அமெரிக்காவில் டர்ஹாம் சிம்பொனியால் இசைக்கப்பட்ட சங்கப் பாடல்!

மேற்கத்திய இசையுலகில் பீத்தோவன் காலம் தொடங்கி சிம்பொனி இசை கொண்டாடப்பட்டு வரும் ஒரு வடிவம். புகழ்பெற்ற சிம்பொனிகளின் தாக்கத்தைத் தமிழ்த் திரையிசை, தனிப்பாடல் இசை இரண்டிலுமே காணமுடியும். தமிழகத்தைப் பொறுத்தவரை முதன்முதலில் சிம்பொனி இசைத்தவர் இசைஞானி இளையராஜா. அவரது சிம்பொனிகள் இன்னும் வெளியிடப்படவில்லை. அடுத்து, அமெரிக்காவில் வாழ்ந்துவரும் திருவாரூர் இளைஞரான ராஜன் சோமசுந்தரம், தேர்ந்தெடுத்த ஏழு சங்கத் தமிழ்ப் பாடல்களுக்கு சிம்பொனி இசை அமைத்து ‘சந்தம்’ என்கிற தலைப்பில் ஒரு இசைத் தொகுப்பாக வெளியிட்டிருக்கிறார். அத்தொகுப்பில்: 1. யாயும் ஞாயும் யாராகியரோ, 2. யாதும் ஊரே யாவரும் கேளிர், 3. வேரல் வேலி வேர்கோட்பலவின், 4. ஞாயிறு காயாத மர நிழல் பட்டு, 5. கலம்செய் கோவே கலம்செய் கோவே, 6. முல்லை ஊர்ந்த கல்லுயர் ஏறி, 7. ஓரில் நெய்தல் கறங்க – ஆகிய புகழ்பெற்ற பாடல்கள் அடங்கியிருக்கின்றன.

இந்தப் பாடல்களுக்கு ராஜன் சோமசுந்தரம் சிம்பொனி இசை வடிவத்தில் நவீன இசைக் கலவையை இணைத்து கொடுத்ததுடன், அமெரிக்காவின் புகழ்பெற்ற ‘டர்ஹாம் சிம்பொனி’ இசைக்குழுவுடன், தமிழின் முன்னணி பாடகர்கள், பல சர்வதேச இசைக்கலைஞர்கள் ஆகியோரைக் கொண்டு சர்வதேச இசைத்தொகுப்பாக உருவாக்கி வெளியிட்டிருந்தார். இத்தொகுப்பில், பாடகர்கள் சைந்தவி, கார்த்திக், பாம்பே ஜெயஸ்ரீ, பிரியங்கா, பிரகதி, ராஜலக்ஷ்மி சஞ்சய் ஆகியோர் 6 சங்கத்தமிழ் பாடல்களை, அவை சுட்டும் உண்மையான உணர்ச்சிகளுடன் நவீன இசையில் அற்புதமாக பாடியிருக்கிறார்கள். இத்தொகுப்பு அமேசானில் சர்வதேச இசை என்னும் வகைமையின் கீழ், இந்த இசைத்தொகுப்பு டாப் 10 வரிசையை எட்டி சாதனை படைத்தது. உலகப்புகழ் பெற்ற இசைக்கலைஞர்கள் பாப் மார்லி, கொரியாவின் பிடிஎஸ் இசைக்குழு போன்றவர்கள் இடம்பெற்றிருக்கும் அமேசானின் டாப் 10 சர்வதேச இசைவரிசையில் சங்கத்தமிழ் இசைத்தொகுப்பான ‘சந்தம்’இடம்பெற்றிருப்பது இலக்கியத் தமிழின் தொன்மைக்கும் ஒரு தமிழ் இசைக் கலைஞர் சர்வதேச இசை வடிவத்தில் அதை சர்வதேச இசையாகப் படைத்ததும் பெருமைக்குரிய விஷயமே.

டர்ஹாம் சிம்பொனி இசைக் குழு

ஏன் இசைக்கபட்டது ‘யாதும் ஊரே’?

தற்போது, ‘சந்தம்’இசைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ பாடல் முதல் முறையாக அமெரிக்க மண்ணில் ‘டர்ஹாம் சிம்பொனி’யால் நேரடியாக இசைக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 10-ம் தேதி அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணத்தின் தலைநகரான ராலே-டர்ஹாம் பகுதியில், இவ்விரண்டு மாநகரங்களும் இணைந்து ஒரு பிரம்மாண்ட சமுக ஒற்றுமைக்கான இசைநிகழ்ச்சி நடத்தினார்கள். இந்த இசைவிழாவில்தான் ‘சந்தம்’ தொகுப்பில் இடம்பெற்றுள்ள கனியன் பூங்குன்றனாரின் ‘யாதும் ஊரே’பாடல் பாடப்பட்டது. குறிப்பாக இந்தப் பாடல் ஏன் பாடப்பட்டது என்ற காரணம் மிகவும் சுவாரஸ்யமானது!

