ஆளுநர் பாதுகாப்பில் சமரசம் செய்ய மாட்டோம் – சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி

சென்னை: ஆளுநர் விவகாரத்தில் இதுதான் சந்தர்ப்பம் என நினைத்து அரசியல் செய்ய நினைக்கின்றனர். ஆளுநரின் பாதுகாப்பில் சமரசம் செய்ய மாட்டோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதிபட தெரிவித்தார். முன்னதாக, ஆளுநர் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து சட்டப்பேரவையில் இருந்து அதிமுக, பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, மயிலாடுதுறை சென்று திரும்பியபோது நடந்த சம்பவம் தொடர்பாக சட்டப்பேரவையில் நேற்று சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அதன் மீது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, ‘‘மயிலாடுதுறை சென்று திரும்பும் வழியில், மன்னம்பந்தல் என்ற இடத்தை ஆளுநரின் கார் கடந்தபோது, அதன் மீதும், பாதுகாப்பு அதிகாரிகள் கார் மீதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கற்களை வீசியும், கம்புகளை வீசியும் தாக்கியுள்ளனர். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களுக்கு காவல்துறையே பாதுகாப்பு அளித்துள்ளது. ஆளுநர் பாதுகாப்பில் தகுந்த முன்னேற்பாடுகளை மேற்கொள்ளவில்லை. தாக்குதல் நடத்த திட்டமிட்டதை உளவுத்துறை முன்கூட்டியே கணிக்கவில்லை. எனவே, இதை கண்டித்து நாங்கள் வெளிநடப்பு செய்கிறோம்’’ என்று கூறிவிட்டு அவையில் இருந்து வெளியேறினார். அவருடன் அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் வெளிநடப்பு செய் தனர்.

பேரவை வளாக நடைபாதையில் கோஷம் எழுப்பியபடி சென்றதால், அதிமுக உறுப்பினர்களை வெளியேற்றும்படி அவைக் காவலர்களுக்கு பேரவைத் தலைவர் மு.அப்பாவு உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து பேசிய, சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சி தலைவர் கு.செல்வப்பெருந்தகை, ‘‘ஆளுநரின் பாதுகாப்பு அதிகாரியே தாக்குதல் நடத்தப்படவில்லை என தெரிவித்துள்ளார். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியதன் அடிப்படையில், 69 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜனநாயக ரீதியாக எதிர்ப்பு தெரிவிக்க அனைவருக்கும் அரசியலமைப்பு சட்டம் அனுமதி அளிக்கிறது. தமிழ் மீது பற்றுள்ளவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்’’ என்றார்.

அதன்பின் பேசிய சட்டப்பேரவை பாஜக கட்சித் தலைவர் நயினார் நாகேந்திரன், ‘‘மயிலாடுதுறையில் ஆளுநருக்கு தகுந்த பாதுகாப்பு முன்னேற்பாடுகளை செய்யவில்லை. தமிழகத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்க வேண்டுமா? மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரை மாற்ற வேண்டும். இதை கண்டித்து பாஜக வெளிநடப்பு செய்கிறது’’ என்றார். தொடர்ந்து பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

அதன்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

ஆளுநர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த போராட்டத்துக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, சட்டம்-ஒழுங்கு கூடுதல் டிஜிபி வெளியிட்ட அறிக்கையில், ‘ஆளுநர் கான்வாய் மீது கற்கள், கொடிகள் வீசியதாக கூறப்படுவதில் எந்த உண்மையும் இல்லை. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை தடுப்புகள் அமைத்து, கட்டுப்பாட்டுக்குள் காவல் துறையினர் வைத்திருந்தனர். பின்னர், அவர்களை கைது செய்து வாகனங்களில் ஏற்றினர். வாக்குவாதம் செய்து, பிளாஸ்டிக் பைப்புகளில் கட்டப்பட்டிருந்த கொடிகளை வீசி எறிந்திருக்கிறார்கள் என்பதுதான் உண்மை’ என்று தெரிவித்துள்ளார். ஆளுநரின் பாதுகாப்பு அதிகாரி, டிஜிபிக்கு எழுதிய கடிதத்தில், ‘ஆளுநர் மற்றும் அவரது பாதுகாப்பு வாகனங்கள் கற்களோ, கொடிகளோ மற்றும் எந்தப் பொருட்களாலும் பாதிக்கப்படாமல் காவல் துறையால் பாதுகாக்கப்பட்டன’ என்று தெரிவித்துள்ளார்.

