திருப்பதி தேவஸ்தான ஓவியரின் கைவண்ணத்தில் செம்மொழி எழுத்துக்களில் ஏழுமலையான் – தமிழ் வருடப் பிறப்பிற்காக ஓவியர் ஆனந்த் சிறப்பு பேட்டி

திருப்பதி: திருப்பதி ஏழுமலையானை தமிழ் எழுத்துக்களை கொண்டு தேவஸ்தான ஓவியர் ஒருவர் வெகு சிறப்பாக வரைந்துள்ளார்.

திருப்பதி தேவஸ்தானத்தில் ஓவியராக பணியாற்றி ஓய்வுபெற்றவர் ஆனந்த். காளஹஸ்தியை சேர்ந்த இவர், தற்போது திருப்பதி கபில தீர்த்தம் அருகே வசித்து வருகிறார். பணிக் காலத்தில் மட்டுமின்றி, பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னரும் பெருமாளின் நினைவாக, ஓவிய சேவை செய்து வருகிறார்.

இவர் செம்மொழியான தமிழ்எழுத்துக்களை கொண்டு, காண்போர் வியக்கும் வகையில் ஏழுமலையானின் ஓவியத்தை வரைந்துள்ளார்.

இதனை தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு ‘இந்து தமிழ் திசை’க்காக அவர் வெளியிட்டார்.

‘இந்து தமிழ் திசை’யிடம் அவர் கூறியதாவது:

நான் காளஹஸ்தியில் பிறந்து வளர்ந்தவன். படிக்கும் போதே ஓவியத்தில் அதிக நாட்டம் இருந்தது. 1979-ம் ஆண்டு திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் ஒப்பந்த அடிப்படையில் ஓவியனாக சேர்ந்தேன். பேனர்கள் வரைவது, பிரம்மோற்சவத்திற்கு திருமலையில் சுவர்களில் வரைவது போன்ற பணிகளை செய்து வந்தேன்.

அந்தக் காலங்களில் ஏழுமலையான் கோயிலுக்குள் தமிழக பெண் பக்தர்கள் தினமும் கோலம்போடுவதை வழக்கமாக கொண்டிருந்தனர். அப்போது நானும் கோலம் போட கற்றுக்கொண்டு, கோயிலில் கோலம் போட்டேன். இது அனைவருக்கும் பிடித்துப் போக, கோயில் முழுவதும் கோலம் போட்டேன். பிறகு மாட வீதிகள், வராக சுவாமி கோயில், பேடி ஆஞ்சநேயர் கோயில் என திருமலையில் உள்ள பல கோயில்களில் கோலம் போட்டேன். பின்னர் திருச்சானூர் பத்மாவதி தாயார், கோவிந்தராஜ சுவாமி, கோதண்டராமர் கோயில், கபில தீர்த்தம் என திருப்பதியில் உள்ள தேவஸ்தான கோயில்கள் அனைத்திலும் பெரிய அளவில் கோலம் போட்டேன்.

ஆண்டாள் திருப்பாவையை 30 நாட்களுக்குள் அனைவருக்கும் புரியும்படி ஓவியமாக்கினேன். இதற்கான என்னைப் பாராட்டி பரிசு வழங்கினர். தற்போது திருப்பதியில் உள்ள சில்பாராமம் மியூசியத்தில் எனது ஓவியங்கள் தான் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளன. சப்தகிரி புத்தகத்திற்கும் நான் பல படங்களை வரைந்துள்ளேன். திருமலையில் உள்ள மியூசியத்திலும் எனது ஓவியங்கள் பல இடம்பெற்றுள்ளன. இதெல்லாம் எனக்கு மிகவும் பெருமைதந்த விஷயங்கள். அன்னமைய்யா, புரந்தரதாசர் மற்றும் ஆழ்வார்கள் சிலரின் ஓவியங்களும் வரைந்துள்ளேன். விரைவில் 12 ஆழ்வார்களையும் ஓவியங்களாக வரைய திட்டமிட்டுள்ளேன்.

கடந்த 2021, ஜூன் மாதம் பணியிலிருந்து ஓய்வு பெற்றேன். ஓய்வு பெற்றாலும் ஏழுமலையானின் நினைவாகவே உள்ளது. எனக்கு பத்மாவதி தாயார் மீதும் பக்தி அதிகம். இதனால் எனது மகளுக்கு பத்மாவதி என்றே பெயர் சூட்டினேன்.

தற்போது 108 நாட்கள் விதவிதமாக பத்மத்தை (தாமரை) வரைய திட்டமிட்டேன். தினமும் கண்டிப்பாக ஒரு படம் வரைய வேண்டுமென முடிவு செய்தேன். அதன்படி தினமும் இரவு, குளித்து விட்டு சுவாமியின் முன் அமர்ந்து விடிவதற்குள் படத்தை வரைந்து விடுவேன். அப்படியாக 108 படங்கள் மிக சிறப்பாக வந்துள்ளன.

அதனை தொடர்ந்து, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பிறந்த ஆச்சாரியரான ராமானுஜரின் நினைவு வந்தது. மேலும் 12 ஆழ்வார்கள் பேசிய அந்த தமிழும் நினைவுக்கு வந்தது. ஆதலால் செம்மொழி அந்தஸ்து பெற்றுள்ள தமிழ் எழுத்துக்கள் மூலம் ஏழுமலையானை வரைய வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. எனக்கு தமிழ் தெரியாது. இதன் காரணமாக சென்னையில் வசிக்கும் எனது உறவினர்கள் விஜயா, காஞ்சனா ஆகியோரின் உதவியுடன் தமிழ் எழுத்துக்களால் அந்த திருவேங்கடவனை வரைந்தேன். இப்படத்தை தமிழ்ப் புத்தாண்டு வருவதால், இந்து தமிழ் திசை மூலம் வெளியிட விரும்பினேன். இது தமிழர்கள் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும் என நினைக்கிறேன்.

இவ்வாறு ஓவியர் ஆனந்த் தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.