ஹஜ் பயணம் செல்ல 22-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம்: பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள்

சென்னை:

பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை முதன்மை செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சவுதி அரேபியாவின் ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகத்தின் தற்போதைய அறிவிப்பின்படி இந்த ஆண்டில் (ஹஜ் 2022) ஹஜ் பயணம் கீழ்காணும் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு நடைபெறும்.

சவுதி அரேபியா அரசாங்கத்தின் சுகாதாரத்துறையால் அங்கீகரிக்கப்பட்ட கோவிட்19-க்கு எதிரான தடுப்பூசிகள் செலுத்தப்பெற்ற 65 வயதிற்குட்பட்டவர்கள்.

ஹஜ் விமானம் புறப்படுவதற்கு 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட கோவிட்-19, பி.சி.ஆர். பரிசோதனையில் நெகடிவ் என உறுதி செய்யப்பட்ட மருத்துவச்சான்று உடையவர்கள்.

மேலும், ஹஜ் கிரியைகளை நிறைவேற்றும்போது கடைபிடிக்கப்பட வேண்டிய அனைத்து சுகாதாரம் சம்பந்தப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் ஹஜ் பயணத்தில் தவறாது கடைபிடிக்க வேண்டும் எனவும் சவுதி அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது.

30-ந்தேதி வரை 65 வயதைக் கடந்த அனைத்து ஹஜ் விண்ணப்பதாரர்களும் ஹஜ் 2022-க்கு தகுதியற்றவராவர். இதனால், பெண் பயணிக்கு ஆண் வழிதுணையாக விண்ணப்பித்த 65 வயதைக் கடந்த மெஹ்ரம் விண்ணப்பதாரர்கள் தகுதியற்றவர்களாகக் கருதப்படுவார்கள். இந்த அறிவிப்பால் 70+ வகையில் துணை பயணியாக விண்ணப்பித்தவரும் பாதிக்கப்படுவர்.

இந்திய ஹஜ் குழு வெளியிட்ட கடந்த 9-ந்தேதி வெளியிட்ட சுற்றாணையில் ஹஜ் 2022-க்காக புதிதாக விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ஆன்லைன் மூலம் 9-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை கீழ்க்காணும் நிபந்தனைகளுக்குட்பட்டு விண்ணப்பிக்கலாம்.

22-ந்தேதி அன்று அல்லது அதற்கு முன்னர் வழங்கப்பட்டு குறைந்தது 31-ந்தேதி வரை செல்லத்தக்க இயந்திரம் மூலம் படிக்கத்தக்க பன்னாட்டு பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள்.

30-ந்தேதி அல்லது அதற்கு முன்னர் 65 வயதை பூர்த்தி செய்யாத சவூதி அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட கோவிட்-19-க்கு எதிரான தடுப்பூசிகளை செலுத்தியிருத்தல் வேண்டும்.

வயது தகுதியின்மை காரணத்தால் பெண் பயணிக்கு மெஹ்ரமாக ஏற்கனவே விண்ணப்பித்த இடத்திற்கு புதிதாக ஆண் வழித்துணையாக விண்ணப்பிக்கலாம்.

ஹஜ் கிரியைகளை நிறைவேற்றும்போது அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், உடல்நலம் மற்றும் பாதுகாப்பு அம்சங்களையும் கடைபிடிக்க வேண்டும்.

தற்போது சவுதி அரசால் விதிக்கப்பட்ட நிபந்தனைகளை கடைபிடிக்க விரும்பாதவர்கள் ஹஜ் 2022-க்கான விண்ணப்பங்களை திரும்பப் பெறலாம். மேலும், ரம்ஜான் மாதத்தின் உம்ரா ஏற்பாடு மூலம் கிடைக்கும் அனுபவத்தைக் கொண்டு சவுதி அரசாங்கம் சுகாதாரம் மற்றும் நிர்வாக தொடர்பாக கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்க நேரிடும் எனவும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.