உக்ரைன் போர் இந்திய பொருளாதாரத்தை பெரிதாக பாதிக்காதது ஏன்? – சர்வதேச நிதிய அதிகாரி கருத்து

வாஷிங்டன்: கரோனா பெருந்தொற்றால் ஏற்பட்ட பின்னடைவை பொருளாதார சீர்திருத்தங்களால் இந்தியா வெற்றிகரமாக சமாளித்ததன் காரணத்தாலேயே தற்போது உக்ரைன் போரால் ஏற்பட்டுள்ள நெருக்கடியையும் இந்தியாவால் சமாளிக்க முடிகிறது என்று சர்வதேச நிதியத்தின் இந்தியாவுக்கான அதிகாரி நட்டா சவுரி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர், “இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி சீராக உள்ளது. நடப்பாண்டில் அதன் வளர்ச்சி 8.2% எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி உலக பொருளாதார நலனுக்கு மிகவும் அவசியமானதாக உள்ளது. அந்த வகையில் 8.2% பொருளாதார வளர்ச்சி கணிப்பு நம்பிக்கையை அளிப்பதாக உள்ளது.

சர்வதேச அளவில் இந்தியா இன்னொரு முக்கியமான பங்கை வகிக்கிறது. அது, தடுப்பூசி உற்பத்தி மற்றும் விநியோகம். தடுப்பூசி உற்பத்தியில் தனியொரு இடத்தைப் பிடித்துள்ள இந்தியா எதிர்கால தொற்றுகளை சமாளிப்பதில் முக்கிய இடத்தில் இருக்கிறது. இந்தியா தனது பொருளாதார சீர்திருத்தக் கொள்கைகளால் உக்ரைன் அதிர்ச்சியை சமாளிக்கிறது. ஆனால், நிறைய நாடுகள் அதிலிருந்து மீளமுடியாமல் தவிக்கின்றன.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 8.2% எனக் கணிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் போர் நடந்திருக்காவிட்டால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 9% என்றளவில் இருந்திருக்கும்.

உலகளவில் இந்தியாவில் அதிகமான மக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கிறது. இருப்பினும் கரோனா புதிய திரிபுகளின் அச்சுறுத்தல் இன்னும் குறையவில்லை. ஆகையால் இது குறித்து இந்திய அரசு கவனமாக இருக்க வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.

சர்வதேச நிதியம் பாராட்டு: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சர்வதேச நிதியத்தின் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அமெரிக்கா சென்றுள்ளார். இதில் ஜி20 நாடுகளின் நிதியமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர். ஜி 20 நாடுகளின் மத்திய வங்கிகளின் ஆளுநர்கள் கலந்து கொள்ளும் ஆலோசனைக் கூட்டமும் நடைபெறுகிறது.

முதல் நாளில், சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குநர் கிறிஸ்டலினா ஜார்ஜிவா தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார். அப்போது பெரும் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகியுள்ள இலங்கைக்கு இந்தியா செய்து வரும் உதவிகளுக்கு அவர் பாராட்டு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.