'’கேஜிஎஃப் 2’ விமர்சனம்: அள்ள அள்ள குறையாத ஆக்‌ஷன் சுரங்கம் இந்த ‘KGF’! சாப்டர் 2

‘யாரோ 10பேர அடிச்சு டான் ஆகல. அவன் அடிச்ச 10 பேருமே டான்’. ராக்கி பாயைத் தெரியாத சினிமா ரசிகர்கள் இந்தியாவில் அரிது. அவரது இரண்டாவது அத்தியாயம் வெளியாகிறதென்றால் சும்மாவா? அரங்கங்கள் ஆர்ப்பரிக்க இன்று காலை தன் காலை எடுத்து வைத்திருக்கிறார் ராக்கி பாய்

’கேஜிஎஃப்’ முதல் பாகத்தில் மெயின் வில்லன் கருடனை சுட்டு தள்ளுவதற்கான வாய்ப்பு முன்கூட்டியே கிடைத்தும் ’விட்டுத்தள்ளு’ என்று அமைதி காத்து க்ளைமாக்ஸில் கருடனை வெட்டிவீசி ’கேஜிஎஃப்’ சாம்ராஜ்யத்தை ஆள்வதற்காக கால் தடம் பதித்திருப்பார் யஷ். அந்த சாம்ராஜ்யத்தை எப்படி மாபெரும் சாம்ராஜ்யமாக கட்டியெழுப்புகிறார்? கருடனைக் கொல்ல அனுப்பிய வில்லன் ஒரு பக்கம், கொல்லப்பட்டதாக சொல்லப்பட்ட அதிரா (சஞ்சை தத்) மீண்டும் குரோத தாண்டவத்துடன் கொலைவெறியோடு வருவது இன்னொரு பக்கம், இடையில் இந்திய அரசே யஷ்ஷை பிடிக்க வழி தேடுவது என நீளும் பலமுனை தாக்குதல்களை யஷ் எப்படி எதிர்கொள்கிறார் என்பதே ’கேஜிஎஃப் – சேப்டர் 2’

முதல் பாகத்தில் நடித்த அதே எஃபர்ட், அதே எஃபெக்ட் யஷ்ஷிடம். இந்த ராக்கி பாய் மீண்டும் பார்வையாளர்களின் கண்களில் தீப்பற்ற வைக்கிறார் . அவர் அறிமுகக் காட்சிக்கு கேட்கும் விசில் சத்தம் சொல்லிவிடும் ராக்கி பாய் சக்தி என்னவென்பதை. காட்சிக்குக் காட்சி கைத்தட்டல்கள்கூட துப்பாக்கியிலிருந்து துளைக்கவரும் தோட்டாக்கள் போல வெடித்து சிதறுகின்றன. ஓடிடி காலத்தில் திரையரங்குகளில் படம் பார்க்கும் வழக்கத்தைக் காப்பாற்ற ராக்கி பாய்கள் அவசியம்.

அம்மா செண்டிமெண்ட் யாருக்குத்தான் பிடிக்காது? அம்மா மகன் ஃப்ளாஷ்க்பேக் காட்சிகளில் பார்வையாளர்களை தங்கமாய் உருக்கிவிடுகிறார்கள்.அதே சமயம் அர்னால்டு போன்ற அவரது உடலமைப்பால் எத்தனை பேரை அடித்து உதைத்து தூக்கியெறிந்தாலும் நம்ப முடிகிறது. ’கேஜிஎஃப்’ முதல் பாகத்தில் அடிமை மக்களின் மீட்பராகவும் ’கேஜிஎஃப் 2’வில் அம்மக்களை வழிநடத்தும் மேய்ப்பராகவும் மெய்ச்சிலிர்க்கவைக்கிறார் யஷ்.

வயலன்ஸைப் போலவே ரொமான்ஸும் நன்றாகவே வருகிறது யஷுக்கு. முதல் பாகத்திலேயே யஷ்ஷை ‘என்னோட ராக்கி’ என்று உரிமைக் கொண்டாடும் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி, இதில், ‘உர்ர்ர்’ என்று முரண்டு பிடிப்பதுபோலவே தொடர்வது கொஞ்சம் முரணாக இருந்தாலும் க்ளைமாக்ஸை நெருங்கும்போது, யஷ்ஷுக்கு அரணாக மாறி பார்வையாளர்களின் இதயங்களைக் கொய்துவிடுகிறார். கொஞ்சநேரமே யஷுடன் கொஞ்சி பேசினாலும், இன்னும் கொஞ்சநேரம் கொஞ்சி பேசக்கூடாதா என்று ஏங்க வைத்துவிடுகிறார். அதுவும், அவரது வெட்கம் சொக்க வைத்துவிடுகிறது.

