KGF: ஓய்ந்திடாத விசிலும், கைதட்டலும்! ஒரு நாயக பிம்ப சினிமா இப்படிக் கொண்டாடப்படுவதன் உளவியல் என்ன?

Spoiler Alert. படத்தின் சில காட்சிகள் விவரிக்கப்பட்டிருப்பதால், `KGF’ படங்களைப் பார்க்காதவர்கள் உஷார்.

KGF Chapter 1:

வெள்ளைக் கோட்டைக் கடந்த தாயையும் மகனையும் சுட்டுக்கொன்றபின், மற்றவர்களுக்குப் பாடம் கற்பிக்க உணவுப் பொருள்களைக் கொடுக்காமல் விடுகிறார்கள் வானரத்தின் ஆட்கள். மனம் நொந்த அந்த மக்களுள் ஒருவர், ‘கதை சொல்லி’ கந்தனை அழைக்கச் சொல்கிறார்.

“கந்தனைக் கூப்பிடுங்கடா கதை சொல்லட்டும். பசங்க பசியில அழுகறதையாவது நிறுத்துவாங்க.”

கதை சொல்லி கந்தனைப் பற்றி ஆனந்த் இளவழகன் இந்த வார்த்தைகளைச் சொல்கிறார்: “நம்பிக்கை செத்துப்போன அந்த இடத்துல, ஒரு பைத்தியக்காரன் கட்டுக்கதைகளெல்லாம் சொல்லி நம்பிக்கையூட்டுவான்.”

இதுதான் கதைகளின் மகிமை. இல்லை, கதைசொல்லியின் மகிமை. அவர்களால் பசியைப் போக்க முடியும். நம்பிக்கைக் கொடுக்க முடியும். துவண்டு கிடக்கும் உயிரைத் தூக்கி நிறுத்த முடியும்.

KGF 2

கதைகள் உறங்கவைக்கலாம்; கதைசொல்லிகள் உறங்கவைப்பதில்லை. மூடத் துடிக்கும் இமைகளையும் விழிக்கவைத்து, உயிரை உறையவைக்கும் வித்தைக்காரர்கள் அவர்கள்.

‘KGF’ படங்களின் இயக்குநர் பிரசாந்த் நீல், தான் இந்த வித்தையைக் கரைத்துக்குடித்திருப்பவர் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார். இந்த இரண்டு பாக சினிமாவின் மூலம் கதைசொல்லலை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தியிருக்கிறார். ஒரு டப்பிங் சினிமாவை, ஹீரோயிசம் மட்டுமே பேசும் சினிமாவை ஏன் மொத்த தேசமும் கொண்டாடுகிறது? பிரசாந்த் நீலின் திரைக்கதை வண்ண பேனாக்களால், கிளிட்டர்களால் அலங்கரிக்கப்பட்டதில்லை. வெள்ளைக் காகிதத்தில் கறுப்பு மை கொண்டு எழுதப்பட்ட கதைதான் இது. அதுவும் காலங்காலமாக, ஏன், எம்.ஜி.ஆர் காலம்தொட்டே எழுதப்படும் மீட்பரின் கதை, அம்மாவின் ஆசையை நிறைவேற்றும் மகனின் கதை என அதே டெம்ப்ளேட்தான். ஆனால், இதில் பெரும்பாலான வெகுஜன மக்கள் தங்களைப் பொறுத்திப் பார்த்துக்கொள்ள முடிந்தது. ஏனென்றால் கிருஷ்ணராஜு வீரய்யா என்கிற ராக்கி ஒரு சாமான்யன். இந்த உலகையே வென்ற பிறகும்கூட அவனின் இந்த சாமானிய பிம்பம் அப்படியேதான் இருந்தது.

பொதுவாகவே ஒரு மூன்றாவது நபரின் கருத்துக்கு மதிப்பு கொடுப்பது மனித இயல்பு. பரிந்துரைக் கடிதம் முதல், ஜாமீன் வரை இன்னொருவரின் வார்த்தைக்கு மரியாதை கொடுக்கப் பழகியிருக்கிறோம். அவ்வளவு சீக்கிரம் இன்னொருவரைப் பற்றி மனிதன் நல்லபடியாக கூறிவிடமாட்டான் என்ற எண்ணம் நமக்குள் இருக்கிறது. அதனால்தான், ஒருவரைப் பற்றி இன்னொருவர் பெருமையாகக் கூறினால் அதை ஏற்றுக்கொள்கிறோம். சச்சின் பற்றி வாசிம் அக்ரம் கூறும்போதோ, ரஜினிகாந்த் பற்றி அமிதாப் பச்சன் சொல்லும்போதோ புல்லரித்துப் போவதுற்குக் காரணம் இந்த உளவியல்தான்.

