கலவரம் நடந்த ஜஹாங்கீர்புரியில் உச்ச நீதிமன்றம் தடை விதித்த பிறகும் வீடுகளை இடித்த டெல்லி அதிகாரிகள்: தலைமை நீதிபதி இன்று விரிவான விசாரணை

புதுடெல்லி: டெல்லி ஜஹாங்கீர்புரியில் ஆக்கிரமிப்புகளை இடிக்கும் பணிக்கு இடைக்கால தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மத்தியப் பிரதேசம், பீகார், உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களைத் தொடர்ந்து, கடந்த 16ம் தேதி டெல்லி ஜஹாங்கீர்பூரி என்ற பகுதியில் நடைபெற்ற அனுமன் ஜெயந்தி விழாவின் போது இரு தரப்பினர் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. இதில் கற்கள் வீசப்பட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள், வீடுகள் ஆகியவை சேதமடைந்தன. இந்நிலையில், இந்த பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கைகளை இந்த மாநில அரசுகள் எடுத்தன.ஜமாய் உலாமா இ ஹிந்த் என்ற அமைப்பு இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அதில், ‘ராமநவமி, அனுமன் ஜெயந்தி விழாக்களின் போது டெல்லி உட்பட பல்வேறு மாநிலங்களில் கலவரங்கள் நடந்துள்ளது. இதுபோன்ற சூழலில் சந்தேகத்தின் பெயரில் இஸ்லாமியர்களின் வீடுகள், கடைகள் குறிவைத்து  இடிக்கப்படுகின்றன. எனவே, ஆபத்தான இந்த அரசியலை கைவிடும்படி சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்,’ என கூறப்பட்டுள்ளது.இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர இருந்த நிலையில், வடக்கு டெல்லி நிர்வாகம் அளித்த நோட்டீசை அடிப்படையாகக் கொண்டு நேற்று காலை ஜஹாங்கீர்புரி பகுதியில் இருக்கும் ஆக்கிரமிப்பு மற்றும் கலவரத்தில் பங்கேற்றவர்கள் என்று சந்தேகப்பட்டவர்கள் எனக்கூறி அவர்களது வீடுகளை புல்டோசர் கொண்டு இடிக்கும் பணி துவங்கியது. சுமார் பத்துக்கும் மேற்பட்ட புல்டோசர்கள் இந்த இடிப்பு பணியை மேற்கொண்டனர். இதற்கு பாதுகாப்பு அளிக்கும் விதமாக நூற்றுக்கணக்கான போலீசாரும் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டனர். இதனால் நேற்று காலை 9 மணி முதல் 11 மணி வரையில் ஜஹாங்கீர்புரியில் பதற்றம் நிலவியது. அங்கு வசிப்பவர்களும் பாதுகாப்பை கருதி அங்கிருந்து வெளியேறியவாறு இருந்தனர்.இந்நிலையில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வில் மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபில், துஷ்யந் தவே, சஞ்சய் ஹெக்டே ஒரு அவசர கோரிக்கையை வைத்து முறையிட்டனர். அதில், ‘‘டெல்லி ஜஹாங்கீர்புரி பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற முறையாக நோட்டீஸ் வழங்கவில்லை. இன்று (நேற்று) காலை 9 மணி முதல் இடிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது முற்றிலும் சட்டவிரோதமான செயல். அதனால் இதுதொடர்பான ரிட் மனுவை அவசர வழக்காக இன்றே விசாரித்து ஒரு உத்தரவை பிறப்பிக்க வேண்டும்,’ என தெரிவித்தனர்.இதையடுத்து, தலைமை நீதிபதி என்.வி.ரமணா பிறப்பித்த உத்தரவில், ‘இந்த விவகாரத்தில் மனுதாரர்களின் கோரிக்கையை நீதிமன்றம் ஏற்றுக்கொள்கிறது. இதுதொடர்பான வழக்கானது உரிய அமர்வில் பட்டியலிட்டு நாளை (இன்று) விசாரிக்கப்படும். அதுவரையில் ஜஹாங்கீர்புரியில் ஆக்கிரப்புகளை இடிக்கும் விவகாரத்தில் மேற்கொண்டு எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் தற்போதைய அமைதி நிலை தொடர வேண்டும் என நீதிமன்றம் இடைக்கால தடை விதிக்கிறது. அதை விடுத்து மாநகராட்சி தரப்பில் ஏதேனும் இடையீட்டு செய்யும் பட்சத்தில் அது மீண்டும் வன்முறை ஏற்பட காரணமாக அமைந்து விடும். மேலும், இந்த வழக்கில் இறுதி தீர்ப்பு வெளியாகும் வரையில் இந்த உத்தரவு என்பது பொருந்தக் கூடியதாகும்,’ என அதிரடி உத்தரவை பிறப்பித்தார்.ஆனால், உச்ச நீதிமன்றம் தடை விதித்த பிறகும் அதனை பொருட்படுத்தாமல் தொடர்ந்து இடிக்கும் பணியை மாநகராட்சி அதிகாரிகள் செய்து வந்தனர். இது குறித்து அவர்களிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, ‘ஜஹாங்கீர்புரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது எங்களுக்கு தெரியாது. மேலும், அது குறித்த உத்தரவு நகல் எங்களுக்கு கிடைக்கவில்லை என்பதால் இடிக்கும் பணியை நிறுத்த முடியாது,’ என திட்டவட்டமாக தெரிவித்து பிற்பகல் வரையில் இடிப்பு பணியை தொடர்ந்தனர். இதையடுத்து உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் நகல் கிடைத்தவுடன் இடிக்கும் பணியானது நிறுத்தப்பட்டது. நேற்று நடந்த ஆக்கிரமிப்பு இடிப்பு நடந்து கொண்டிருந்த போது அப்பகுதியில் இருந்த மசூதியின் சுற்றுச்சுவரும் புல்டோசரால் இடித்து கீழே தள்ளப்பட்டது. இதையடுத்து இஸ்லாமியர்கள் பெரும்பாலானோர் அங்கு கூடியதால் பதற்றம் நிலவியது.* கர்கோனில் ஊரடங்கு தளர்வுமத்திய பிரதேசத்தின் கர்கோனில் கடந்த 10ம் தேதி நடந்த ராமநவமி ஊர்வலத்தில் வன்முறை ஏற்பட்டது. இதையடுத்து அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில், 11 நாட்களுக்கு பிறகு அங்கு காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை ஒரே நேரமாக ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு, இந்த ஊரடங்கு தளர்வு காலை 8 மணி முதல் 12 மணி வரை மற்றும் மாலை 3 மணி முதல் 5 மணி வரை என இருவேறாக பிரித்து அளிக்கப்பட்டிருந்தது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.