“வாங்க பணம் தருகிறோம்” வலை விரிக்கும் கடன் செயலிகள்.. சிக்கினால் சின்னாபின்னம்தான்.!

விழுப்புரத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் அவசரத்துக்காக ஆன்லைன் செயலி ஒன்றில் கடன் வாங்கி, அதனைத் திருப்பிச் செலுத்தி விட்ட நிலையில், அந்தப் பெண்ணுக்கே தெரியாமல் அவரது மொபைலில் இருந்து புகைப்படங்களை சேகரித்த மர்ம கும்பல், அவற்றை ஆபாச வீடியோவாக சித்தரித்து, மேலும் பணம் கேட்டு மிரட்டி வருகின்றனர். 

விழுப்புரம் மாவட்டம் வளவனூரைச் சேர்ந்த 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், தனது மொபைலில் கடன் செயலியை பதிவிறக்கம் செய்து, அதன் மூலம் 7 ஆயிரம் ரூபாயை கடந்த பிப்ரவரி மாதம் கடனாக வாங்கியுள்ளார்.

கடன் வாங்கிய சில தினங்களில் அதனை திருப்பிச் செலுத்தியும் இருக்கிறார். இந்த நிலையில் அவரது வாட்சப் எண்ணுக்கு புதிய எண்ணிலிருந்து வீடியோ ஒன்று வந்திருக்கிறது. வீடியோவை திறந்து பார்த்தபோது, அந்தப் பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து, அவர் வேறு ஆணுடன் நெருக்கமாக இருப்பதுபோல் மார்பிங் செய்யப்பட்டிருந்தது.

வீடியோவைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பெண், உடனடியாக அந்த எண்ணுக்கு கால் செய்ய முயன்றிருக்கிறார். ஆனால் அழைப்பு செல்லவில்லை. பிறகு வாட்சப்பிலேயே வீடியோவை அனுப்பியது யார் எனக் கேட்டிருக்கிறார்.

அதற்கு தன்னை யார் என வெளிக்காட்டாத அந்த மர்ம நபர், தாம் அனுப்பும் யுபிஐ எண்ணில் 9 ஆயிரம் ரூபாயை அடுத்த 30 நிமிடங்களில் செலுத்த வேண்டும் என்றும் இல்லை என்றால் ஆபாச வீடியோவை, அந்தப் பெண்ணின் உறவினர்கள், நண்பர்கள் என எல்லோருக்கும் அனுப்பி விடுவதாக மிரட்டியுள்ளான். மேலும் அவரது வாட்சப் முகப்புப் புகைப்படத்தை எடுத்து, அதன் கீழே கால் கேர்ள் என்று எழுதி, அதனையும் உறவினர்கள், நண்பர்களுக்கு அனுப்பி விடுவதாக மிரட்டியுள்ளான்.

பாதிக்கப்பட்ட பெண் விழுப்புரம் சைபர் கிரைம் போலீசில் புகாரளித்துள்ளார். போலீசாரும் மர்ம நபர் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

செல்போனில் ஒவ்வொரு செயலிகளை பதிவிறக்கம் செய்யும்போதும் சில அனுமதிகளை செயலி நிறுவனங்கள் நம்மிடம் கேட்கும். Contacts, voice recorder, call recorder, message read, Camara என அவை கேட்கும் அனுமதிகளை அவசர கதியில் சிலர் கொடுத்து விடுகின்றனர்.

பாதுகாப்பான செயலிகளால் எந்தவிதமான ஆபத்தும் இல்லை என்ற நிலையில், குறிப்பிட்ட சில செயலிகள் நமது செல்போனில் உள்ள தனிப்பட்ட விவரங்களை சேகரித்து வைத்துக் கொள்ளும் என்கின்றனர் சைபர் கிரைம் போலீசார். எனவே செயலிகளை தரவிறக்கம் செய்வதில் மிகுந்த கவனம் வேண்டும் என்கின்றனர்.

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.