வானத்தை விட வாழ்க்கையை வசப்படுத்துவோம்| Dinamalar

சென்னை, அண்ணா நகர் மலர் குடியிருப்பில் உள்ள தன் வீட்டில், மலையென குவிந்துள்ள புத்தகங்களை தலைப்பு வாரியாக பிரித்து வைப்பதில் மிகவும் பரபரப்பாக இருந்தார், ஏர்வாடி ராதாகிருஷ்ணன். கவிதை உறவு இலக்கிய அமைப்பின் நிறுவனர்,

இவர்.ஒவ்வொரு ஆண்டும் தன் பிறந்த நாளை, கவிதை உறவு இலக்கிய அமைப்பின் ஆண்டு விழாவாக நடத்தி வருகிறார். ஆண்டுதோறும் சிறந்த கதை, கவிதை, நாவல், கட்டுரை போன்ற புத்தகங்களை தேர்ந்து எடுத்து, அதை எழுதிய ஆசிரியர்களை பாராட்டி கவுரவிப்பதே ஆண்டு விழாவின் சிறப்பு நிகழ்வு.அவருடன் உரையாடியதில் இருந்து…கொரோனா தொற்று பரவல் காலத்திலும், நிறைய எழுத்தாளர்கள் பல தரமான படைப்புகளை தந்துள்ளனர்.

இலக்கியம் தான் மனதை செம்மைப்படுத்தும்; வாழ்க்கையை வசப்படுத்தும்.உதாரணத்திற்கு ஒரு சம்பவம் சொல்கிறேன்.வங்கி அதிகாரியாக நான் பணியாற்றியபோது, ஒரு கவியரங்கத்திற்கு என் வாகனத்தில் போய்க் கொண்டு இருந்தேன். அப்போது, ஒரு சிக்னலில் தேவையின்றி போலீஸ் அதிகாரியால் நிறுத்தப்பட்டேன்.அவர் என்னை பேசவே விடாமல், ஏக வசனத்தில் மரியாதைக் குறைவான வார்த்தைகளால் பேசினார். என் தரப்பு நியாயத்தை கேட்காமல், உணராமல் இப்படி ஒருவர் பேசுகிறாரே என மனம் வலித்தது.

நடந்த சம்பவத்தை போலீஸ் உயரதிகாரியிடம் பகிர்ந்து கொண்டேன்.அவர் மிகவும் வருத்தமுற்று, ‘இப்படிப்பட்ட சிலரால் தான் காவல் துறையின் கண்ணியத்திற்கு கெட்ட பெயர் வருகிறது; நான் பார்த்துக் கொள்கிறேன்’ என்றார். மறுநாள் காலை, என்னை ஏக வசனத்தில் பேசிய போலீஸ் அதிகாரி என் அலுவலகத்திற்கு வந்தார். என்னை சந்தித்து குனிந்த தலையோடு நடந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்டார். அவரை வரவேற்று உட்காரச் சொல்லி காபி கொடுத்து உபசரித்தேன்.அப்போது, ‘உங்களை இங்கு வரவழைப்பதோ, மன்னிப்பு கேட்க வைப்பதோ எனது நோக்கமல்ல; அது எனது விருப்பமுமல்ல.’ஆனால், என் மகனின் வயதில் இருக்கும் நீங்கள், ஒரு தந்தையைப் போன்ற நிலையில் உள்ள என் வயதையோ, பொறுப்பையோ பொருட்படுத்தாமல் நடந்து கொண்டீர்கள். நான் இருந்த இடத்தில் வேறு யாரும் இருந்திருந்தால், உங்களை மோசமாக நடத்தி இருப்பர். ஆகவே பொறுமையை கையாளுங்கள். பொதுமக்களிடம் நட்பு பாராட்டுங்கள்’ என, அறிவுரை கூறி, 10 புத்தகங்களை பரிசளித்தேன்.

அதன்பின், அவரது வாழ்க்கை நடைமுறை மாறிவிட்டதை அறிந்து மகிழ்ந்தேன். ஆகவே, நம் வாழ்வியல் முறையில், வானத்தை வசப்படுத்துவதை விட, வாழ்க்கையை வசப்படுத்துவோம்; வளமாக வாழ்வோம்.இவ்வாறு, ஏர்வாடி ராதாகிருஷ்ணன் கூறினார்.அடுத்த மாதம் 18ம் தேதி, 75வது பிறந்த தின விழாவை, கவிதை உறவு இலக்கிய அமைப்பின் 50வது ஆண்டு விழாவாக நடத்த உள்ளார், ஏர்வாடி ராதாகிருஷ்ணன்.

– நமது நிருபர் –

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.