படகு விபத்து: எட்டு உடல் மீட்பு| Dinamalar

பெய்ரூட்: லெபனானில் இருந்து புலம்பெயர விரும்பியோருடன் ஐரோப்பா நோக்கி சென்ற படகு, கடலில் கவிழ்ந்தது. இதில் பலியான எட்டு பேரின் உடல்கள் நேற்று மீட்கப்பட்டன.

மேற்காசிய நாடான லெபனான், பல்லாண்டுகளாக அகதிகளுக்கு தஞ்சம் அளிக்கும் நாடாக விளங்கியது. ஆனால், 2019 அக்.,ல் அந்நாட்டின் பொருளாதாரம் பெரும் சரிவை சந்திக்க தொடங்கியது.இதனால், அந்நாட்டினர் பலரும் ஐரோப்பிய நாடுகளுக்கு புலம் பெயரத் தொடங்கினர். இவர்களுக்காக சட்டவிரோதமாக படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இதன்படி, லெபனானின் கலாமூன் நகர கடற்கரையில் இருந்து புலம் பெயர விரும்பிய 56 பேருடன், நேற்று முன்தினம் ஒரு படகு புறப்பட்டது. வழியில், பேரலைகள் காரணமாக படகு கவிழ்ந்தது. தகவல் அறிந்த பாதுகாப்பு படையினர், மீட்பு நடவடிக்கைகளை உடனடியாக தொடங்கினர்.இதில், 47 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும், கடலில் மூழ்கி பலியான இளம்பெண் உடலும் சிக்கியது.

மற்றவர்களை தேடும் பணி நேற்று தொடர்ந்தது. இதில், திரிபோலி நகர கடற்கரையை அடுத்த சிறிய தீவு அருகே, எட்டு பேரின் உடல்கள் மீட்கப்பட்டன.

* கிழக்காசிய நாடான ஜப்பானில், 26 பேருடன் சென்ற சுற்றுலா படகு நேற்று முன்தினம் கசுனி நீர்வீழ்ச்சி அருகே கடலில் மூழ்கியது. தகவல் அறிந்த மீட்பு படையினர், தேடுதல் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில், நாட்டின் வடக்கு கடற்கரை பகுதியில் இருந்து ஏழு ஆண்கள், மூன்று பெண்கள் என, 10 பேரின் உடல்கள் நேற்று மீட்கப்பட்டன. மற்றவர்களை தேடும் பணி தொடர்கிறது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.