The Unbearable Weight of Massive Talent Review: 90ஸ் கிட்ஸின் ஃபேவரைட் நிக்கோலஸ் கேஜின் படம் எப்படி?

90ஸ் கிட்ஸின் ஃபேவரைட் ஹாலிவுட் நடிகர்களில் ஒருவரான நிக்கோலஸ் கேஜ், அவராகவே திரையில் தோன்றி, முடிவை நெருங்கும் தன் கரியரைப் புதுப்பிக்கும் முயற்சியே இந்த `மகத்தான திறமையின் தாங்க முடியாத எடை’ (The Unbearable Weight of Massive Talent) படத்தின் ஒன்லைன்.

படத்தின் கதைப்படி, நிக் கேஜ் ஒரு காலத்தில் புகழின் உச்சியிலிருந்த ஹாலிவுட் நடிகர். தற்போது தன் கரியரின் அஸ்தமனத்தில் இருக்கும் அவருக்குக் குடும்பத்திலும் பிரச்னை. விவாகரத்துப் பெற்ற மனைவி, அப்பாவை வெறுக்கும் மகள் என இந்த அழுத்தங்களும் இணைந்துகொள்ள, தன் கரியரை முடித்துக் கொள்வதாகத் தீர்மானிக்கிறார் நிக். பணத்தேவைக்காக ஸ்பெயினில் அவரின் தீவிர ரசிகர் ஒருவரின் பிறந்தநாள் பார்ட்டியில் விருந்தினராகக் கலந்துகொள்ளச் செல்கிறார். அங்கு அவர் சந்திக்கும் பிரச்னைகளும், நிஜ வாழ்வில் அவர் செய்யும் சாகசங்களும்தான் படத்தின் மீதிக்கதை.

The Unbearable Weight of Massive Talent Review

மெட்டா (Meta) படங்கள் எப்போதுமே சுவாரஸ்யமானவை. படத்துக்குள் படம், படத்துக்குள் நிஜ வாழ்க்கை, நிஜ வாழ்க்கையின் பிரதிபலிப்பாகப் படங்கள் என அதன் பல பரிமாணங்களை வெவ்வேறு இயக்குநர்கள் முயன்று பார்த்துவிட்டனர். தமிழில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான ‘ஜிகர்தண்டா’, பார்த்திபனின் ‘கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்’ போன்றவை அத்தகையதொரு முயற்சியே.

இதில் இயக்குநர் டாம் கார்மிகன் நிக்கோலஸ் கேஜின் பழைய படங்களையும் அவரின் ஒட்டுமொத்த கரியரையும் ஸ்பூஃபாகப் பயன்படுத்தி ஒரு சுவாரஸ்யமான பிளாக் காமெடி கதையை எழுதியிருக்கிறார்.

தன் பெயரில், தன் கரியரைப் பிரதிபலிக்கும் ஒரு புனைவு வெர்ஷனில் நிக்கோலஸ் கேஜ், அதே பெயரில் திரையில் தோன்றுகிறார். ‘வயசானாலும், அந்த ஸ்டைலும், நடிப்பும் இன்னும் மாறவில்லை’ என்று சொல்வதுபோல், 1990-களில் தான் நடித்த பாத்திரம் ஒன்றின் மேனரிசத்தை அதன் இளமை மாறாமல் அப்படியே பிரதிபலித்திருக்கிறார்.

தன் மனைவி மற்றும் மகளின் முன்பாக தன் ஆற்றாமையை வெளிப்படுத்தும் போதும், வயதான கிழவனாக வேஷம் போட்டு நடக்கும்போதும், தான் எப்பேர்ப்பட்ட அனுபவம் கொண்ட நடிகர் என்பதைச் சொல்லாமலே புரியவைக்கிறார். சென்ற வருடம் அவர் நடிப்பில் வெளியான ‘பிக்’ (Pig) படம் அவரின் சீரியஸான முகத்தைக் காட்டினால், இந்தப் படம் அதற்கு நேர் எதிராக ஜாலி கேலி செய்கிறது.

