இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் தந்ததாக வழக்கு – அமலாக்கத் துறை அலுவலகத்தில் டிடிவி தினகரன் ஆஜர்

சென்னை: இரட்டை இலை சின்னத்தை பெற தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக பதிவு செய்யப்பட்ட வழக்கு விசாரணைக்காக டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆஜரானார்.

இரட்டை இலை சின்னத்தைப் பெறுவதற்காக, தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு டிடிவி தினகரன் லஞ்சம் கொடுக்க முயன்றதாகவும், இதற்காக இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகரிடம் ரூ.50 கோடி பேரம் பேசியதாகவும் புகார் எழுந்தது. இதுதொடர்பாக சுகேஷ் சந்திரசேகரை, 2017 ஏப்.16-ம் தேதி அமலாக்கத் துறையினர் கைது செய்தனர்.

அமலாக்கத் துறையினர் தினகரனிடம் விசாரணை நடத்தியபோது, ‘‘சுகேஷ் சந்திரசேகர் யார் என்பதே எனக்கு தெரியாது. அவரிடம் நான் பேசியதும் கிடையாது’’ என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட டிடிவி தினகரன், தற்போது ஜாமீனில் இருக்கிறார்.

இதற்கிடையே, சுகேஷிடம் அமலாக்கத் துறையினர் நடத்திய விசாரணையில், தினகரன் முன்பணமாக ரூ.2 கோடி கொடுத்ததாக தெரிவித்துள்ளார். சுகேஷின் இந்த வாக்குமூலத்தை அடிப்படையாக வைத்து, டெல்லி அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஏப்.8-ம் தேதி ஆஜராகுமாறு தினகரனுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், அன்று அவர் ஆஜராகவில்லை.

இந்நிலையில், டெல்லி அமலாக்கத் துறை அலுவலகத்தில் தினகரன் நேற்று ஆஜரானார். சுகேஷின் வாக்குமூலம் அடிப்படையில் அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.