அதிகரிக்கும் கொரோனா: பிரதமர் மோடி நடத்தும் ஆலோசனை!

கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில் நான்காவது அலை குறித்த அச்சம் பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ளது. கடந்த இரு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அண்டை நாடான சீனாவில் பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. தென் கொரியாவிலும் பாதிப்பு அதிகரித்துள்ளது.

நான்காவது அலை தொடங்கிவிட்டதா என கேள்விகள் எழுந்த நிலையில் டெல்லி உட்பட சில வட மாநிலங்களில் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியது. ஜூன், ஜூலை மாதம் நான்காவது அலைக்கான வாய்ப்பு இருப்பதாக ஐஐடி ஆய்வுகள் குறிப்பிட்டிருந்தது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது.

கொரோனாவின் மூன்று அலைகளால் ஏற்பட்ட பாதிப்புகளும், உயிரிழப்புகளும், முடங்கிப் போன மக்களின் வாழ்வாதாரமும் ஒவ்வொருவர் வாழ்விலும் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது. ஓரிரு மாதங்களாக இயல்பு நிலைக்கு திரும்பிய நிலையில் மீண்டும் பாதிப்பு அதிகரித்திருப்பது கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டை பொறுத்தவரை சென்னையில் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. ஐஐடி வளாகத்தில் தொடர்ந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது. வட இந்திய தொழிலாளர்களால் பாதிப்பு பதிவானதாக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார். எனவே தமிழ்நாட்டில் பாதிப்பை கட்டுப்படுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது.

நாடு முழுவதும் பாதிப்பு அதிகரிக்கும் பகுதிகளை கண்டறிந்து நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பாக நாளை பிரதமர்
நரேந்திர மோடி
தலைமையில் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடைபெற உள்ளது. பல்வேறு மாநிலங்களின் முதலமைச்சர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.

இந்தக் கூட்டத்தில் மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி பங்கேற்க வாய்ப்புள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒன்றிய அரசுடன் மம்தா பானா்ஜிக்கு கருத்து வேறுபாடு நிலவி வரும் சூழலில், ஏற்கெனவே நடைபெற்ற கொரோனா பாதிப்பு நிலவர கூட்டங்களை சிலமுறை மம்தா புறக்கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.