ஊரக வளர்ச்சித் துறையில் தேசிய அளவில் தமிழகம் சிறப்பாக செயல்படுகிறது: பெரியகருப்பன் பேச்சு

புதுடெல்லி: இந்தியா சுதந்திரம் அடைந்ததின் 75ம் ஆண்டு விழா, ‘சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழா’ என்ற பெயரில் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. ஒன்றிய அரசின் ஊராட்சித் துறை அமைச்சகம் சார்பில், கடந்த 11 முதல் 17ம் தேதி வரையில்  டெல்லியில் இந்த விழா கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு டெல்லி விக்யான் பவனில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியின் முதல் நாளான நேற்று முன்தினம், அனைத்து மாநில ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர்கள், துறை செயலர்கள்  கலந்து கொண்டனர். தமிழகத்தின் சார்பில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரிய கருப்பன், துறையின் முதன்மைச் செயலாளர் பி.அமுதா கலந்து கொண்டனர். இதில் பேசிய அமைச்சர் பெரிய கருப்பன், ‘‘தமிழகத்தை சேர்ந்த 180 ஊரக உள்ளாட்சிப் பிரதிநிதிகளும், அலுவலர்களும் இந்த விழாவில் கலந்து கொள்கின்றனர். தேசியளவில் தமிழகம் சிறப்பாக செயல்படுகிறது. ஊராட்சிகளின் சொந்த வருவாயை பெருக்குதல், அதற்கான கட்டமைப்பினை உருவாக்குதல் போன்றவற்றை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் தரப்பில் எடுத்துரைக்கப்படுகிறது. தமிழகம் நீடித்த வளர்ச்சி இலக்குகளை எட்டிடும் வகையில் சிறப்பாக திட்டமிடுதல், செயல்படுத்துதல் போன்ற நடவடிக்கைகள் மாநில அரசால் மேற்கொள்ளப்படும்,’’ என தெரிவித்தார். பின்னர், அவர் அளித்த பேட்டியில், ‘‘இந்த நிகழ்ச்சியில் மற்ற மாநிலங்களில் இல்லாத வகையில் தமிழகத்தில் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன என்பது விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. குறிப்பாக சமத்துவபுரம் திட்டம் பற்றி பேசப்பட்டது. மேலும், ஒன்றிய அரசு தெரிவித்துள்ள அனைத்து திட்டங்களையும் செயல்படுத்த உள்ளோம் என்றும் தெரிவிக்கப்பட்டது,’’ என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.