ஐ.பி.எல். கிரிக்கெட்: பெங்களூருவை பழிதீர்க்கும் முனைப்பில் ராஜஸ்தான்..!!

புனே, 
8 ஆட்டங்களில் விளையாடி 5-ல் வெற்றி, 3-ல் தோல்வி என்று 10 புள்ளிகளுடன் உள்ள பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, முந்தைய ஐதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் 68 ரன்னில் சுருண்டு படுதோல்வி அடைந்தது. இந்த சீசனில் ஒரு அணியின் மோசமான ஸ்கோர் இது தான். 

விராட் கோலி தொடர்ந்து 2 ஆட்டங்களில் ‘டக்-அவுட்’ ஆகி இருப்பது கடும் விமர்சனத்திற்குள்ளாகி இருக்கிறது. இதே நிலை நீடித்தால் அவரது இடத்துக்கு ஆபத்து வந்து விடும் என்பதால் கூடுதல் கவனமுடன் ஆட வேண்டியது அவசியமாகும். இதே போல் மேக்ஸ்வெல், தினேஷ் கார்த்திக், கேப்டன் பிளிஸ்சிஸ், ஷபாஸ் அகமது உள்ளிட்டோரும் ரன்மழை பொழிந்தால் தான் எதிரணிக்கு கடும் சவால் அளிக்க முடியும்.
முன்னாள் சாம்பியனான ராஜஸ்தான் ராயல்ஸ் 7 ஆட்டங்களில் ஆடி 5 வெற்றி, 2 தோல்வியுடன் 10 புள்ளிகள் எடுத்து பட்டியலில் 3-வது இடம் வகிக்கிறது. கொல்கத்தா, டெல்லி அணிகளுக்கு எதிராக தொடர்ந்து 200 ரன்களுக்கு மேல் குவித்து பிரமாதப்படுத்திய ராஜஸ்தான் அணியில் ஜோஸ் பட்லர் உயிர்துடிப்பாக உள்ளார். 7 ஆட்டங்களில் 3 சதம், 2 அரைசதம் உள்பட 491 ரன்கள் திரட்டியுள்ள பட்லர் அதே உத்வேகத்துடன் வரிந்து கட்டுவார். 
அவர் தான் பெங்களூரு பவுலர்களின் பிரதான குறியாக இருப்பார். தேவ்தத் படிக்கல், ஹெட்மயர், கேப்டன் சஞ்சு சாம்சனும் பார்மில் உள்ளனர். பந்து வீச்சில் யுஸ்வேந்திர சாஹல் (18 விக்கெட்), அஸ்வின், டிரென்ட் பவுல்ட், பிரசித் கிருஷ்ணா மிரட்டுகிறார்கள். ஏற்கனவே தொடக்க லீக்கில் பெங்களூருவிடம் 4 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த ராஜஸ்தான் அணி அதற்கு பழிதீர்க்கும் வேட்கையுடன் ஆயத்தமாகிறது. 
இன்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் வெற்றி பெற்றால் புள்ளி பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறி விடும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.