The Unbearable Weight of Massive Talent Review

ஒரு கட்டத்துக்கு மேல், ‘Veteran Actors’ எனப்படும் மூத்த நடிகர்கள் கால மாற்றத்துக்கு ஏற்ப தங்களைத் தகவமைத்துக்கொள்வது அவசியம். அப்படியான தெளிவைப் பறைசாற்ற, தங்களின் கரியரைப் புரட்டிப்போடும் படங்களை அவர்கள் செய்வது உண்டு. ஹாலிவுட்டிலேயே மைக்கேல் கீட்டன், தன் கரியரை மறைமுகமாகப் பிரதிபலிக்கும் ‘பேர்ட்மேன்’ படத்தைச் செய்தார். தமிழில் கமல்ஹாசன் நடித்த ‘உத்தமவில்லன்’ மற்றுமொரு உதாரணம்.

இப்படியான வகைமைகளின் கீழ் இந்தப் படத்தையும் வைத்துக் கொள்ளலாம். இதன் ஜானர் மட்டும் ‘டார்க் ஆக்ஷன் காமெடி’ என நிக்கோலஸ் கேஜுன் பிம்பத்துக்குப் பொருந்திப் போகும்படி கட்டமைக்கப்பட்டிருக்கிறது.

The Unbearable Weight of Massive Talent Review

படத்தின் மற்றொரு நாயகனாக ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ புகழ் பெட்ரோ பாஸ்கல். இவருக்கும் நிக்கோலஸ் கேஜுக்குமான கெமிஸ்ட்ரி அட்டகாசமாக க்ளிக்காகி இருக்கிறது. டார்க் காமெடி படத்தில் இவர்களின் ப்ரோமேன்ஸ் காட்சிகள் படத்துக்கும் சுவாரஸ்யம் சேர்த்திருக்கின்றன. குறிப்பாக, அவர் சேர்த்து வைத்திருக்கும் நிக்கோலஸ் கேஜ் சம்பந்தப்பட்ட நினைவுப் பொருள்கள், நமக்கும் நாஸ்டால்ஜியா உணர்வுகளைக் கொடுக்கின்றன. ‘Gone in Sixty Seconds’, ‘Ghost Rider’, ‘Con Air’, ‘National Treasure’, ‘The Rock’ உள்ளிட்ட படங்களின் குறியீடுகள் 90ஸ் கிட்ஸைக் குதூகலப்படுத்தலாம்.

கேஜின் முன்னாள் மனைவியாக வரும் ஷரோன் ஹோர்கன், மகளாக வரும் லில்லி ஷீன் ஆகியோரின் கதாபாத்திரங்கள் இன்னமும் வலுவாக, தெளிவாக எழுதப்பட்டிருக்கலாம். தொடக்கத்தில், நிக் கேஜின் கதாபாத்திரத்தை சுயநலம் மிக்கதாகவும், தான் செய்ய விரும்புவதை மற்றவர்கள் மேல் திணிப்பதாகவும் காட்சிப்படுத்த நினைத்தபோதும், நமக்கு ஏனோ அவரின் மீது பரிதாபம் மட்டுமே வருகிறது.

The Unbearable Weight of Massive Talent Review

ஸ்க்ரிப்டைப் பொறுத்தவரை, டார்க் காமெடி என்றானபின், அதில் இன்னமும் விளையாடியிருக்க வேண்டாமா? நிக்கோலஸ் கேஜே, தன் இமேஜை விடுத்து இறங்கி அடிக்க ஆசைப்படும்போது அதற்கான முழுமையான தீனி, காட்சிகளில் இல்லாத ஒரு ஃபீல். இன்னமும் பல குறீயிடுகளைப் புகுத்தி, காமெடி சேர்த்து ரகளை செய்யும் வாய்ப்பினைத் தவற விட்டிருக்கிறார்கள்.

இருந்தும், ஒரு சீனியர் நடிகர் இப்படியான ஜாலி முயற்சிகளில் இறங்குவது, நிச்சயம் இதுபோல மேலும் பல புதிய முயற்சிகளுக்கு வழிவகுக்கும். வெல்கம் பேக் நிக்கோலஸ் கேஜ்!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.