ஆனால், இதுதான் நமக்கு சந்தர்ப்பம். இதை அரசியலுக்காக பயன்படுத்த வேண்டும் என்று சிலர் நினைத்துள்ளனர். போராட்டம் நடத்தியவர்கள் மீது உரிய வழக்கு பதியப்பட்டுள்ளது. சட்டப்பூர்வ நடவடிக்கை தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகிறது. ஆளுநரின் பயணம் பாதுகாப்பாக இருந்தது என்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. ஆளுநரின் கான்வாய் மீது கற்கள் வீசப்பட்டன. கொடிகள் வீசப்பட்டன என்பது அபாண்டமான குற்றச்சாட்டு. ஆளுநருக்கு உரிய பாதுகாப்பு அளிப்பதில் இந்த அரசு எந்த சமரசமும் செய்து கொள்ளாது. ஆளுநரை பயன்படுத்தி அரசியல் செய்யலாம் என எதிர்க்கட்சித் தலைவர், துணைத் தலைவர் ஆகியோர் எண்ணுகின்றனர். அது நடக்கவே நடக்காது.

சாத்தான்குளம் சம்பவம், ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு குறித்து இன்று பேசிக் கொண்டிருக்கிறோம். அதிமுக ஆட்சியில் ஆளுநராக இருந்த சென்னா ரெட்டியும், அவரது கான்வாயும் கடந்த 1995 ஏப்.10-ம் தேதி திண்டிவனத்தில் தாக்கி அவமானப்படுத்தப்பட்டது. சென்னா ரெட்டி உயிர் தப்பினார் என்று செய்திகள் வந்தன. தாக்குதலுக்கு உள்ளான ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் என்று பேரவையில் அதிமுக தனி தீர்மானமே கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது. இது யாருடைய ஆட்சியில்?

ஆளுநர் மட்டுமல்ல; தலைமைத் தேர்தல் ஆணையராக இருந்த மறைந்த டி.என்.சேஷன், தாஜ் ஓட்டலில் இருந்து வெளியில் வரவே முடியாமல் முற்றுகையிடப்பட்டு கல்வீசி தாக்கியது அவர்கள் ஆட்சியில்தான். பாஜகவில் முக்கியஸ்தரான சுப்பிரமணியன் சுவாமியை உயர் நீதிமன்ற வளாகத்தில் தாக்க முயற்சித்து, அவரை அசிங்கப்படுத்திய ஆட்சி அதிமுக ஆட்சியாகும். பெண் ஐஏஎஸ்அதிகாரி சந்திரலேகா மீது ஆசிட் வீசியது என எல்லாம் அதிமுக ஆட்சியில்தான் நடந்தன. இந்த ஆட்சியை பொறுத்தவரை ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களை தடுத்து, ஆளுநர் மீது ஒரு தூசுகூட விழாதவாறு காவல்துறை பாதுகாப்பாக அழைத்துச் சென்றுள்ளது. ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் மீது வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு, விசாரணையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அரசியல் சட்டப் பதவிகளில் இருப்பவர்களை காப்பாற்ற அரசுக்கு பொறுப்பு உள்ளது. அந்த கடமையை காவல்துறை நிறைவேற்றி வருகிறது. எனவே, நடக்காத ஒன்றை நடந்ததாக கற்பனையாக இங்கு கூறி அரசியல் செய்ய வேண்டாம் என எதிர்க்கட்சித் தலைவர், துணைத் தலைவரை கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் பேசினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.