நெல்லை பெண் உதவி ஆய்வாளருக்கு கத்திக்குத்து: தொலைபேசியில் நலம் விசாரித்த முதல்வர் ஸ்டாலின்

நெல்லையில்  கத்தியால் குத்தப்பட்ட பெண் உதவி ஆய்வாளரை தொலைபேசியில் தொடர்புகொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்துள்ளார்.

நெல்லை சுத்தமல்லி அருகே கோயில் பாதுகாப்புப் பணியில் இருந்த பெண் காவல் உதவி ஆய்வாளர் மார்க்ரெட் தெரசா என்பவரை மர்ம நபர் ஒருவர் சரமாரியாக கத்தியால் குத்தி தாக்கியுள்ளார். தாக்குதல் நடத்திய நபரை போலீசார் கைது செய்துள்ளனர். உதவி ஆய்வாளர் படுகாயங்களுடன் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் உதவி ஆய்வாளர் மார்க்ரெட் தெரசாவை தொடர்பு கொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்துள்ளார். இது தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,” திருநெல்வேலியில் தாக்கப்பட்ட காவல் உதவி ஆய்வாளர் மார்க்ரெட் தெரசா அவர்களைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தேன். தாக்குதல் நடத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சகோதரி மார்க்ரெட் தெரசாவிற்கு உயர்தர மருத்துவ சிகிச்சை வழங்க அறிவுறுத்தியுள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.

image
இதனிடையே, பெண் உதவி ஆய்வாளர் மார்கரெட் தெரசா கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்திற்கு எடப்பாடி பழனிசாமி ட்விட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார். ஆளுநர் முதல் காவலர் வரை தமிழ்நாட்டில் யாருக்கும் பாதுகாப்பில்லை என்றும், தமிழ்நாடு சீர்கெட்டிருப்பதை இந்த சம்பவம் தெளிவாக்குவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். காவலர்கள் தங்களை தற்காத்துக் கொள்ள புதிய யுக்திகளை கையாள்வதற்கு பயிற்சி அளிக்க வேண்டும் என்றும், உடனடியாக நடவடிக்கை எடுத்து காவலர்களை காக்க வேண்டும் எனவும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிக்க: நெல்லை: கோயில் திருவிழாவில் பெண் எஸ்.ஐ.யின் கழுத்தறுப்புSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.