3 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் சிறுபான்மையின மாணவி, மாணவியருக்கு ஊக்கத் தொகை- அமைச்சர் அறிவிப்பு

சென்னை:

சட்டசபையில் இன்று சிறுபான்மையினர் நலன் மானியக் கோரிக்கையை தாக்கல் செய்த சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் அறிவிப்புகளை வெளியிட்டார். அப்போது அவர் பேசியதாவது:

கிராமப்புறங்களில் பயிலும் சிறுபான்மையின மாணவியர் இடைநிற்றல் இன்றி, தொடர்ந்து கல்வி பயில ஊக்கத்தொகையாக 3 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவியருக்கு ரூ. 500-ம் மற்றும் 6 ஆம் வகுப்பு பயிலும் மாணவியருக்கு ரூ.1,000-மும் 2 கோடியே 75 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் செலவில் வழங்கப்படும்.

கல்வி நிறுவனங்களுக்கு சிறுபான்மையினர் அந்தஸ்து வழங்கும் பொருண்மைக்கென வழிமுறைகள் உருவாக்கப்பட்டு இத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும்.

சென்னையில் உள்ள கிறித்துவர்களுக்கான அடக்க ஸ்தலங்கள் அமைக்க, புதிய நிலம் கையகப்படுத்தவும், சென்னையில் ஏற்கனவே உள்ள அடக்கஸ்தலங்களில் மீண்டும் அடக்கம் செய்வதற்கு உள்ள நிபந்தனைகளைத் தளர்த்தவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

மாநில அளவில், சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 18-ம் தேதி  2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவில் கொண்டாடப்படும்.

உலமா ஓய்வூதியதாரர் இறந்த பிறகு, அவரது குடும்பம் வறுமையில் வாடாமல் இருப்பதற்கு, அக்குடும்பத்திற்கு குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.