பெண் முதல்வர் ஆளும் மாநிலத்தில் பெண்களுக்கெதிரான குற்றம் வெட்கக்கேடு – எம்பி விமர்சனம்

‘ஒரு பெண் முதலமைச்சர் ஆளும் மாநிலத்தில் பெண்களுக்கெதிரான குற்றச் செயல்கள் மிகவும் வெட்கக்கேடானது’ என விமர்சித்துள்ளார் திரிணாமுல் காங்கிரஸ் எம்பி சவுகதா ராய்.

மேற்குவங்க மாநிலம் நாடியா மாவட்டத்தில் உள்ள ஹன்ஸ்காலி பகுதியைச் சேர்ந்த பள்ளிச் சிறுமி ஏப்ரல் 4ம் தேதி இரவு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பஞ்சாயத்து தலைவர் மகன் பிறந்தநாள் பார்ட்டியில் கலந்துகொள்ள சென்றவர், மறுநாள் அதிகாலையே வீடு திரும்பியுள்ளார். ஆனால், உடல்நலம் குன்றிய நிலையில் வீடு திரும்பிய அந்த சிறுமி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதனிடையே உயிரிழந்த சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருக்கலாம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளன. தங்களது மகள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக அச்சிறுமியின் பெற்றோர் குற்றஞ்சாட்டியுள்ளனர்

image
இவ்விவகாரம் குறித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கருத்து தெரிவிக்கையில், ”பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு தான் சிறுமி இறந்தார் என ஊடகங்கள் தொடர்ந்து சொல்கிறார்கள். சிறுமி வன்கொடுமை செய்யப்பட்டாரா அல்லது கர்ப்பமாக இருந்தாரா, அல்லது அது ஒரு காதல் விவகாரமா என்பதை ஊடகங்கள் விசாரித்ததா? நான் இதை ஒரு காதல் விவகாரம் என்று கேள்விப்பட்டேன். சிறுமி ஏப்ரல் 5ம் தேதி இறந்துள்ளார். ஆனால், ஏப்ரல் 10ம் தேதி தான் போலீஸில் புகார் கொடுத்துள்ளனர். இறந்த அன்றே ஏன் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கவில்லை. மேலும், இறந்த அதே நாளில் உடல் தகனம் செய்துள்ளனர். தகனம் செய்ததால் இந்த வழக்கில் காவல்துறைக்கு ஆதாரம் எங்கே கிடைக்கும்” என்றார்.

image
இந்த நிலையில் சிறுமி பாலியல் வன்கொடுமை தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள திரிணாமுல் காங்கிரஸ் எம்பி சவுகதா ராய், ஒரு பெண் முதலமைச்சர் ஆளும் மாநிலத்தில் பெண்களுக்கெதிரான குற்றச் செயல்கள் மிகவும் வெட்கக்கேடானது என விமர்சித்துள்ளார். இதுகுறித்து சவுகதா ராய் கூறுகையில், ”பெண்களுக்கு எதிரான குற்றங்களைப் பற்றி அனைவரும் மிகவும் கவலைப்படுகிறார்கள். அது ஊடகங்களால் நடந்ததா என்று எனக்குத் தெரியவில்லை. இந்த விஷயங்களில் நாம் சகிப்புத்தன்மையற்றதாக இருக்க வேண்டும். இதில் ஏதேனும் மனித தவறு இருந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஒரு பெண் முதலமைச்சர் ஆளும் மாநிலத்தில் இதுபோன்ற குற்றச்செயல்கள் மிகவும் வெட்கக்கேடானது. காவல்துறையும் மாவட்ட நிர்வாகமும் இந்த உண்மையை கவனத்தில் கொள்ளும் என்று நான் நம்புகிறேன்” என்று கூறியுள்ளார்.

இதையும் படிக்க: முஸ்லிம் பெண்களுக்கு பகிரங்கமாக பாலியல் மிரட்டல் – 11 நாட்களுக்கு பிறகு உ.பி சாமியார் கைது

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.