"KGF 2-வை விட முதல் பாகம்தான் ஸ்பெஷல்! ஏன்னா…"- `கே.ஜி.எஃப்' படங்களின் தமிழ் டயலாக் ரைட்டர் அசோக்

`கே.ஜி.எஃப்’ முதல் பாகம் தமிழில் வெளியானபோதே அதன் தமிழ் வசனங்கள், குறிப்பாக பன்ச் வசனங்கள் பெரியளவில் டிரெண்டாகின. அதற்கான ஸ்க்ரிப்ட்டை எழுதியவர் அசோக். இவரேதான் இப்போது `கே.ஜி.எஃப் 2′ தமிழ் வெர்ஷனிலும் பணியாற்றியிருக்கிறார். அவரிடம் பேசியதிலிருந்து…

கே.ஜி.எஃப் டீம்ல எப்படிச் சேர்ந்தீங்க?

“தெலுங்குல ‘மைனா’னு ஒரு படம். இதுக்கு தமிழ் டப்பிங்கிற்காக வசனம் எழுதியிருந்தேன். படத்தோட நிர்வாகத் தயாரிப்பாளர் ராமராஜன். இவர் மூலமாதான் இந்த ‘மைனா’ படவாய்ப்பு வந்தது. இதுல என்னோட வொர்க் அவருக்கு பிடிச்சுப் போகவே ‘கே.ஜி.எஃப்’ படத்துகாக என்னை ரெஃபர் பண்ணினார். சில வசனங்களை எனக்கு போட்டுக் காட்டி, அதற்கு தமிழ்ல எழுதச் சொன்னாங்க. நானும் எழுதிக் கொடுத்துட்டு வந்துட்டேன். அதுக்கு அப்புறம் படம் ரெடியானதுக்கு அப்புறமா படம் பார்த்துட்டு எழுத ஆரம்பிச்சேன். ஒரு மாசத்துல மொத்தப் படத்துக்கும் எழுதிக் கொடுத்துட்டேன். புரொடக்‌ஷன்ல இருந்து எந்தவொரு டார்ச்சரும் இருக்காது. நினைச்ச மாதிரி எழுதிக் கொடுத்தேன்.

ஒரிஜினல் வெர்ஷன்ல இருந்து தமிழுக்கு ஏத்த மாதிரி எழுதுனது சவாலா இருந்தது. ஆனா, ‘கே.ஜி.எஃப்’ இப்படியொரு படமா வரும்னு நினைக்கவே இல்ல. அதனால, நல்ல படத்துல நல்லா வேலை பார்த்திருக்கோம்னு திருப்தி இருக்கு. தமிழுக்கு எது தேவையோ அதை தமிழ்ல எழுதுனேன். இன்னும் சொல்லணும்னா ‘கே.ஜி.எஃப்’ ஒண்ணுதான் எப்போவும் ஸ்பெஷல். ஏன்னா, இப்படியொரு படமா வரும்னு தெரியாம, எதிர்பார்ப்பு கொஞ்சமும் இல்லாம பண்ணின படம் அது. வேலையை மட்டும் பார்த்தோம். கடுமையா உழைச்சிருக்கோம். அதற்கான பலன் கிடைச்சது.”

அசோக்

`கே.ஜி.எஃப்’ இயக்குநர் பிரசாந்த் நீலுடன் நடந்த முதல் சந்திப்பு பற்றி?

“கன்னடம் டப்பிங் முடிச்ச நேரத்துல முதல்ல பார்த்தேன். படம் பார்த்தப்போ கன்னடம் கொஞ்சமும் தெரியாது. அவருக்குத் தமிழ் தெரியாது. பொம்மை மாதிரி உட்கார்ந்து பார்த்துட்டு பேசிட்டு வந்தேன். ஆனா, ‘கே.ஜி.எஃப்’ படத்துல ஹீரோ யஷ்ஷோட உழைப்பு அதிகம். ஏன்னா, ஒவ்வொரு டயலாக்ஸுக்கும் பக்கத்துல உட்கார்ந்து இப்படி எழுதலமானு கேட்டுட்டு பண்ணினார். அவருக்கு இருக்குற சந்தேகங்களை க்ளியர் பண்ணிக்கிட்டார். ரொம்பவே ஹெல்ப் பண்ணினார். ஒரு ஹீரோ பக்கத்துல உட்கார்ந்து வேலைப் பார்த்தது பிரம்பிப்பா இருந்தது.

அதுக்கு அப்புறம் பார்ட் 2க்கும் பிரசாந்த் பேசினார். கன்னடம் வெர்ஷனுக்கு ஏத்த மாதிரியே லிப் சின்க் வெச்சு தமிழ் வரிகள் எழுதுறது கஷ்டமா இருக்கும். கன்னடம் மற்றும் தமிழ் மொழிக்கு வித்தியாசம் அதிகம். எங்கேயிருந்து லிப் சின்க் எடுக்குறோம், எப்படி வரிகள் வெச்சிட்டு முடிக்குறோம்ங்குறது முக்கியம். இதை தெரிஞ்சாதான் சரியா பண்ண முடியும். கமல் சார்கிட்ட உதவி இயக்குநரா வேலை பார்த்திருக்கேன். அவரோட ‘ஹேராம்’ படத்தை பேன் இந்தியா படமா ரிலீஸ் பண்ணியிருப்போம். அப்போ, கமல் சார் கத்துக்கொடுத்த எல்லாமே இங்கே எனக்கு ஹெல்ப் பண்ணுச்சு. வழக்கமான தமிழ்ப் படமா அது தெரியணும்ங்குற மெனக்கெடல் அதிகமா இருக்கும். முக்கியமா, ‘கே.ஜி.எஃப்’ படத்தோட எமோஷன்ஸ் எல்லாத்தையும் தமிழுக்குக் கடத்துறது கஷ்டம். அதாவது, ஒரிஜினல் வெர்ஷன்ல டைரக்டர் பண்ணினதை இம்மியளவும் மீட்டர் குறையாம இங்கே கொண்டு வர்றது சவாலான விஷயம்.”

