அமித்ஷா இன்று புதுச்சேரி வருகை: மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு

புதுச்சேரி:
புதுச்சேரிக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இன்று வருகையையொட்டி, புதுச்சேரி முழுதும் மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அரசு முறைப்பயணமாக இன்று புதுச்சேரி வருகிறார். அவரை, தமிழிசை, முதல்வர் ரங்கசாமி மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் அவரை வரவேற்கின்றனர். காரில் கருவடிக்குப்பம் சித்தானந்த சுவாமி கோவிலுக்கு சென்று வழிபடுகிறார். ஈஸ்வரன் கோவில் தெருவில் உள்ள பாரதியார் நினைவு இல்லத்தில் மரியாதை செலுத்துகிறார். பின்னர் அரவிந்தர், அன்னை சமாதிகளுக்கு அஞ்சலி செலுத்துகிறார்.

பின்னர் புதுச்சேரி பல்கலை வளாகத்தில் நடைபெறும் அரவிந்தரின் 150ம் ஆண்டு விழாவில் பங்கேற்கிறார். பல்கலையில் புதிய கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

தொடர்ந்து அவர் கவர்னர் மாளிகை செல்கிறார். அங்கு கவர்னர் மற்றும் முதல்வர் உள்ளிட்டோருடன் மதிய விருந்தில் பங்கேற்கிறார். .

கம்பன் கலையரங்கம் செல்லும், அமித்ஷா, அங்கு நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்று, புதிதாக தேர்வு செய்யப்பட்ட 390 போலீசாருக்கு பணி ஆணை வழங்குகிறார். தொடர்ந்து, இ.சி.ஆரில் உள்ள நவீன மீன் மார்க்கெட் அருகில் புதிய பஸ் நிலையம், விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

மாலை பா.ஜ., தலைமை அலுவலகம் செல்லும் அவர், புதுப்பிக்கப்பட்ட கட்சி அலுவலகத்தை திறந்து வைத்து, கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.

பின்னர் லாஸ்பேட்டை விமான நிலையம் சென்று, ஹெலிகாப்டர் மூலம் சென்னை செல்கிறார்.அமித்ஷா வருகையையொட்டி, புதுச்சேரி முழுதும் மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.