image

பச்சத்தண்ணியைக் குடித்துவிட்டு பாயாசம் சாப்பிட்ட எஃபெக்ட் கொடுப்பதுபோல, கருடனைப் போட்டுத்தள்ள யஷிடம் டீல் பேசிய வில்லன்கள், இதில் வெறும் பில்ட் அப் மட்டுமே கொடுத்துக் கண்டிருக்கிறார்கள். அதிராவாக வரும் சஞ்சய் தத் ஆரம்பக் காட்சிகளில் மட்டுமே அதிரவைக்கிறார். கதைக்கு இன்னொரு ஹீரோ இல்லாததால் சஞ்சய் தத், யஷ்ஷை உயிரோடு விடுகிறார். கதைக்கு இன்னொரு பெரிய வில்லன் கிடைக்காததால் சஞ்சய் தத்தை உயிரோடு விடுகிறார் யஷ். திடீரென்று, படைபலத்துடன் வரும் சஞ்சய் தத், திடீரென்று நிராயுதபானியாகிவிடுறார். மீண்டும் அதே படைபலத்துடன் வந்து பழிவாங்குகிறார். கே.ஜி.எஃப்க்குள் இருக்கும் மக்களை பயமுறுத்த, பலவீனப்படுத்த ஹீரோ ராக்கியை கொல்லாமல் ரத்தக்காயங்களுடன் அனுப்புவதில் ஒரு லாஜிக் இருக்கிறது. ஆனால், பதிலுக்கு வில்லனை உயிரோடு அனுப்பும்போது ‘தப்பு பண்ணிட்டீங்களே ராக்கி பாய்’ என்று சொல்லவைக்கிறது.

’கேஜிஎஃப் ’ முதல் பாகத்தில் வசனம் எழுதியவர்கூட குத்துச்சண்டைப் பயிற்சி எடுத்திருப்பாரோ என்று யோசிக்க தோன்றுயது. முதல் பாகத்தைப் போலவே ‘கேஜிஎஃப் 2’ படத்திலும் ஒரு சில பஞ்ச் வசனங்களால் யுத்தம் செய்கிறார்கள். பேனாவிற்கு பதிலாக ரத்தம் உறிஞ்சிய சிரஞ்சியால் வசனம் எழுதியிருப்பார்களோ என்னவோ, யஷ் பேசும் ‘ஐ டோன்ட் லைக் வயலன்ஸ்’ வசனமே ‘வயலன்ஸ்’ வெறியாட்டம் ஆடுகின்றன. உலை கொதிப்பதுபோல் ஒவ்வொரு வசனமும் நம் ரத்தத்தை கொதிக்க வைத்தாலும், ’கேஜிஎஃப்’ முதல் பாகம் சுத்தியலால் சுத்தி சுத்தி அடித்ததுபோல் ’கேஜிஎஃப் 2’வில் வசனங்களை எதிர்பார்க்கக்கூடாது. வசனம் எழுதியவர்கள் மாற்றப்பட்டார்களா? வசனம் எழுதியவர்களுக்கு சரியான பேமெண்ட் சென்றதா என்பதெல்லாம் விசாரணை செய்யப்படவேண்டும். ஆனால், வசனங்களைவிட சண்டைக் காட்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. ‘அன்பறிவ்’ மாஸ்டர்களின் சண்டைக் காட்சிகள் ஒவ்வொன்றும் இடியாக இறங்குகிறது.

image

முதல் பாகத்தில் சொன்ன பத்திரிகையாளர் ஆனந்த் நாக் மீண்டும் கதைச் சொல்ல ஆரம்பித்தால் ரசிகர்களுக்கு ரிப்பீட் ஆகி, போர் அடித்துவிடும் என்றுணர்ந்து ஆள்மாற்றி சொன்ன விதத்திலேயே ஆல்பாஸ் செய்து விடுகிறார் இயக்குநர் பிரஷாந்த் நீல். கிரிமினல்களை அரசியல் அதிகாரத்தால் சட்டப்படி இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கமுடியாமல் போவது ஏன் என்ற அரசியலையும் அம்பலப்படுத்தியிருக்கிறார். அதேபோல், ஹீரோ செய்வதால் அச்செயலை நியாயப்படுத்தவுமில்லை.

ஆனந்த் நாக்கிற்கு பதிலாக மீதிக்கதையை நகர்த்துகிறார் பிரகாஷ் ராஜ். இயக்குநர் சொன்னதைக் கேட்டு அப்படியே பிரதிபலித்திருக்கிறார். அவரது, கெட்-அப்பும் நன்றாகவே ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது. பிரதமர் ரமிகா சென்னாக பிரமாதப்படுத்தியிருக்கிறார் ரவீனா டாண்டன். ’அவளை விடாத. அவக் கோவம் உனக்குத் தெரியாது’ என்று ரவீனா டாண்டனைக் கொலை செய்ய சொல்லும் வில்லனிடம் ”வரலாறு புராணங்களே சொல்லுது. பெண்களுக்கு கோவம் வந்தா கை ஓங்கக்கூடாது. அலங்காரம் பண்ணி பொட்டு வச்சி ஆராதனைப் பண்ணி கையெடுத்துக் கும்பிடணும்” என்று யஷ் பேசுவது ரசிக்க வைக்கிறது.