பிரசாந்த் நீல்

முதல் பார்ட்ல நிழல்கள் ரவி வாய்ஸ் பெருசா பேசப்பட்டுச்சு. அவரை எப்படிக் கொண்டு வந்தீங்க?

“தியேட்டர்ல படம் பார்க்கப் போயிருந்தேன். அப்போ, கவர்மென்ட் விளம்பரம் ஒண்ணுல வாய்ஸ் ஓவர் போயிட்டு இருந்தது. அந்த வாய்ஸூக்குச் சொந்தக்காரர் நிழல்கள் ரவி. அந்த வாய்ஸ் கேட்டவுடன் மேஜிக் மாதிரியிருந்தது. அவரை உடனே ‘கே.ஜி.எஃப்’க்குக் கூப்பிட்டு வந்தேன். ரொம்ப சீனியர் பெர்சனாலிட்டி. இருந்தும், நமக்கு எது தேவையோ அதைச் சரியா பண்ணி கொடுத்தார். மூணு மணி நேரம் ஆச்சு. எங்களுக்குள்ள நல்ல சின்க் இருந்தது. ரெண்டு பேரும் பேசி பேசி டயலாக்ஸ் மாடுலேஷன் முடிவு பண்ணிக்கிட்டோம். படத்தோட வெற்றிக்கு அவரோட குரலும் ஒரு முக்கியமான காரணம்.”

சஞ்சய் தத்தோட `அதீரா’ கேரக்டர் பற்றி?

“ஒரிஜினல் வெர்ஷன்ல எழுதியிருந்த அதே ரிதம்ல என்னோட டயலாக்ஸும் கரெக்டா நின்னுருச்சு. ராக்கி கேரக்டரை பார்ட் ஒன்ல சரியா கொண்டு வந்து நின்னுட்டேன். பார்ட் 2-வின் போது அதீரா கேரக்டரை ஆடியன்ஸ் முன்னாடி நிறுத்தணும்னுங்குறது பெரிய சவால் இருந்தது. சஞ்சய் சத்தை ஃப்ரேம்ல பார்த்த போதே பிரமிப்பா இருந்தது. ஆனா, டப்பிங் குடுக்கறப்போ ரெகுலர் வாய்ஸ் மாதிரி இருக்கக்கூடாதுனு தெளிவா இருந்தேன். அடுத்து டப்பிங் ஆர்டிஸ்ட் ஶ்ரீனிவாசா மூர்த்தி சரியா பொருந்திப் பேசினார். பத்து வாய்ஸ் சேன்ஞ்கிட்ட பேசி கரெக்‌ஷன் பண்ணி பண்ணி அதீராவோட தமிழ் வாய்ஸை செல்கட் பண்ணினோம். அவரோட அந்த வாய்ஸ் கேட்டுட்டு புல்லரிச்சிருச்சு. நம்மதான் இதை பண்ணிட்டு இருக்கோமானு பிரமிப்பு கொடுத்தார் ஶ்ரீனிவாசா மூர்த்தி. ரமீகா மேடம் வாய்ஸூக்கும் சரியா தீபா வெங்கட் செம க்ளோஸா டப்பிங் கொடுத்திருந்தாங்க. அந்த கேரக்டருக்கு அவங்க வாய்ஸ் ரொம்ப முக்கியமா இருந்தது.”

சஞ்சய் தத்

நீங்க சினிமாவுக்குள்ள எப்படி வந்தீங்க?

“‘ஹேராம்’ படத்தின் போது கமல் சார்கிட்ட உதவி இயக்குநரா இருந்தேன். கமல் சார் ஸ்கூல்ல இருந்து நிறைய கத்துக்கிட்டேன். அவரோட சிஷ்யன் நான். என்னோட முதல் படம் ‘ஆயுள் ரேகை’. அதை டிஜிட்டல் தொழில்நுட்பத்துல எடுத்திருந்தேன். ஆனா, படம் ரிலீஸாகி பெருசா போகல. இதுக்கு அப்புறம் சில படங்கள்ல நிர்வாகத் தயாரிப்பாளரா வேலைப் பார்த்தேன். அதுல ஒண்ணுதான் ‘நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்’. அதுல நாகராஜன் கேரக்டரும் பண்ணியிருந்தேன். சொல்லப்போனா ரொம்ப பட்ஜெட் குறைவா பண்ணின படம் அது. அதனால, நாகராஜன் கேரக்டருக்குக் கொடுக்க வேண்டிய சம்பளத்தை குறைக்கத்தான் நானே அந்த கேரக்டர்ல நடிச்சேன். ஆனா, சின்ன கேரக்டரா இருந்தாலும் அது பெரிய ரீச்சாகி நல்ல பெயரை வாங்கிக் கொடுத்திருச்சு.”

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.