விமானத்தில் காங். பிரமுகருடன் ஸ்மிருதி இரானி சண்டை – வைரலாகும் வீடியோ!

பெட்ரோல், டீசல் விலை உயர்வு தொடர்பாக, விமானத்தில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கும், காங்கிரஸ் மகளிர் பிரிவு தலைவர் நேதா டிசோசாவுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

நாடு முழுவதும் கடந்த 16 நாட்களில் எரிபொருள் விலை 14 முறை உயர்த்தப்பட்டு உள்ளது. இதன் அடிப்படையில் எரிபொருள் விலை ரூ. 10 வரை உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக மும்பையில் பெட்ரோல் விலை சில்லறை விற்பனையில் ரூ.120 வரையிலும், டீசல் விலை ரூ.104 வரையிலும் விற்பனையாகின்றன.

இந்நிலையில், பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர்
ஸ்மிருதி இரானி
, டெல்லியில் இருந்து அசாம் மாநிலம் கவுகாத்திக்கு சென்று கொண்டிருந்தார். விமானத்தில் காங்கிரஸ் கட்சியின் மகளிரணி தலைவி நெட்டா டிசோசாவும் இருந்துள்ளார். கவுகாத்தி வந்ததும், பயணிகள் கீழே இறங்கிய போது அமைச்சர் ஸ்மிருதி இரானியை பார்த்த டிசோசா, பெட்ரோல் டீசல் விலை உயர்வு குறித்து கேள்வி எழுப்பினார்.

அப்போது, ஸ்மிருதி இரானியை மறித்த டிசோசா, ”பெட்ரோல், டீசல், காஸ் ஆகியவற்றின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறதே?” என, கேள்வி எழுப்பினார். அதற்கு ஸ்மிருதி இரானி, ”விமானத்தில் இருந்து பயணிகள் இறங்குவதை தடுக்க வேண்டாம்; இறங்கிய பின் பதில் சொல்கிறேன்,” என்றார்.

ஆந்திர அமைச்சரவை விரிவாக்கம் – நடிகை ரோஜாவுக்கு எந்த துறை?

”நாட்டில் உள்ள அனைத்து மக்களும் இந்த விலை உயர்வால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்,” என, டிசோசா கூறினார். ”நீங்கள் தவறான தகவல்களை பரப்புகிறீர்கள். மத்திய அரசு ஏழைகளின் நலனுக்காக பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இலவசமாக தடுப்பூசி, உணவு பொருட்கள், எரிவாயு இணைப்பு உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்தி வருகிறது,” என, ஸ்மிருதி இரானி பதிலடி கொடுத்தார்.

இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டபடியே விமானத்திலிருந்து இறங்கிச் சென்றனர். இந்த விவாதத்தை இருவரும் மொபைல் போனில் ‘வீடியோ’ பதிவு செய்தனர். பின் இந்த விவாதத்தை, சமூக வலைதளத்தில் டிசோசா வெளியிட்டு, ‘எரிபொருள் விலை உயர்வுக்கு, ஏழைகள், தடுப்பூசி மீது பழிபோடும் மோடி அரசின் அமைச்சர்’ என, பதிவிட்டிருந்தார்.

இதற்கு ஸ்மிருதி இரானி அளித்த பதிலில், ‘விமானத்திலிருந்து இறங்கும் பயணிகளை தடுக்க வேண்டாம் எனக் கூறினேன். விமானத்திலிருந்து இறங்கிய பின் டிசோசா கேட்டிருந்தால், அனைத்துக்கும் பதில் அளித்திருப்பேன்’ எனக் கூறியிருந்தார். விமானத்தில் பயணிகள் முன்னிலையில், ஸ்மிருதி இரானி – டிசோசா ஆகியோர் வார்த்தைப் போரில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.