ராஜபக்சே உறவினர்கள் இலங்கையிலிருந்து எஸ்கேப்| Dinamalar

கொழும்பு: பொருளாதார நெருக்கடி காரணமாக, இலங்கையில் அதிபர் கோத்தபய ராஜபக்சே மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்சே மற்றும் அவர்களது உறவினர்களுக்கு எதிராக போராட்டம் வலுத்து வருகிறது. இச்சூழ்நிலையில், அவர்களின் உறவினர்கள் ஒவ்வொருவராக வெளிநாடுகளுக்கு தப்பி செல்கின்றனர்.

நம் அண்டை நாடான இலங்கையில் அன்னிய செலவாணி தட்டுப்பாடு ஏற்பட்டதை அடுத்து, அந்நாடு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி உள்ளது.அதிபர் கோத்தபய ராஜபக்சே மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்சே தவிர அமைச்சர்கள் அனைவரும் பதவி விலகினர். நிதித்துறை உட்பட நான்கு துறைகளுக்கு மட்டும் புதிய அமைச்சர்கள் நியமிக்கப்பட்டனர்.

இந்நிலையில், ராஜபக்சே குடும்பத்தினர் பதவி விலகக் கோரி, இலங்கையில் நடக்கும் மக்கள் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. கடந்த 9ம் தேதி துவங்கிய போராட்டம், மூன்றாவது நாளாக நேற்றும் தொடர்ந்தது. போராட்டம் தீவிரமடைவதை அடுத்து, இலங்கை அரசு பொது விடுமுறை அறிவித்தது.

இதனிடையே, அதிபர் மற்றும் பிரதமர் தவிர்த்து குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் ஒவ்வொருவராக வெளிநாடுகளுக்கு தப்பி செல்வதாக தகவல் வெளியாகி உள்ளது.

இலங்கையில் துணை அமைச்சராக இருந்த நிருபமா ராஜபக்சே மற்றும் அவரது திருக்குமார் நடேசன் ஆகியோர் கடந்த வாரம் துபாய்க்கு கிளம்பி சென்றதாக இலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. காட்டுநாயகே சர்வதேச விமான நிலையத்தில் இருந்து எமிரேட்ஸ் மூலம் கிளம்பி சென்றதாக கூறப்படுகிறது. உலக தலைவர்களின் சொத்து விவரங்களை அம்பல படுத்திய ‘பண்டோரா பேப்பர்ஸ்’ எனும் ஆவணத்தில் நிருபமாவின்பெயர் இடம்பெற்றுள்ளது. இவரும், திருக்குமார் நடேசனும் இணைந்து, போலி நிறுவனத்தின் மூலம் லண்டன் மற்றும் சிட்னியில் சொகுசு பங்களாக்களை வாங்கியதாகவும், பல முதலீடுகளை செய்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

பிரதமர் மகிந்த ராஜபக்சே மகன் நமல் ராஜபக்சேவின் மனைவி லிமினி மற்றும் இவரது பெற்றோர்களும், கடந்த சில நாட்களுக்கு முன்னர் இலங்கையில் இருந்து கிளம்பி சென்றுள்ளதாக தெரிகிறது. மகிந்த ராஜபக்சே அமைச்சரவையில் நமல் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

கோத்தபயாவின் நெருங்கிய நண்பரும், அவன்கார்ட் நிறுவனத்தின் தலைவருமான நிஸ்ஸங்க சேனாதிபதியும் இரவோடு இரவாக இலங்கையில் இருந்து தப்பி சென்றுள்ளார். இவர் மீதிருந்த முறைகேடு மற்றும் லஞ்ச வழக்குகளை கோத்தபயா அதிபரானதும் ரத்து செய்திருந்த நிலையில் மக்கள் போராட்டம் வெடிக்க துவங்கியதும், குடும்பத்தினரோடு இலங்கையிலிருந்து கிளம்பி சென்றார். விமான நிலையத்தில் இவர் செல்லும் போது, கண்காணிப்பு கேமராக்கள், மேலிட உத்தரவின் பேரில் செயலிழக்க வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இலங்கையின் சென்ட்ரல் வங்கி தலைவர் அஜித் நிவாட் கப்ரால், வரும் 18 ம் தேதி வரை வெளிநாட்டிற்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளுக்கு செல்ல முடியாத நிலையில் உள்ள அமைச்சர்கள், தங்களின் குடும்பத்தினரோடு, சொகுசு ஓட்டல்களில் தங்கியுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.