கர்நாடகா பியூசி பொதுத்தேர்வு: ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத மாணவிகளுக்‍கு தடை..உடுப்பியில் தேர்வை புறக்கணித்த மாணவிகள்..!!

பெங்களூரு: கர்நாடகாவில் இன்று பியூசி 2ம் ஆண்டு பொதுத்தேர்வு தொடங்கியது. மாணவிகள் ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத தடை விதிக்கப்பட்டதால் உடுப்பியை சேர்ந்த சில மாணவிகள் தேர்வை புறக்கணித்து சென்றனர். கர்நாடகாவில் இன்று தேர்வு எழுத உடுப்பியில் உள்ள வித்யோதயா பியூ கல்லூரிக்கு ஹிஜாப் அணிந்து சென்ற மாணவிகள் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதையடுத்து கல்லூரி முதல்வர் மற்றும் தேர்வு கண்காணிப்பாளர்களிடம் மாணவிகள் சுமார் 45 நிமிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பலன் எதுவும் கிடைக்காததால் மாணவிகள் தேர்வை புறக்கணித்து வீடு திரும்பினர். ஹிஜாப் வழக்கைத் தொடர்ந்த 6 மாணவிகள் ஹால் டிக்கெட்டை பெற்றுக்கொண்டு ஹிஜாப்பை நீக்கிவிட்டு தேர்வு அறைக்குள் சென்றனர். கர்நாடகாவில் ஹிஜாப் போராட்டத்தை முன்னின்று நடத்திய அலியா அசாதி என்ற மாணவி, கடந்த வாரம் முதலமைச்சர் பசவராஜ் பொம்மைக்கு மீண்டும் கோரிக்கை விடுத்திருந்தார். இஸ்லாமிய மாணவிகளின் எதிர்காலம் பாதிக்காமல் இருக்க பொதுத்தேர்வை எழுத வரும் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர அனுமதி அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, ஹிஜாப் அணிந்து வகுப்புகளில் கலந்து கொள்ள அனுமதி கோரி அவர்கள் தாக்கல் செய்த மனுக்களை கர்நாடக உயர் நீதிமன்ற சிறப்பு பெஞ்ச் தள்ளுபடி செய்தது. ஹிஜாப் அணிவது இஸ்லாத்தின் இன்றியமையாதது என்றும் நீதிமன்றம் தெரிவித்தது பெரும் சர்ச்சையானது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.