“ஓடுடா ஓடு – தெறித்து ஓடிய மக்கள்”..! விரட்டி விரட்டி படம் பிடித்த டிரோன் கேமரா.!

கடலூரில் 10 ஆண்டுகளுக்கு முன் கட்டுமானப் பணிகள் கைவிடப்பட்ட தொழிற்சாலை வளாகத்துக்குள் புகுந்து இரும்புப் பொருட்களை திருடிய சிலர், கண்காணிப்பு டிரோன் கேமராவைப் பார்த்ததும் தெறித்து ஓடிய காட்சிகள் வெளியாகியுள்ளன. திருடிச் செல்லப்பட்ட பொருட்களை வீடு வீடாகச் சென்று தொழிற்சாலை நிர்வாகத்தினர் கைப்பற்றிய நிலையில், ஆத்திரமடைந்த ஒருவர் அரிவாளை எடுத்துக் கொண்டு ஆவேசமாக அவர்களிடம் சண்டையிட்ட கூத்தும் அரங்கேறியது.

கடலூர் மாவட்டம் பெரியகுப்பம் பகுதியில் 20 ஆண்டுகளுக்கு முன்பு எண்ணெய் சுத்தகரிப்பு ஆலை ஒன்றின் கட்டுமானப் பணிகள் தொடங்கி, நடைபெற்று வந்தது. முக்கால்வாசி பணிகள் முடிந்து தொழிற்சாலை இயங்குவதற்கான இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், கடந்த 2011ஆம் ஆண்டு கடலூர் மாவட்டத்தைப் புரட்டிப் போட்ட தானே புயலில் சிக்கி, தொழிற்சாலை கடும் சேதத்தை சந்தித்தது.

இதனால் தொழிற்சாலை நிர்வாகத்தினர் இறுதிக்கட்டப் பணிகளை அப்படியே கைவிட்டுச் சென்றுள்ளனர். தொழிற்சாலைக்குள் பல லட்ச ரூபாய் மதிப்பிலான மோட்டார்கள், இரும்புக் குழாய்கள், இயந்திரங்கள் உள்ளிட்டவற்றையும் அப்படியே விட்டுச் சென்றுள்ளனர். 

நாளடைவில் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த சிலர் கிடைக்கும் சந்து பொந்துகள் வழியாக தொழிற்சாலைக்குள் புகுந்து, பொருட்களை திருடிச் செல்லத் துவங்கியுள்ளனர். ஒரு கட்டத்தில் பெண்கள் சிலரும் இந்த திருட்டில் களமிறங்கினர். அன்றாடம் காலை, மாலை வேளைகளில் கையில் தண்ணீர் பாட்டில், சாக்குப்பையுடன் கிளம்பிச் சென்று இரும்புப் பொருட்களை திருடி வருவதையே ஒரு வேலையாகச் செய்யத் துவங்கியுள்ளனர்.

எந்தவித உறுத்தலும் இன்றி பட்டப்பகலில் இருசக்கர வாகனங்களை எடுத்து வந்து பொருட்களை திருடிச் செல்லத் துவங்கியுள்ளனர். சுமார் 1500 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள தொழிற்சாலையில் சொற்ப அளவிலேயே காவலாளிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இல்லாத நேரத்திலோ, அவர்களது கவனத்தை திசை திருப்பியோ இரவு பகலாக பொருட்கள் திருட்டு நடைபெற்று வந்துள்ளது.

காவலாளிகளை திசை திருப்ப தொழிற்சாலையின் ஒரு பகுதியில் தீ வைக்கும் மர்ம நபர்கள், காவலாளிகள் அங்கு சென்றதும் வேறு வழியாக தொழிற்சாலைக்குள் புகுந்து திருடும் சம்பவமும் நடக்கும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் காலை வழக்கம்போல சுற்றுவட்டார கிராம மக்கள் 50க்கும் மேற்பட்டோர் தொழிற்சாலை வளாகத்துக்குள் புகுந்து பொருட்களைத் திருடிச் செல்லும் பணியில் மும்முரமாக இருந்தனர்.

அப்போது தொழிற்சாலை நிர்வாகம் சார்பில் டிரோன் கேமராவை பறக்கவிட்டு போலீசார் உதவியுடன் கண்காணித்தனர். டிரோன் கேமராவைப் பார்த்ததும் திருடிய பொருட்களை அப்படியே போட்டுவிட்டு, முகங்களை துணியால் மூடியபடி அத்தனை பேரும் ஓட்டம் பிடித்தனர்.

இருசக்கர வாகனத்தில் பொருட்களைத் திருடிச் சென்றவர்கள், போலீசாரைப் பார்த்ததும் வாகனத்தை அப்படியே விட்டு விட்டு ஓடினர். அப்படி சுமார் 10க்கும் மேற்பட்ட வாகனங்களை பறிமுதல் செய்த போலீசார் அவற்றை காவல் நிலையம் எடுத்துச் சென்று வழக்குப்பதிவு செய்தனர்.

தொடர்ந்து வீடு வீடாகச் சென்ற தொழிற்சாலை ஊழியர்கள், திருடிச் செல்லப்பட்டு பதுக்கி வைக்கப்பட்டிருந்த பொருட்களை பறிமுதல் செய்தனர். ஒரு வீட்டில் இருந்து மட்டும் 500 கிலோவுக்கும் மேற்பட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டன. அப்படி ஒரு வீட்டில் பொருட்களை பறிமுதல் செய்துகொண்டிருந்தபோது, வீட்டின் உரிமையாளர் அரிவாளுடன் ஆவேசமாக சண்டைக்குச் சென்றார்.

சிலர் திருடிய பொருட்களை தங்களது வயல் பகுதியில் மண்ணில் புதைத்து வைத்திருந்தனர். அந்தப் பொருட்களையும் தொழிற்சாலை ஊழியர்கள் பறிமுதல் செய்தனர்.

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.