ஐம்பது வருடங்களுக்கு முன், டர்ஹாம் மாநகரில் மிகப்பெரிய சாலை ஒன்றை, அப்போது வெள்ளையர் மட்டுமே அங்கம் வகித்த அரசாங்கம் கொண்டுவந்தது. அந்த சாலையை அமைக்கும் போது, கருப்பின மக்கள் வசிக்கும் டர்ஹாம் மாநகரின் ஒரு பகுதியான ஹெயிட்டி என்கிற இடம் வழியாகவே சாலை செல்லுமாறு இடங்களை தேர்ந்தெடுத்து, அவர்களின் வீடுகளை அழித்து அந்த சாலையை போடும்படி ஏற்பாடு செய்துவிட்டனர். ஒரு மைல் தூரம் தள்ளி, புறநகர் வழியாக யாருக்கும் இடையூறின்றி அந்தச் சாலையை அமைத்திருக்க முடியும். ஆனால் அன்றிருந்த வெள்ளையர் அரசாங்கம் அதை செய்ய மறுத்துவிட்டது. அந்த சாலையால் வீடுகளையும், கடைகளையும், நிலங்களையும், இழந்த கருப்பின மக்கள் அதன்பின் தங்கள் வாழ்நாள் முழுவதும் வறுமையின் பிடியில் இருந்து வெளிவர இயலவில்லை. குறிப்பாக, வெள்ளையர்கள் வசிக்கும் இடங்களையும், கருப்பர் வசிக்கும் இடங்களையும் ஒட்டுமொத்தமாக பிரிக்கும்படி அந்த பெரிய சாலை போடப்பட்டது. அந்த சாலையில் வந்துசேரும் எல்லா சிறிய வீதிகளும் அடைக்கப்பட்டன. இது அந்த நகரில் வசிக்கும் கருப்பர்களின் வாழ்வாதாரத்தை அழித்ததோடு மட்டுமல்லாமல், அவர்களை ஊரை விட்டு ஓதுக்கி வெளியில் தள்ளிவைக்கும் பெரும் நிறவெறித் தீண்டாமைக் கொடுமையின் நேரடி சாட்சியமாக இருந்தது.

டர்ஹாம் நகரம் இன்று

ஆனால், இன்று வரலாறு அனைத்தையும் மாற்றி அமைத்துவிட்டது. இதோ இப்போது ஆப்பிள், கூகிள், ஐபிஎம் போன்ற பெரிய நிறுவனங்கள் டர்ஹாமில் அலுவலகங்களைத் திறந்து நகரம் முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. ஐம்பது வருடங்களுக்கு முன் நடந்த இந்த இழிசெயலுக்கு மன்னிப்புக் கோரும் விதமாக, டர்ஹாம் மாநகரத்தின் வெள்ளையர்களும் கருப்பர்களும் சேர்ந்து, நகரம் பிரிக்கப்பட்ட அதே இடத்தில் எழுப்பட்டு உலகப்புகழ்பெற்ற ஹெயிட்டி இசை அரங்கத்தில் ஒரு பிரம்மாண்ட சர்வதேச இசை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார்கள். அந்த இசைநிகழ்ச்சியில், சமத்துவத்தை ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே முன்வைத்த கனியன் பூங்குன்றனாரின் ‘யாதும் ஊரே’ சிம்பொனியை முதல் பாடலாக இசைக்க முடிவு செய்து அவ்வாறே இசைத்துள்ளது டர்ஹாம் சிம்பொனி. இந்தப் பாடல் இசைக்கப்படும் முன் இதன் இசையமைப்பாளர் ராஜன் சோமசுந்தரம் ‘டர்ஹாம் சிம்பொனி’ இசைக்குழுவினரின் முன்னிலையில் கௌரவம் செய்யப்பட்டார். மேலும் ‘கருப்பின மக்களின் விடுதலைக்காகவும் உரிமைக்காகவும் குரல் கொடுத்தவர்களுக்கு மரியாதை செய்யும் விதமாக இசைக்கப்படும் பாடல்களில் ‘யாதும் ஊரே’தமிழ் மக்களின் பரந்த பார்வையை சகோதரத்துவத்தைக் கூறுகிறது’ என டர்ஹாம் சிம்பொனிக் குழுவின் இசை நடத்துனரால் முன்னுரை மொழியப்பட்டது. இந்த இசை நிகழ்ச்சியில் இசைக்கப்பட்ட சிம்பொனி பாடல்களின் விவரங்கள் ‘டர்ஹாம் சிம்பொனி’யின் அதிகார பூர்வ இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம். மேலும் ராஜன் சோமசுந்தரம் குறித்து உலகத் தமிழர்கள் பெருமை கொள்ளும் தருணம் இது!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.