சபரிமலையில் ஆன்லைன் முன்பதிவு: உயர் நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு!

உலகப் புகழ் வாய்ந்த
சபரிமலை
ஐயப்பன் கோயிலுக்கு ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்கின்றனர். இதனிடையே, கொரோனா தொற்று காரணத்தால் சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தா்கள் தரிசனத்துக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. தற்போது தொற்று பரவல் குறைந்துள்ளதால் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன.

சபரிமலை ஐயப்பன் கோயிலை பொறுத்தவரை கடந்த சில ஆண்டுகளாக
ஆன்லைன் முன்பதிவு
அடிப்படையில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இதற்கான தொழில்நுட்ப ஆதரவை டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் வழங்குகிறது. ஆன்லைன் முன்பதிவு அனைத்தும், கேரள காவல் துறையின் முழு கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது.

இதனை எதிர்த்து கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்கில் தீர்ப்பளித்த அம்மாநில உயர்நீதிமன்ற நீதிபதிகள் அனில் நரேந்திரன், அஜித்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு, சபரிமலையில் ஆன்லைன் முன்பதிவு செயல் முறையை அமல்படுத்தவும், அதனை கட்டுப்படுத்தவும் கேரள காவல் துறைக்கு என்ன அதிகாரம் உள்ளது என்று கேள்வி எழுப்பியது.

மேலும், சபரிமலை
ஐய்யப்பன் கோயில்
விஷயத்தில் தலையிட கேரள அரசுக்கோ, காவல் துறைக்கோ எந்த அதிகாரமும் இல்லை என்று குறிப்பிட்ட
உயர் நீதிமன்றம்
, நிர்வகிக்கவும், கோயிலை முழு கட்டுப்பாட்டில் வைக்க திருவிதாங்கூர் தேவஸ்தானத்திற்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என தெளிவுபடுத்தியது.

அத்துடன், சபரிமலை ஐய்யப்பன் தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவை திருவிதாங்கூர் தேவஸ்தானத்தின் முழு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர வேண்டும். மூன்று மாதங்களுக்குள் இதனை செயல்படுத்த வேண்டும். திருவிதாங்கூர் தேவஸ்தானத்திடம் ஒப்படைக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் கேரள மாநில டிஜிபி எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

அதேசமயம், சபரிமலையில் பக்தர்கள் சிரமம் இன்றி தரிசனம் செய்ய வசதியாகவே ஆன்லைன் முன்பதிவு செயல் திட்டத்தை கேரள காவல் துறை அமல்படுத்தியது என்றும், அதில் எந்தவித உள்நோக்கமும் இல்லை என்றும் கேரள அரசு சார்பில் வாதிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.