வைகறையில் எழுந்து வானத்தை பாருங்கள்: தென்கிழக்கில் காத்திருக்கு அதிசயம்

புதுடெல்லி: `சூரிய குடும்பத்தை சேர்ந்த 4 கோள்கள் வரும் 29ம் தேதி அதிகாலை ஒரே நேர்கோட்டில் சந்திக்க உள்ளன. இதனைப் பார்ப்பதற்கு டெலஸ்கோப் தேவையில்லை,’’ என்று நாசா தெரிவித்துள்ளது. சூரிய குடும்பத்தை சேர்ந்த மிகப் பெரிய 4 கோள்களான செவ்வாய், வெள்ளி, சனி, வியாழன் ஆகிய நான்கும் வரும் 29ம் தேதி ஒரே நேர்கோட்டில் அடுத்தடுத்து வரிசையாக சந்திக்க உள்ளன. இவை அனைத்தும் ஒரே கோட்டில் சந்திப்பதை இரவு நேரத்தில் பார்க்க முடிந்தாலும், ஏப்ரல் 23ம் தேதியில் இருந்து ஏப்ரல் 29ம் தேதி வரை, வைகறை பொழுதில் பார்ப்பதற்கு தெளிவாகவும், அழகாகவும் இருக்கும் என்று நாசா கூறியுள்ளது.இதன் சிறப்பு அம்சம் என்னவென்றால், இதனை பார்ப்பதற்கு டெலஸ்கோப் அல்லது பிற உபகரணங்கள், கருவிகள் எதுவும் தேவைப்படாது. வெறும் கண்களில் காண முடியும். 29ம் தேதி செவ்வாய், வெள்ளி, சனி, வியாழன் ஆகிய 4 கோள்களும், சூரியன் உதிப்பதற்கு முந்தைய வைகறை பொழுதில் ஒரே நேர்கோட்டில் வருவதை வானத்தின் தென்கிழக்கில் 45 நிமிடங்களுக்கு காண முடியும்.  ஏப்ரல் மாதம் தொடங்கியதில் இருந்தே செவ்வாய், வெள்ளி, சனி கோள்கள் அதிகாலையில் தெரிகின்றன. தற்போது, இவற்றுடன் வியாழனும் தெரியத் தொடங்கி உள்ளது. நேற்று முன்தினம் முதல் இவற்றுடன் சந்திரனும் இணைந்துள்ளது. அடுத்த மாதம் வரையில் இந்த கோள்கள் நேர்கோட்டில் வருவது தொடர்ந்து நிகழும். இது குறித்து கிரீன்விச் ராயல் மியூசிய வானியல் கல்வி அதிகாரி ஜேக் பாஸ்டர் கூறுகையில், “இந்த 4 கோள்களில் வெள்ளி மிகுந்த வெண்ணிற ஒளியுடனும், வியாழன் 2வதாகவும் ஒளி வீசக் கூடியதாகவும். சந்திரன் மிகவும் மங்கிய வெளிச்சத்துடன் தெரியும். இவற்றில் செவ்வாய் கோள் மட்டும் அதன் சிவப்பு நிறத் தன்மையால் பிற கோள்களில் இருந்து வேறுபட்டு ஆரஞ்சு நிறத்தில் தெரியும்,’’ என்று கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.