மின்சார வாகனங்கள் தீப்பிடித்து எரிந்தால், திரும்பப் பெற உத்தரவிடப்படும்! நிதின் கட்கரி எச்சரிக்கை

டெல்லி: மின்சார வாகனங்கள் தீப்பிடித்து எரிந்தால், அதை திரும்பப் பெற உத்தரவிடப்படும் என மின்சார வாகன தயாரிப்பு நிறுவனங்களுக்கு மத்திய சாலை போக்கு வரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்தியாவில் மின்சார வாகனங்கள் தயாரிப்பு அதிகரித்து வரும் நிலையில், சில வாகனங்கள் அவ்வப்போது தீப்பிடித்து எரிவது வாடிக்கையாகி வருகிறது. இதனால், மின்சார வாகனங்கள் வாங்கும் பயனர்கள், யோசிக்கத் தொடங்கி உள்ளனர். இந்த நிலையில், மின்சார வாகனங்கள் தீப்பிடித்து எரிந்தால், திரும்பப் பெற உத்தரவிடப்படும் என அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து டிவிட் பதிவிட்டுள்ள  மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி, கடந்த இரண்டு மாதங்களில் பல்வேறு மின்சார இருசக்கர வாகன விபத்துக்கள் நடந்திருப்பது தெரியவந்துள்ளது. இதில் மக்கள் சிலர் தங்களது உயிரை இழந்திருப்பதும், இந்த விபத்துக்களில் பலர் காயமடைந்திருப் பதும் மிகவும் துரதிர்ஷ்டவசமானது. குறைபாடு உடைய அனைத்து வாகனங்களையும் உடனடியாக திரும்பப் பெறுவதற்கான பணிகளை, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் முன்கூட்டியே மேற்கொள்ள வேண்டும்.

இதுபோன்ற சம்பவங்கள் குறித்து விசாரிக்கவும், இப்பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளை பரிந்துரைக்கவும் குழு ஒன்றை அமைக்க வேண்டும். தகவல்களின் அடிப்படையில், குறைபாடு உடைய வாகனங்களை தயாரித்த நிறுவனங்களுக்கு எதிராக தகுந்த நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், மின்சார வாகனங்களுக்கான தரம் சார்ந்த வழிகாட்டி நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும்.

எந்த ஒரு நிறுவனமாவது அதன் நடைமுறைகளில் கவனக்குறைவாக இருப்பது தெரிய வந்தால், பெருந்தொகை அபராதமாக விதிக்கப்படுவதுடன், குறைபாடு உடைய அனைத்து வாகனங்களையும் திரும்பப் பெற உத்தரவிடப்படும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.