மழை நீர் வடிகால் அமைக்கும் பணிகளுக்கான பணி ஆணைகளை ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கியது சென்னை மாநகராட்சி.!

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சிங்காரச் சென்னை 2.O திட்டத்தின்கீழ் ரூ. 176.94 கோடி மதிப்பில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளுக்கான பணி ஆணைகள் மேயர் ஆர்.பிரியா முன்னிலையில் ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கப்பட்டது.

இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

கடந்த 2021 வடகிழக்கு பருவ மழையின்போது பெய்த கனமழையின் கரணமாக பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியது. 

தமிழ்நாடு முதலைமைச்சர் அவர்கள் மழை வெள்ள பாதிப்புகளை பல முறை நேரடியாக பார்வையிட்டு ஆய்வு செய்து மீட்பு பணிகளை துரிதபடுத்தினார்.   

மேலும் எதிர்வரும் காலங்களில் சென்னையில் மழைநீர் தேங்காத வண்ணம் நிரந்தர தீர்வுகான ஒய்வு பெற்ற இந்திய குடிமைப்பணி அலுவலர் திரு. திருப்புகழ் அவர்கள் தலைமையில் வல்லுநர்களை கொண்ட வெள்ள மேலாண்மை குழுவினை அமைத்து உத்தரவிட்டார்கள்.

இந்த குழுவானது மழைநீர் தேங்கிய இடங்களில் கள ஆய்வு மேற்கொண்டு உடனடியாக மேற்கொள்ள வேண்டிய பணிகள் மற்றும் நிரந்தர தீர்வு காணவேண்டியப் பணிகள் என பல்வேறு ஆலோசனைகளை வழங்கியுள்ளது.  

அதன் அடிப்படையில் இராயபுரம், தேனாம்பேட்டை, மற்றும் கோடம்பாக்கம் மண்டலங்களில் ரூ.186 கோடி மதிப்பில் சிங்கார சென்னை 2.o திட்டத்தின் கீழ் மழைநீர் வடிகால் பணிகளுக்கு ஒப்பம் கோரப்பட்டு இறுதிசெய்யப்பட்டுள்ளது. 

இதில் இராயபுரம் மண்டலத்தில் உள்ள சைடன்ஹாம்ஸ் சாலையில் ரூ. 24.04 கோடி மதிப்பிலும், அம்பேத்கார் கல்லூரி சாலை, டெமலஸ் சாலை மற்றும் டிக்காஸ்டர் சாலையில் ரூ. 22.09 கோடி மதிப்பிலும், தேனாம்பேட்டை மண்டலத்தில் சீத்தம்மாள் காலணி பகுதியில் ரூ. 25.89 கோடி மதிப்பிலும், தியாகராயநகர் அபிபுல்லா சாலையில் ரூ. 2.85 கோடி மதிப்பிலும், பசுல்லா சாலையில் ரூ. 21.13 கோடி மதிப்பிலும், கோடம்பாக்கம் மண்டலத்தில் விருகம்பாக்கம் வேம்புலியம்மன் கோவில் தெருவில் ரூ. 21.58 கோடி மதிப்பிலும், அசோக்நகர் 18 வது நீழற்சாலையில் ரூ. 6.88 கோடி மதிப்பிலும், பராங்குசபுரம் பகுதியில் ரூ. 9.15 கோடி மதிப்பிலும், முனுசாமி சாலையில் ரூ. 15.16 கோடி மதிப்பிலும், கே.கே. நகர் ராஜமன்னார் சாலையில் ரூ. 28.17 கோடி மதிப்பிலும் மழைநீர் வடிகால் பணிகளை மேற்கொள்ள ஒப்பம் இறுதி செய்யப்பட்டுள்ளது. 

ரூ. 176.94 கோடி ஒப்பந்த பணிகளுக்கான பணி ஆணைகள் மேயர் திருமதி.ஆர்.பிரியா, மதிப்பிற்குரிய துணை மேயர் திரு. மு.மகேஷ் குமார், அரசு முதன்மைச் செயலாளர்/பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் திரு.ககன்தீப் சிங் பேடி, இ.ஆ.ப., ஆகியோர் முன்னிலையில் ஒப்பந்ததாரர்களுக்கு இன்று வழங்கப்பட்டது.

இந்தப்பணிகளை உடனடியாக தொடங்கி வருகின்ற பருவ மழைக்கு முன்னதாக முடிக்க வேண்டுமென ஒப்பந்ததாரர்களுக்கு இக்கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது. 

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட தண்டையார்பேட்டை, இராயபுரம், திரு.வி.க. நகர், அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் மற்றும் அடையாறு ஆகிய மண்டலங்களில் உலக வங்கி நிதி உதவியுடன் ரூ. 119.93 கோடி மதிப்பில் 45 கீ.மி நீளத்திற்கு மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளும், புளியந்தோப்பு பகுதியில் ரூ. 7.40 கோடி மதிப்பில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் ஏற்கனவே நடைபெற்று வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிகழ்வின்போது, துணை ஆணையாளர் (பணிகள்) திரு. எம். எஸ். பிரசாந்த், இ.ஆ.ப., தலைமைப் பொறியாளர் (பொது) திரு. எஸ். ராஜேந்திரன், மேற்பார்வை பொறியாளர்கள் உட்பட பலர் உடன் இருந்தனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.