நாம் வளரும்போது நம் அம்மாக்கள் தந்தைகளின் பெருமையைச் சொல்ல, அது மரியாதையாய் உள்ளுக்குள் படிந்துவிடுவதும் இந்த உளவியல்தான். பிரசாந்த் நீல் தன் 323 நிமிட திரைக்கதையில் பயன்படுத்திக்கொண்டதும் இந்த உளவியலைத்தான்.

Prashanth Neel with Yash

ஒரு மூன்றாம் நபர் ராக்கியின் கதையைச் சொல்வதைப் போல் கதையமைக்க, அந்தப் பத்திரிகையாளர் ராக்கியைப் பற்றிச் சொல்லும் ஒவ்வொரு விஷயமும் நம்மை புல்லரிக்கச் செய்தது. மூன்றாம் நபரின் வார்த்தையை எப்போதும் ஏற்றுக்கொள்ளும் மனம், மறுகேள்விகள் ஏதும் கேட்காமல் ராக்கியை உள்வாங்கிக்கொண்டது. தானே நேரடியான கதை சொல்லியாக இருந்திருந்தால், தன் ஹீரோவை இந்த அளவுக்கு மாஸாக இயக்குநரால் காட்டியிருக்க முடியாது. ஆனால், ஆனந்த் இளவழகனின் சொற்கள் ராக்கியின் மீதான பிம்பத்தை மலையளவு உயர்த்தின.

நேரில் நாம் பார்க்கும் ஹீரோக்களின் நிழல்கள் கூட நமக்குள் படிந்துவிடும். ஆனால், நாம் பார்க்காத ஒரு ஹீரோவைப் பற்றிக் கேட்கும்போதும், படிக்கும்போது அவன் எப்படி இருப்பான் என்ற எண்ணத்துக்கு உருவம் கொடுக்கும் பொறுப்பை நாம் கற்பனையிடம் விட்டுவிடுகிறோம். பச்சை நிற அரக்கனாய், செதில்கள் கொண்ட வீரனாய், வலை பிண்ணும் வித்தகனாய், கண்ணிலிருந்து ஒளியைக் கக்கும் ஏலியனாய், நேரத்தை நகர்த்தும் மாயாவியாய்… ஒரு சூப்பர் ஹீரோவாய் சித்திரிக்கத் தொடங்குகிறோம். ராக்கியை அப்படியொரு சூப்பர் ஹீரோவாகத்தான் நிருவியிருப்பார் பிரசாந்த் நீல்.

ஆனந்த் இளவழகன் – A scene from KGF Chapter 1

24 நீயூஸ் சேனலின் ஓனர், எடிட்டர், பியூன் எல்லோரும் ராக்கியின் கதை கேட்டு ஸ்தம்பித்த போது, நாமும் அவர்களுள் ஒருவராய் ஸ்தம்பிக்கித் தொடங்கினோம். ராக்கி சுத்தியலைத் தோளில் சுமந்ததைக் கேட்டு, ஒரு கம்பியைத் தோளில் சுமந்து பிரகாஷ் ராஜ் முன் நடந்த அந்த பியூன் நாம்தானே!

அவர்கள் மட்டுமல்ல. பிரதமர் ரெமிகா சென்னில் இருந்து, காதலி ரீனா வரை யாரும் ராக்கியைப் பார்த்து அவனைப் பற்றித் தெரிந்துகொள்ளவில்லை. அவர்களுக்குமே ராக்கியின் கதை வார்த்தைகள் மூலமும் காட்சிகளின் மூலமுமே சொல்லப்பட்டது. நராச்சி சிறுவர்கள் மூலம் ராக்கியின் கதை ரீனாவுக்கு விவரிக்கப்படுகிறது. CBI தலைமை அதிகாரியின் மூலம், பிரதமருக்கு ராக்கியின் கதை சொல்லப்படுகிறது. இப்படியாக, ஒவ்வொரு தருணத்திலும் அவன் மீதான நாயக பிம்பம் எழுப்பப்பட்டுக்கொண்டே இருக்கிறது. பிரதமரிடம் ராக்கியின் கதையைச் சொல்லி முடித்து, விமானப்படை விமானம் எடுத்த போட்டோ காட்டப்படும்போது சொல்லப்படும் வார்த்தை “இதுதான் ராக்கியின் KGF”.

