மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் கீழ் மூன்று அறிவித்தல்கள், சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழான தீர்மானம் ஆகியவற்றுக்கு பாராளுமன்றம் இன்று ஒப்புதல்

பாராளுமன்றம் இன்று மு.ப 10.00 மணிக்கு கூடி சில நிமிடங்களில் இடைநிறுத்தப்பட்டு கட்சித் தலைவர்கள் மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் உறுப்பினர்களுடனான கூட்டம் கௌரவ சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நடைபெற்றது.

இதில் தினப்பணிகளின் கீழ் குறிப்பிட்ட வர்த்தமானிகளை விவாதத்துக்கு உட்படுத்தாது ஒப்புதல் வழங்க இணக்கம் காணப்பட்டது.

இன்றையதினத்துக்கான வாய்மூல விடைக்கான கேள்விகள் பிறிதொரு தினத்துக்கு ஆற்றுப்படுத்தப்படும் என சபாநாயகர் அறிவித்தார்.

தினப்பணிகளின் கீழ், மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் கீழ் நிதி அமைச்சரினால் ஆக்கப்பட்ட 2021.10.16ஆம் திகதிய 2249/50 ஆம் இலக்க, 2022.01.01ஆம் திகதிய 2260/78 ஆம் இலக்க மற்றும் 2022.01.01ஆம் திகதிய 2260/79 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானிகளில் வெளியிடப்பட்ட அறிவித்தல்கள் விவாதம் இன்றி சபையில் அங்கீகரிக்கப்பட்டன.

வர்த்தமானி அறிவித்தல்களைப் பார்வையிட

http://documents.gov.lk/files/egz/2021/10/2249-50_T.pdf

http://documents.gov.lk/files/egz/2022/1/2260-78_T.pdf

http://documents.gov.lk/files/egz/2022/1/2260-79_T.pdf

அத்துடன், சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழ் 2022.01.11ஆம் திகதிய 2262/14 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானிப் பத்திரிகையின் ஊடாக வெளியிடப்பட்ட  தீர்மானமும் விவாதம் இன்றி அங்கீகரிக்கப்பட்டது.

வர்த்தமானி அறிவித்தல்களைப் பார்வையிட

http://documents.gov.lk/files/egz/2022/1/2262-14_T.pdf

பின்னர் நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலை குறித்த விவாதத்தில் கட்சித் தலைவர்கள் உட்பட அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

பி.ப 4.30 மணிவரை நடைபெற்ற விவாதத்தைத் தொடர்ந்து சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்விகளின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ எம்.உதயகுமார், மத்திய மாகாணத்தின் ஆசிரிய உதவியாளர்கள் நிரந்தரமாக்கப்படாமை தொடர்பில் கல்வி அமைச்சரிடம் கேள்வி எழுப்பினார். அதேநேரம், பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ (வைத்தியகலாநிதி) திலக் ராஜபக்ஷ, கொவிட்-19 சூழ்நிலையின் கீழ் முகக்கவசம் அணிவதை தளர்த்தியமை தொடர்பில் சுகாதார அமைச்சரிடம் வினவியிருந்தார்.

அத்துடன், பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ஹேஷா விதானகே அவர்களினால் கடந்த தினமொன்றில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமொன்றில் பெரும் எண்ணிக்கையிலான அமெரிக்க டொலர் நாணயத்தாள்கள் உகண்டா நாட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டமை, இதனால் ஏற்பட்ட பொருளாதாரத் தாக்கம் தொடர்பில் கொண்டுவரப்பட்ட சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான பிரேரணை மீதான விவாதம் இடம்பெற்றது. இதனைத் தொடர்ந்து நாளை (21) மு.ப 10.00 மணிவரை சபை ஒத்திவைக்கப்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.