ஹார்வர்டு தமிழ் இருக்கைக்குப் பேராசிரியர் தேர்வு செய்யப்பட்டார்!

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள தமிழ் இருக்கைக்கு தலைமைப் பேராசிரியராக மார்த்தா ஆன் செல்பி (Martha Ann Selby) நியமிக்கப்பட்டுள்ளார். இவர், திலிப்குமார் எழுதிய தமிழ்ச் சிறுகதை தொகுப்பினை ஆங்கிலத்தில் ‘கேட் இன் தி அக்ரஹாரம்’ அண்ட் அதர் ஸ்டோரீஸ்’ (Cat in the Agraharam and other stories என்னும் தலைப்பில் சமீபத்தில் மொழி பெயர்த்துள்ளார். சங்க இலக்கிய ஆய்வில் முனைவர் பட்டம் பெற்றவர்.

உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் 380 ஆண்டுகள் பழமையும் பாரம்பரியச் சிறப்பும் கொண்டது ஹார்வர்டு. அதில் தமிழ் மொழிக்கு இருக்கை அமைக்கும் பணி கடந்த 2019- ஆண்டு இறுதிசெய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து அதற்குத் தலைமைப் பேராசிரியரைத் தேர்வு செய்யும் பணியைப் பல்கலைக்கழகம் மேற்கொண்டு வந்தது. தற்போது, அப்பணிக்கு மார்த்தா ஆன் செல்பி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதைக் கனடா வாழ்த் தமிழ் எழுத்தாளரும் ஹார்வர்டு மற்றும் டொரண்டோ பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கை அமைக்கும் பணியில் பங்காற்றி வருபவருமான அ.முத்துலிங்கம் தன்னுடைய முகநூல் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

மார்த்தா ஆன் செல்பி வரும் செப்டம்பர் 1-ம் தேதி ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் தமிழ் இருக்கைத் துறையில் ‘Sangam Professor of South Asian Studies’ என்கிற புதிய கல்விப் புலப் பணியில் இணையவிருப்பதாக முத்துலிங்கம் குறிப்பிட்டுள்ளார்.

மார்த்தா ஆன் செல்பி, ஆஸ்டின் நகரில் அமைந்துள்ள டெக்ஸாஸ் பல்கலைக்கழகத்தின் ‘சௌத் ஏசியன் ஸ்டடீஸ்’ துறையில் இணைப்பேராசியராகப் பணியாற்றி வருபவர். அங்கு அவர், இந்திய இலக்கியம், இந்து, பௌத்த மதக் கல்வி, இந்திய மருத்துவ முறை அறிமுகக் கல்வி உள்ளிட்ட பல பாடப்பிரிவுகளைப் பயிற்றுவித்து வருகிறார்.

இவர், 1994-ல், தமிழ் -சமஸ்கிருத இலக்கியங்களை ஆய்வு செய்து, சிகாகோ பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். சங்க இலக்கியத்தில் தொடர் ஆய்வுகளைச் செய்துவரும் இவருடைய நூல்கள், ஆக்ஸ்ஃபோர்டு, கொலம்பியா பல்கலைக்கழக வெளியீடுகளாக வெளிவந்துள்ளன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.