ஒட்டுமொத்த அதிகாரிகளும் அஞ்சி நடுங்கும் சர்வாதிகார பாரதப் பிரதமரின் முன் ‘ராக்கியின் KGF’ ஆக மாறிக் காட்சியளிக்கிறது அதுவரை பயத்தையும், பிணங்களையும் மட்டுமே சுமந்துகொண்டிருந்த நராச்சி! ஒரு நிமிடம் அந்தப் பிரதமரே ஆடிப்போகிறார். கதை சொல்லலின் அற்புதத்தை இதைவிட எப்படி விளக்கிவிட முடியும்?!

ஆனால், 323 நிமிடங்களும் நாயகத் துதி பாடிக்கொண்டே இருந்தால் பொறுத்துக்கொள்ள முடியுமா?! கடினம்தான். இதே பாணியில் எடுக்கப்பட்ட இரண்டு படங்கள்… தமிழ் சினிமாவின் இரு துருவங்கள் நடித்த படங்கள் ஏமாற்றியிருக்கின்றன. அதீதமான நாயக துதி சீக்கிரம் சலிப்பைக் கொடுத்துவிடும். ஆனால், கொஞ்சம் கூட உறுத்தாமல் கொண்டாடும் வகையில் அந்தக் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும். காரணம், ரசிகர்கள் அப்படியொரு காட்சியை எதிர்பார்க்குமாறு முந்தைய காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும். மனித உளவியலை மிகக் கச்சிதமாக உணர்ந்து அவை அமைக்கப்பட்டிருக்கும்.

K.G.F 2 | கே.ஜி.எஃப் 2

கமர்ஷியல் சினிமா மதிக்கவேண்டிய ஒன்று நியூட்டனின் மூன்றாவது விதி. சொல்லப்போனால் அதன் ரிவர்ஸ் வெர்ஷன்: ஒவ்வொரு ரியாக்‌ஷனுக்கும், உங்கள் திரைக்கதையில் ஒரு ஆக்‌ஷன் இருந்திருக்கவேண்டும்.

ஹீரோ அடித்துக்கொண்டே இருப்பதை ரசிகர்கள் நிச்சயம் விரும்பிடமாட்டார்கள். அது அவர்களுக்குள் எந்த எதிர்பார்ப்பையும் ஏற்படுத்திவிடாது. காதலை, நிம்மதியை, வெற்றியை மனம் தேடும். ஆனால், கவலைக்குப் பின்பான காதலையும், வலிக்குப் பின்பான ஆசுவத்தையும், தோல்விக்குப் பின்பான வெற்றியையும்தான் கொண்டாடும்.

ஏதோவொன்று விழுந்துகொண்டே இருக்கிறதெனில் ஒன்று அது நம்மை பயமுறுத்தும் – கொட்டும் பெருமழை போல். இல்லை அலட்சியம் காட்டவைக்கும் – சறுகுகள் போல். தூக்கி வீசப்பட்ட ஒன்று கீழே வரும்போதுதான் மனம் அதை எதிர்பார்க்கும். அதைப் பிடிக்க கைகள் நீட்டும் – பந்தைப் போல்!

விஷயம் இதுதான்: ஒவ்வொரு ரியாக்‌ஷனுக்கும், உங்கள் திரைக்கதையில் ஒரு ஆக்‌ஷன் இருந்திருக்கவேண்டும்.

பிரசாந்த் நீல் தன் திரைக்கதையில் இதை மிகச் சிறப்பாகக் கையாண்டிருப்பார். நம் ரோமங்களைச் சிலிர்க்க வைத்த ஒவ்வொரு காட்சிக்கும், வசனத்துக்கும் முன்பு ராக்கி பின்வாங்கியிருப்பான், தோற்றிருப்பான், அவமானப்படுத்தப்பட்டிருப்பான். ஆனால், எழுந்து முன்பைவிட பலம்கொண்டு திருப்பி அடிப்பான்.

Prashanth Neel with Yash

முதல் காட்சியில் ரத்தம் சொட்டச் சொட்டக் கட்டப்பட்டிருப்பான்; ‘நான் அடிச்ச பத்துப் பேரும் டான்’ என்று சொல்லும் முன்பு ஷெட்டி அவனை அவமானப்படுத்துவான்; நராச்சிக்குள் நுழையும் முன் கருடனைக் கொல்ல முடியாமல் வீழ்ந்திருப்பான்; இநாயத் கலீல் முன் துப்பாக்கியை நீட்டும் முன், நிராயுதபாணியாய் நிற்பதுபோல் காட்டப்பட்டிருப்பான்; நாடாளுமன்றத்தில் புகுந்து பிரதமரின் முன்பே அமைச்சரைச் சுடும்போது தன் மனைவியை இழந்திருப்பான்.

