“பாஜக உறுப்பினர் தற்கொலை வழக்கு; அமைச்சர் மீது வழக்கு பதிவு!" – முதல்வர் பசவராஜ் பொம்மை தகவல்

கர்நாடக அமைச்சர் கே.எஸ்.ஈஸ்வரப்பா மீது ஊழல் குற்றச்சாட்டு கூறிய சந்தோஷ் பட்டீல் என்பவர் உயிரிழந்த விவகாரத்தில், ஈஸ்வரப்பா அவர் உதவியாளர்கள் 2 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

பா.ஜ.க உறுப்பினரும், ஒப்பந்ததாரருமான சந்தோஷ் பட்டீல் என்பவர், பெலகாவியின் ஹிகால்டோ கிராமத்தில் சாலை அமைப்பதற்கு ரூ.4 கோடி கமிஷன் கேட்டதாகக் கர்நாடக ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் கே.எஸ்.ஈஸ்வரப்பா மீது ஊழல் குற்றச்சாட்டு கூறியிருந்தார்.

சந்தோஷ் பட்டீல்

அதனைத்தொடர்ந்து கடந்த திங்கள்கிழமை முதல் மயமானதாகக் கூறப்பட்ட சந்தோஷ் பட்டீல், போலீஸாரால் உடுப்பியில் உள்ள விடுதியொன்றில் நேற்று சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். சந்தோஷ் பட்டீல் மரணம் தற்கொலை என கூறப்பட்டதையடுத்து அவரின் குடும்பத்தினர், அமைச்சர் ஈஸ்வரப்பா மீது காவல்துறையில் புகாரளித்தனர். அதனடிப்படையில், ஈஸ்வரப்பா அவர் உதவியாளர்கள் 2 பேர் மீது, இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 306-ன் கீழ் தற்கொலைக்குத் தூண்டியதாக போலீஸார் நேற்றிரவு வழக்கு பதிவு செய்தனர்.

கர்நாடக அமைச்சர் கே.எஸ்.ஈஸ்வரப்பா

இந்த நிலையில், ஈஸ்வரப்பா மீதான வழக்கு பதிவு தொடர்பாக செய்தியாளர்களிடத்தில் பேசிய கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, “இது தொடர்பான அனைத்து தகவல்களையும் நாங்கள் சேகரித்துள்ளோம். ராஜினாமா செய்வது குறித்து அவர் என்ன கூறினார் என்பது எனக்குத் தெரியாது. இதுகுறித்து அவரிடம் நான் பேசுவேன். நாங்கள் இருவரும் நேரடியாகப் பேசும்போது அது என்ன என்பது தெளிவாகி விடும்” என்று கூறினார்.

இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சியான காங்கிரஸ், கர்நாடக அமைச்சரவையிலிருந்து ஈஸ்வரப்பாவை நீக்கவேண்டுமென்று கோரி ஆளுநர் தாவர் சந்த் கெலாட்டிடம் குழு ஒன்றை அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.