாக கோகுல் பிரசாத் ஒரு வீடியோ எடுத்திருந்தார். அதில், தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து அவர் விவரித்திருந்தார். மேலதிகாரியின் செயலால் தான் மிகவும் மன உளைச்சல் அடைந்துள்ளதாகவும், இளநிலை பொறியாளரும், அவரது கிளர்க்கும் சேர்ந்து தன்னைக் கொடுமைப்படுத்தியதாகவும், இதுகுறித்து போலீஸில் புகார் கூறியும் கூட தனக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை என்றும் கூறியிருந்தார் கோகுல் பிரசாத்.

இதேபோல கோகுல் பிரசாத்தின் மனைவியும் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், எனது கணவரை இளநிலைப் பொறியாளர் கடந்த 3 வருடமாக தொல்லை கொடுத்து வந்தார். இதனால் எனது கணவர் மன உளைச்சலுக்குள்ளானார். இதற்காக மருந்தும் எடுத்து வந்தார். அப்படியும் அவரை அவர்கள் விடவில்லை. அலிகாஞ்ச்சுக்கு இடமாறுதல் செய்தனர். அவர் அலுவலகம் போய் வர மிகவும் சிரமப்பட்டார். இதனால்தான் வீட்டுக்கு அருகில் இடமாறுதல் கொடுக்குமாறு கேட்டார். ஆனால் அதற்கு அவர்கள் கேட்ட கோரிக்கைதான் எனது கணவரை நிலைகுலைய வைத்து விட்டது என்றார்.

இந்த சம்பவம் குறித்து மூத்த காவல்துறை அதிகாரி சஞ்சீவ் சுமன் கூறுகையில்,இளநிலைப் பொறியாளரும், கிளர்க்கும் அசிங்கமாக பேசியதாகவும், பணம் கேட்டதாகவும் லைன்மேன் கோகுல் பிரசாத் புகார் கூறியிருந்தார். இதுகுறித்து நாங்கள் வழக்குப் பதிவு செய்திருந்தோம். விசாரணை நடந்து வந்த நிலையில் தற்போது அவர் தற்கொலை செய்துள்ளார். சம்பந்தப்பட்ட இளநிலைப் பொறியாளரும், கிளர்க்கும் கைது செய்யப்பட்டுள்ளனர். இருவரும் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது தற்கொலைக்கு தூண்டியதாகவும் தற்போது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.