சசிகலா பினாமி வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க ஐகோர்ட்டு மறுப்பு

சென்னை:

மத்திய அரசு கடந்த 2016-ம் ஆண்டு ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் மதிப்பு இழப்பு செய்தது.

அப்போது, மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா தன் பினாமி மூலம் சுமார் ரூ.1,911 கோடி மதிப்பிலான ரூ.1000, ரூ.500 பணத்தை மாற்றியதாகவும், பல சொத்துக்களை வாங்கியதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. சென்னை பெரம்பூரில் உள்ள ஸ்பெக்ட்ரம் மாலில் பினாமி மூலம் முதலீடு செய்தாக வருமான வரித்துறை சில இடங்களில் சோதனை நடத்தியது.

இதுதொடர்பாக பாலாஜி என்பவரது சொத்தை வருமான வரித்துறை முடக்கியது. இதுகுறித்து அவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு தனி நீதிபதி, தள்ளுபடி செய்தார். இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் பாலாஜி மேல்முறையீடு செய்தார்.

இந்த வழக்கை நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்தியநாராயண பிரசாத் ஆகியோர் விசாரித்தனர். அப்போது மனுதாரர் தரப்பில், “சசிகலாவின் பணத்தை பல்வேறு இடங்களில் பினாமி பெயரில் முதலீடு செய்தார் என்றும் பினாமிகள் என்று பலர் மீது வருமான வரித்துறை நடவடிக்கை எடுத்தது. அப்போது, பினாமிகளுடன் செய்த புரிந்துணர்வு ஒப்பந்தம் ஆவணங்களை வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்தனர்.

ஆனால், என் வழக்கில் அப்படி ஒரு ஆவணம் பறிமுதல் செய்யப்படவில்லை. எந்த ஆதாரமும் இல்லாமல் என் மீது சந்தேகத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே, தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்து, எனக்கு எதிரான நடவடிக்கையும் ரத்து செய்ய வேண்டும் என்று வாதிடப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள், இந்த வழக்கில் வருமான வரித்துறை தரப்பின் கருத்தை கேட்காமல் இடைக்கால தடை உத்தரவு எதுவும் பிறப்பிக்க முடியாது என்று உத்தரவிட்டனர். மேலும், இந்த வழக்கிற்கு பதில் அளிக்க வருமான வரித்துறைக்கு உத்தரவிட்டு விசாரணையை வருகிற ஏப்ரல் 18-ந்தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.