ரூ26 கோடி ‘செக்’ மோசடி வழக்கு; என் மீதான குற்றச்சாட்டுக்கு எவ்வித ஆதாரமும் இல்லை: தெலுங்கு நடிகையும், தயாரிப்பாளருமான ஜீவிதா விளக்கம்

ஐதராபாத்: என் மீது தொடரப்பட்ட ரூ26 கோடி ‘செக்’ மோசடி வழக்கில், நான் எந்த தவறும் செய்ய வில்லை என்றும், என் மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரமில்லை என்று தெலுங்கு நடிகையும், தயாரிப்பாளருமான ஜீவிதா கூறினார். தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த தனியார் தொழில் நிறுவனர் கோட்டேஸ்வர ராஜுவும், அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான ஹேமாவும், தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளரும், நடிகையுமான ஜீவிதா ராஜசேகர் மீது செக் மோசடி புகார் கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதில், ‘குறிப்பிட்ட சினிமா படத்தைத் தயாரிப்பதற்காக ஜீவிதா ராஜசேகருக்கு கடனாக ரூ.26 கோடி கொடுத்தோம். இந்த தொகையை அவருக்கு கொடுப்பதற்காக எங்களது சொத்தை விற்றுக் கொடுத்தோம். பின்னர் அவர் ரூ.26 கோடிக்கான பணத்தை திருப்பி தரும் பொருட்டு அதே தொகைக்கான இரண்டு காசோலைகளைக் கொடுத்தார். ஆனால் அந்த காசோலைகளை வங்கியில் காட்டிய போது, அந்த காசோலையின் வங்கிக் கணக்கில் பணம் இல்லை என்பது தெரியவந்தது. அதனால் அவர் மீது மோசடி வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கோரியிருந்தனர். இம்மனுவை விசாரித்த நகரி நீதிமன்றம், செக் மோசடி வழக்குபதிந்து கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் ஜீவிதா ராஜசேகருக்கு பிடிவாரன்ட் பிறப்பித்தது. தொடர்ந்து இவ்வழக்கின் விசாரணை நடைபெற்று வரும் நிலையில் நகரியில் ஜீவிதா ராஜசேகர் கூறுகையில், ‘என் மீது தொடரப்பட்ட ெசக் மோசடி வழக்கில் நான் எந்த தவறும் செய்யவில்லை. என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை. மேலும் என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து எனக்கு எதுவும் தெரியாது. இவ்வழக்கை சட்ட ரீதியாக எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன்’ என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.