திருவாரூர் தெற்கு ரத வீதிக்கு கருணாநிதியின் பெயர்… முற்றும் `திமுக Vs பாஜக'

திருவாரூர் தெற்கு ரத வீதிக்கு, முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதியின் பெயரைச் சூட்ட, திருவாரூர் நகர்மன்றத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு பாரதிய ஜனதா கட்சியினர், இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, விஸ்வ இந்து பரிஷித் உள்ளிட்ட இந்து அமைப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். ஆன்மீக சிறப்பும் பாரம்பர்ய பெருமையும் மிக்க திருவாரூர் தேரோடும் தெற்கு ரத வீதிக்கு, கடவுள் மறுப்பாளரான கருணாநிதியின் பெயரை சூட்டுவதை ஏற்க முடியாது எனவும் இது தொடர்பான தீர்மானத்தை திருவாரூர் நகர்மன்றம் திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி வருகிறார்கள். ஆனால் இப்பகுதி தி.மு.க-வினரோ, “தெற்கு ரத வீதிக்கு கருணாநிதியின் பெயரை சூட்டுவது பல வகைகளிலும் பொருத்தமானது” என தெரிவித்து வருகிறார்கள்.

மு.க.ஸ்டாலின் – கருணாநிதி

இதுகுறித்து நம்மிடம் பேசிய தி.மு.க.-வினர், “மறைந்த திமுக தலைவரும், தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதி, இந்திய அரசியலில் 50 ஆண்டுகாலம் தவிர்க்க முடியாத சக்தியாக வலம் வந்தவர். ஐந்து முறை தமிழக முதலமைச்சராக இருந்தவர். இந்தளவுக்கு புகழ்பெற்ற, கருணாநிதி திருவாரூர் மண்ணின் மைந்தர் என்பதை எண்ணி, திருவாரூரில் உள்ள அனைத்து தரப்பு மக்களுமே பெருமையாக கருதுகிறார்கள்.

இவர், தனது பள்ளி பருவத்தில் முதன் முதலில் தமிழ் கொடி ஏந்தி இந்தி திணிப்பை எதிர்த்து, தமிழ் வாழ்க என முழுக்கமிட்டு அரசியல் பயணத்தை தொடங்கிய இடம் திருவாரூர் தெற்கு வீதியாகும். இதை கருணாநிதியே பல முறை பதிவு செய்திருக்கிறார். அதனை நினைவு கூரும் விதமாக திருவாரூர் தெற்கு வீதிக்கு, `டாக்டர் கலைஞர் கருணாநிதி சாலை’ என பெயர் சூட்டி, திருவாரூர் நகராட்சி கூட்டத்தில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் கலைஞர் கருணாநிதி சாலை, கலைஞர் கருணாநிதி நகர் என்ற பெயருள்ளது. ஆனால் அங்கெல்லாம் இந்தளவிற்கு பொருத்தமான காரணம் இருக்க வாய்ப்பு குறைவு. ஆனால் கருணாநிதியின் பெயர் சூட்ட மிகவும் பொருத்தமான, நியாயமான காரணம் திருவாரூர் தெற்கு வீதிக்கு உள்ளது.

இதுவே மிகவும் காலதாமதமான பெயர் சூட்டல் தான். எங்கள் தலைவரின் பெயர் சூட்டுவதால் தெற்கு வீதி பெருமை அடைகிறது. திருவாரூர் தேரை ஓட வைத்ததே எங்கள் தலைவர் கருணாநிதி தான். இந்த தோரோடும் வீதிக்கு கருணாநிதியின் பெயரை சூட்டுவது பல வகைகளிலும் பொருத்தமானது’’ என்கிறார்கள்.

ஆனால் பா.ஜ.க-வினர், இந்து அமைப்பினர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை, “தமிழர்களின் மரபுகளையும், மாண்புகளையும், மதிக்கத்தக்க புராதன நினைவுச் சின்னங்களையும் வேரோடு அழிப்பதை, திமுக தொடர்ந்து தன் வேலையாக கொண்டு செயல்படுவது, தமிழக மக்களை மிகவும் புண்படுத்தக்கூடியதாகும். தமிழக அரசின் பாட நூலில், ஔவையார்… அகர வரிசைப்படி, அருளி செய்த கொன்றை வேந்தன் பாடல்கள் அச்சிடப்பட்டுள்ளது. அன்னையும் பிதாவும், முன்னறி தெய்வம், ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்று எழுதுவதற்கு பதிலாக அகர வரிசைகளை சிதைத்து, விருப்பம் போல் மாற்றி, அன்னையும் பிதாவும், முன்னறி தெய்வம் என்பதற்கு அடுத்தபடியாக, ஊக்கம் உடைமை ஆக்கத்திற்கு அழகு என மாற்றப்பட்டுள்ளது. ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்ற பதிவுகளை நீக்குவதற்கு அதிகாரம் தந்தது யார்? தொன்மையான தமிழர் மரபுகளையும், மென்மையான தமிழ் இலக்கிய மரபுகளையும் சிதைப்பதற்கு தி.மு.க.-விற்கு யார் உரிமை தந்தது?

அண்ணாமலை

தமிழகத்தின் மிக தொன்மை வாய்ந்த புகழ் பெற்ற புண்ணியத் தலம் திருவாரூர் தியாகராஜர் சுவாமி திருக்கோவில். இங்குள்ள தெற்கு ரத வீதியின் பெயரை டாக்டர் கலைஞர் சாலை என்று பெயர் மாற்றம் செய்ய திருவாரூர் நகர்மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இறை நம்பிக்கையற்ற மனிதர் பெயரை எதற்காக திருக்கோவிலின் தேர் உலா வரும் தெருக்களில் ஒன்றுக்கு வைக்க வேண்டும். டாக்டர் கலைஞர் சாலை என்ற பெயர் சூட்ட விரும்பினால், திருவாரூரில் வேறு தெருக்கள் இல்லையா, தமிழர்களின் கடவுள் பக்தியை, இறை நம்பிக்கையை உதாசீனப்படுத்தாதீர்கள். திருவாரூர் தெற்கு ரத வீதியின் பெயரை கருணாநிதி என்ற பெயரில் மாற்றுவதற்கு தமிழக மக்களின் சார்பிலும் எங்கள் எதிர்ப்பினை பதிவு செய்கிறோம். தமிழக அரசு உடனடியாக இதில் தலையிட்டு, திருவாரூர் ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளின் திருக்கோவில், தெற்கு ரத வீதியின் பெயரை மாற்றாமல், மரபு வழி அதே பெயர் தொடர்ந்து இருக்க ஆவன செய்ய வேண்டும் என’’ தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் திருவாரூர் நகராட்சி இது தொடர்பான தீர்மானத்தை உடனடியாக திரும்ப பெறவில்லையென்றால், தமிழக அளவில் பல்வேறு அரசியல் கட்சிகள், இந்து அமைப்புகளை ஒன்று திரட்டி போராட்டம் நடத்தவும் நீதிமன்றத்தை நாடவும், திருவாரூர் பகுதியில் உள்ள இந்து அமைப்பின் நிர்வாகிகள் ஆயத்தமாகி வருவதாக சொல்லப்படுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.