’வயலன்ஸ்… வயலன்ஸ்… வயலன்ஸ்’ என ரத்த ஆறு ஓடிக்கொண்டிருக்கும்போது யஷ்-ஸ்ரீநிதி காதல் காட்சிகள் ’சைலன்ஸ்… சைலன்ஸ்’ என ஆற்றுப்படுத்துகிறது. அதுவும், கரண்ட் கட் ஆகி நாயகிக்கு வியர்க்கும்போது ஓடிவந்து விசிறிருந்தால் அவர் சாதா பாய் ஆகியிருப்பார். ஆனால், நாயகிக்கு காற்றுவர யஷ் செய்யும் செயல் ‘ராக்கி பாய்’ என நிரூபித்து நம்மை அவரது விசிறியாக்கி விடுகிறது. ஹார்ட்டின்ஸ் யஷ் அண்ட் பிரஷாந்த் நீல்.

முதல் பாகத்தில் பின்னணி இசையும் பிஜிஎம்மும் பிகிலடிக்க வைத்த இசையமைப்பாளர் ரவி பஸ்ரூரின் பின்னணி இசையும் பாடல்களும் ஜஸ்ட் பாஸ். புழுதிப் பறக்கும் கதைக்களத்தையும் மிரளவைக்கும் ஹெலிகாப்டர் பிரம்மாண்டங்கள், கப்பல் இறுதிக்காட்சி என புவன் கெளடா ஹாலிவுட் ஆக்கிவிடுகிறார். குறிப்பாக, நாயகன் யஷ்ஷை செம்ம ஸ்டைலிஷ்ஷாக காட்டிய காஸ்டியூம் டிசையனர் கோகுல் ஜி ராஜுக்கு டிசைன் டிசைனான வாழ்த்துகள். இயக்குனருக்கும்தான்.

image

உழைப்பு பிரம்மாண்டத்தால் செதுக்கப்பட்ட ’கேஜிஎஃப் 2’வில் சில குறைகளும் உள்ளன. பில்டப், வயலன்ஸ் என ஏற்கனவே பார்த்துவிட்டதால் கொஞ்சம் ஓவர் டோஸ்போல் உணர வைக்கிறது. ராக்கிபாய்க்கு முன்னால் வில்லன்கள் பூச்சாண்டிகள் போல தோன்றுகிறார்கள். பாடல்கள் பெரிதாக ஒன்றவில்லை. கருடனை விட பெரும் டானாக சஞ்சய் தத் கெத்து காட்டுவார் என்று பார்த்தால் வெத்து காட்டியிருக்கிறார். அவரது, நடிப்பு பெரிதாக ஈர்க்கவில்லை. படம் ஆரம்பித்து யஷ் வருகைக்குப்பின் 30 நிமிடங்கள் திரைக்கதை சுவாரசியத்தை ஏற்படுத்தவில்லை. மற்றபடி, க்ளைமாக்ஸ் எதார்த்தமானதாகவும் எதிர்பார்க்காததாகவும் இதயத்தைத் துளைத்துவிடுகிறது.

படத்தின் இறுதிக் காட்சியில் “எங்க அப்பா இங்க இருந்தா, இந்தக் கதையை புராணத்துல வர்ற பேய் பிசாசு, போர் வீரர்கள் கதையா சொல்லிருக்கமாட்டார். இதிகாசத்துல வர்றக் கதைகள் போலவும் சொல்லிருக்க மாட்டார். ஒரு சின்ன கிராமத்துல இருக்க ஒரு தாயின் பிடிவாதத்தோட கதையா சொல்லிருப்பார்’ என்கிறார் பிரகாஷ் ராஜ். அவர் கூறியது உண்மைதான். தாயின் பிடிவாதத்தால் படத்தின் எந்த குறைகளும் நமக்கு தெரிவதில்லை. தியேட்டரை விட்டு வெளியே வரும்போது நமக்குள்ளேயே உயிர்ப்பித்து நம்மையே ஆள ஆரம்பித்துவிடுகிறார் யஷ்.

’கேஜிஎஃப் 2’ சினிமா உலக சாம்ராஜ்ஜியத்தில் அழுத்தமாக தடம் பதித்த ஒரு மான்ஸ்டர். அவனது மூன்றாம் சாப்டருக்கான எதிர்பார்ப்பு இரண்டைவிட அதிகமாக இருக்கப் போகிறது என்பது நிச்சயம். வெல்டன் ராக்கி பாய்!

– வினி சர்பனா

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.