இந்த ஒவ்வொரு தருணமும் ராக்கியை உண்டி வில்லைப் போல் பின்னால் இழுத்திருக்கும். அப்படியொரு தருணத்தில், அவன் முன்னே பாய்ந்து மரத்திலிருக்கும் கிளியின் கண்ணைத் தாக்கவேண்டும் என்றுதான் ஒவ்வொருவரும் எதிர்பார்ப்போம். ஆனால், இவன் என்ன கேங்ஸ்டரா? மான்ஸ்டர் ஆயிற்றே. முன் நோக்கிப் பாயும் அந்த எரிகல், ஒவ்வொரு முறையும் பூமியைப் பிளந்து, வேரை அறுத்து மரத்தையே குடைசாய்க்கும்போது, நுண் வேர்களிலிருந்து முளைத்த நம் உடலின் ரோமங்கள் அதிர்ச்சியில் சிலிர்க்காதா!

இன்னொரு முக்கியமான விஷயம், அவமானப்படுத்தி மட்டுமே ராக்கியை அந்தச் சூழலுக்குள் பிரசாந்த் நீல் தள்ளவில்லை. சில நேரங்களில் பீர்பாலின் யுக்திகளையும் கையாண்டிருந்தார் அவர். ஒரு நீள்கோட்டின் மீது பரிதாபம் வர, அதைச் சிறிதாய்க் காட்டவேண்டும். அதற்காக அதை ஒவ்வொரு முறையும் அழித்து சிறியதாக்கவேண்டிய அவசியம் இல்லை. அருகே பெரியதொரு கோட்டையும் வரையலாம். ஹீரோவை பின்தங்கவைக்க, அவனுக்குக் கொடுக்கப்பட்ட பில்ட் அப்கள் அவன் எதிரிகளுக்கும் கொடுக்கப்பட்டுக்கொண்டே இருந்தன. அதற்கு ராக்கி பதிலளித்து ‘நான்தான் பெரியவன்’ என்று சொல்லும்போது சில்லறைகள் சிதறத்தானே செய்யும்!

K.G.F 2 | கே.ஜி.எஃப் 2

ஆனானப்பட்ட ராக்கியின் ஸ்கெட்சிலேயே தப்பித்து, ஒரு தேசிய கட்சியின் அலுவலகத்திலிருந்த தன் தந்தையின் சிலையை மாற்றி தன் சிலையை நிறுவிய கருடன்; தன் கத்தியினாலாயே அனைவரையும் கதிகலங்கவைக்கும் அதீரா; ஒரு கிரிமனலுக்குத் தான் யார் என்பதைக் காட்ட ஒரு தேசத்தின் மீது படையெடுக்கும் பிரதமர்… KGF-ல் உருகும் தங்கத்தைவிட கெட்டியான இதயம் கொண்ட இவர்கள் ராக்கிக்கான சவால்களை வேறொரு தளத்தில் உயர்த்திப் பிடித்தனர்.

ஒவ்வொரு சீனிலும் அவர்களுக்கும் அந்த பில்ட் அப் வசனங்கள் ஒலித்துக்கொண்டேதான் இருந்தன. கருடனைப் பற்றிப் பேசினாலே அலறும் ஆண்ட்ரூஸ்; அதீராவின் உக்கிரத்தை உணர்த்தும் வானரம், அவரின் அந்த வாள்; ரெமிகா சென் – இவருக்கு வசனங்களே தேவைப்பட்டிருக்கவில்லை. ரவீனா டாண்டனின் கண்களே அவ்வளவு உக்கிரமாக இருந்தன. ரத்தம் சொட்டச் சொட்ட நாடாளுமன்றத்தில் ஒருவன் துப்பாக்கியோடு நுழைந்து, தோட்டாக்கள் தீர்ந்தும் டிரிகரை பல முறை அழுத்தி தன் கோபத்தை வெளிக்காட்டிவிட்டு வெளியேறும் வரை நகராமல், அஞ்சாமல் நின்ற அந்த உடல் மொழி… ராக்கியின் எதிரிகளும் ஒவ்வொரு ஃபிரேமிலும் ஸ்கோர் செய்துகொண்டேதான் இருந்தனர்.

ரெமிகா சென் | A scene from KGF Chapter 2

பேட்மேனிடம் ஜோக்கர் சொல்வதுதான்: I complete you.

தனி ஒருவனில் ஜெயம் ரவி எழுதி வைத்திருப்பதுதான்: உன் எதிரி யார் என்று சொல், நீ யார் என்று சொல்கிறேன்.

