லைவ் அப்டேட்ஸ் உக்ரைன்: ரஷியா 25 சதவீத படைகளை இழந்துவிட்டது- அமெரிக்கா

20.04.2022

16.50: உக்ரைன் மீது ரஷிய படையெடுப்பு தொடங்கியதில் இருந்து, 50 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் உக்ரைனில் இருந்து வெளியேறியுள்ளதாக ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் தெரிவித்துள்ளது.
16.30: உக்ரைனுக்கு நார்வே அரசு 100 வான் பாதுகாப்பு அமைப்புகளை அனுப்புகிறது. பிரான்ஸ் தயாரிப்பான மிஸ்ட்ரல் குறுகிய தூர ஏவுகணை அமைப்புகளை நன்கொடையாக வழங்கியிருப்பதாகவும், அவை உக்ரைனுக்கு பெரும் பயனளிக்கும் என்றும் நார்வே பாதுகாப்புத்துறை மந்திரி கூறி உள்ளார்.
15.00: அமெரிக்க அதிபர் ஜோ பைடன், வருடாந்திர வெள்ளை மாளிகை  கூட்டத்தில் ராணுவத் தலைவர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார். உக்ரைன் போர் ஆபத்தான கட்டத்தில் உள்ள நிலையில், இந்த ஆலோசனைக் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
13.18: உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யா 25% படைகளை இழந்துவிட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. ரஷ்யாவின் பலம் குறைந்து வருகிறது. இந்த சமயத்தில் உக்ரைனுக்கு தேவையான ராணுவ உதவிகளை அனுப்பிவைப்போம் என கூறியுள்ளது. அதேசமயம் உக்ரைனின் மரியுபோல் நகரத்தை முற்றுகையிட்டுள்ள ரஷ்யா, இன்றைக்குள் உக்ரைன் படைகள் சரணடியாவிட்டால் கடும் விளைவை சந்திக்க நேரிடும் என தெரிவித்துள்ளது.
04.50: உக்ரைனின் கிழக்கு பகுதியில் ரஷியா மேலும் தனது படைகளை குவித்து வருகிறது. கார்கிவ், கிராமடோர்ஸ்க்,  ஜபோரிஜியா, டினிப்ரோ உள்ளிட்ட நகரங்களை குறி வைத்து ரஷிய படைகள் தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றன. டான்பாஸ் நகரை கைப்பற்றுவதன் மூலம் உக்ரைனை இரண்டாக பிரித்து இந்த போரில் வெற்றி காண முடியும் என மாஸ்கோ திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
03.40: ரஷிய ராணுவம் உலகின் காட்டுமிராண்டித்தனமான ராணுவம் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். காணொலி மூலம் நாட்டு மக்களிடையே உரையாற்றிய அவர், ராணுவ தளங்களை தாக்குவதாக கூறி, குடியிருப்பு பகுதிகளையும் பொதுமக்களையும் குறி வைத்து ரஷிய படைகள் தாக்குதல் நடத்தி வருவதாக கூறினார். 
02.30: உக்ரைனுக்கு கனரக பீரங்கிகளை கனடா அனுப்பும் என்று அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதாகவும், உக்ரைனின் தேவைகளை கனடா பூர்த்தி செய்யும் என்றும் அவர் கூறியுள்ளார்.
01.20: ரஷிய தாக்குதலில் செயல் இழந்த செர்னோபில் அணுமின் நிலையத்தை மீண்டும் சரி செய்யும் பணிகள் தொடங்கி உள்ளதாகவும், இது தொடர்பாக உக்ரைனின் அணுசக்தி கழகத்துடன் நேரடித் தொலைபேசித் தொடர்புகள் சீரமைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச அணுசக்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அணுசக்தி பாதுகாப்பு மற்றும் கதிரியக்க மதிப்பீடுகளை மேற்கொள்வதற்கும், உபகரணங்களை வழங்குவதற்கும் இது உதவிகரமாக இருக்கும் என்றும் சர்வதேச அணுசக்தி நிறுவன டைரக்டர் ஜெனரல் ரஃபேல் மரியானோ க்ரோஸி தெரிவித்துள்ளார்.
12.10:  உக்ரைனுக்கு தொடர்ந்து ஆயுதங்கள் வழங்குவோம் என்று ஜெர்மன் அதிபர் ஓலாஃப் ஷோல்ஸ் கூறியுள்ளார். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களுடன் ஆலோசனை நடத்திய பின்னர் பேசிய அவர், நாங்கள் அனைவரும் உக்ரைனுக்கு நிதி மற்றும் ராணுவ ரீதியான உதவியை தொடர்ந்து வழங்குவோம் என்றார்.
19.04.2022
21.30: ரஷியாவுடனான போரில் சேதமடைந்துள்ள உக்ரைன் ராணுவத்தின் தளவாடங்களை சரிசெய்து தர உள்ளோம் என செக் குடியரசு இன்று அறிவித்துள்ளது. உக்ரைன் அரசின் அழைப்பை ஏற்று இப்பணியினை மேற்கொள்ள உள்ளோம் என அந்நாட்டு பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.
18.45: ரஷியா மீது பல நாடுகள் பொருளாதார தடை விதித்துள்ளதால் அந்நாட்டின் வணிகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஐரோப்பா, சீனாவில் இருந்து மருத்துவ உபகரணங்கள் கொள்முதலும் அந்நாட்டில் குறைந்துள்ளது. எனவே, இந்தியாவில் இருந்து மருத்துவ உபகரணங்களை வாங்குவதற்கு ரஷியா முடிவு செய்துள்ளது.
 
15.55: மரியுபோல் நகரத்திற்குள் இருக்கும் உக்ரைன் வீரர்கள் தங்களுடைய ஆயுதங்களை கீழே வைத்துவிட்டு உடனடியாக சரணடைய வேண்டும் என ரஷியா தெரிவித்துள்ளது. தேவையில்லாமல் உக்ரைன் ராணுவம், அவர்கள் நாட்டு அதிகாரிகளிடம் இருந்து உத்தரவு வரும் என நம்பி ரஷிய முற்றுகைக்கு எதிராக சண்டையிடும் முயற்சியில் ஈடுபடுகின்றன. ஆனால் உங்கள் அதிகாரிகள் எந்த உத்தரவையும் தரப்போவதில்லை என கூறியுள்ளது.
11.47: ரஷியா- உக்ரைன் நாடுகளுக்கு இடையே போர் நடைபெற்று வரும் நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உக்ரைன் செல்லமாட்டார் என வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. அவருக்கு பதில் அமெரிக்க ராணுவ உயரதிகாரிகள் உக்ரைன் சென்று பார்வையிடுவர் எனவும் விளக்கம் அளித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.