ஒரு மிகப்பெரிய வில்லன்தான், ஒரு மாஸ் ஹீரோவுக்கான தேவையை ஏற்படுத்துகிறான். அந்த ஹீரோவை அவனே நிறைவு செய்கிறான். ரகுவரனை இழந்துவிட்டு, ஆனந்த் ராஜையும், பிரகாஷ் ராஜையும் வைத்து கோக்கு மாக்கு காமெடி செய்யவைத்துக்கொண்டிருக்கும் தமிழ் சினிமாவுக்குத் தெரியும் சூப்பர் ஸ்டார் எனும் வெற்றிடம் பற்றி.

இந்த விஷயத்தில் பிரசாந்த் நீல் கில்லாடியாக இருந்திருக்கிறார். பலமான எதிரிகளை உருவாக்கியதில், ராக்கி அதீத பலம் கொண்டவனாக வரவேண்டும் என்ற எண்ணத்தை நம் மனதில் விதைத்துவிடுகிறார்.

இப்படியாக ஒவ்வொரு சீனிலும் ராக்கியின் ஈகோ பின்தங்க, நமக்குள் உருவான சூப்பர் ஹீரோ பிம்பம் உடனே திருப்பியடிக்கவேண்டும் என்ற எண்ணத்தை நமக்கு வர வைத்துவிடுகிறது. திருப்பியடிக்கும் சீன் பேரானந்தத்தை ஏற்படுத்திவிடுகிறது.

பிரசாந்த் நீலின் கதை சொல்லல் சலிப்படையாமல் இருக்க இன்னொரு காரணமும் இருக்கிறது. அவர் ஒரேயொரு கதை சொல்லியை மட்டும் பயன்படுத்தவில்லை. ஆனந்த் இளவழகனின் கதைகக்குள், விஜயேந்திர இளவழகனின் கதைக்குள், ராக்கியின் பெருமையைச் சொல்லும் கதாபாத்திரங்கள் இருந்துகொண்டேதான் இருந்தன. கசிம் பாய், கந்தன், நராச்சி சிறுவர்கள், ஃபர்மான், போலீஸ் ஸ்டேஷனில் டீ கொடுக்கும் சிறுவன் என ஒவ்வொருவரும் ராக்கியின் பெருமையை நமக்குள் கடத்திக்கொண்டேதான் இருந்தார்கள்.

“எங்க ஊர்ல அவர ராக்கிபாய்னு சொல்லுவோம்” என்று போலிஸ் ஸ்டேஷனில் அந்தச் சிறுவன் சொல்லியபோதே ஸ்டேஷன் அதிர்ந்துவிட்டது. பெரியம்மாவின் தோட்டாக்கள் துளைத்தது, ராக்கியின் நிழலிருந்து தப்பிய மிச்சத்தைத்தான்.

A scene from KGF Chapter 2

ஆடியன்ஸ் பல்ஸ் தெரிந்தவர்களால் மாஸ் சீன்கள் நிறைந்த கமர்ஷியல் படம் எடுக்கமுடியும். அந்த சீன்கள் ரசிகர்களைக் கத்தவைக்கும். விசிலடிக்கவைக்கும். கொண்டாடவைக்கும். ஆனால், அந்த சீன்கள் நம்மைத் தூண்டாவிட்டாலும் நம்மால் அதைச் செய்ய முடியும். இன்று எழுத்துக்களுக்குக் கூட நாம் கத்துகிறோம். கொண்டாடுகிறோம். அந்தச் சத்தங்கள் எல்லாம் நம் கட்டுப்பாட்டில் இருக்கும் ஒன்றுதான்.

ஆனால், 15 நிமிடத்துக்கு ஒருமுறை ரோமங்களை சிலிர்க்கச் செய்வது சாதாரண விஷயமில்லை. அந்த உணர்வு நம் கட்டுப்பாட்டில் இல்லை. அப்படியொரு உணர்வைக் கொடுக்குமாறு ஒரு திரைக்கதை அமைக்கவேண்டுமெனில், அதற்கு சாமானிய பார்வையாளர்களின் பல்ஸ் தெரிந்திருக்கவேண்டும். பிரசாந்த் நீல் அதில் தேர்ந்திருக்கிறார்.

விந்தைகள் நிறைந்த மூளையில் சுரங்கமிட்டு, உணர்வுகளைக் குவித்துவைத்திருக்கும் நூறு கோடி நரம்புகளைத் தோண்டி அவர் எடுத்திருக்கும் தங்கம்தான் KGF!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.